பாராளுமன்றக் கலைப்பா? 20 ஆவது திருத்தமா? எதிர்க்கட்சியே தீர்மானிக்க வேண்டும்
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு ஐக்கிய தேசியக்கட்சியே முதலில் வலியுறுத்தியது. எனினும் எமது சிறுபான்மை அரசாங்கம் நீடித்திருப்பதற்கு ஐ.ம.சு.மு.வே காரணம். அந்த வகையில் பாராளு மன்றம் கலைக்கப்படவேண்டுமா அல்லது 20 வேண்டுமா என்பதை எதிர்க்கட்சியே தீர்மானிக்கவேண்டும்.
எந்த தீர்மானத்துக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். எந்த அச்சமும் எமக்கில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேராவினால் விடுவிக்கப்பட்டிருந்த கூற்று தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பியான தினேஸ் குணவர்த்தன சிறப்புரிமைப்பிரச்சினைன ஒன்றை எழுப்பினார்.
மேற்படி சிறப்புரிமை பிரச்சினையானது சபைக்குள் சர்ச்சை நிலையை உருவாக்கியிருந்தது. இது தொடர்பில் ஆளும்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் எழுந்ததுடன் கூச்சல் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது.
தினேஸ் குணவர்தன
முன்னதாக கேள்வியெழுப்பிய உறுப்பினர் தினேஸ் குணவர்தன கூறுகையில்,
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு அதில் 100க்கும் அதிகமான உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்ற நிலையில் மேற்படி பிரேரணையை வாபஸ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேராவினால் ஊடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஜனாதிபதியை சந்தித்து பேசியபோதிலும் இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுவது தொடர்பில் எதுவும் கூறவில்லை. அப்படியானால் இது பிரதியமைச்சரினால் கூறப்பட்ட உண்மைக்கு புறம்பான கருத்தாகும். இதன்மூலம் எமது உறுப்பினர்களது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்றார்.
பொய்யான கூற்று-ஜீ.எல்
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜீ.எல் பீரிஸ் கூறுகையில்,
அஜித் பி.பெரேராவினால் கூறப்பட்டது பொய்யான கூற்றாகும்.அதில் உண்மை கிடையாது. இங்கு மிக முக்கியமானதாக பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்ற காரணமே உள்ளது.
தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையானது நாட்டில் முக்கிய பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிரானதாகும். ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் சிறந்ததாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றம் ஏற்கவேண்டும். இல்லயேல் அதனை நிராகரிக்கவேண்டும். ஏனெனில் இப்பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும். ஆனாலும் அது குறைந்து செல்வதையே அவதானிக்க முடிகிறது. அதற்கேற்ற வகையில்தான் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேராவின் கூற்று அமைந்துள்ளது என்றார்.
தனிப்பட்ட குரோதத்துக்கான பிரேரணையாக வரவில்லை-பந்துல
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகையில்,
நம்பிக்கையில்ல பிரேரணை எனும்போது அது பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையாகும். அந்த வகையிலேயே மேற்படி பிரேரணை சபாநாயரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இப்பாராளுமன்றம் நிதி விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கையாளுகின்ற நிறுவனமாகும். இங்கு பிரச்சினை ஒன்று உள்ளது. அப்பிரேரணையானது பிரதமர் பதவிக்கு எதிரானதே தவிர, தனிப்பட்ட நபருக்கு எதிரானதல்ல என்றார்.
பொதுத்தேர்தலை நடத்துங்கள்-விமல்
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைந்த புதிய அரசாங்கமானது 100 நாள் வேலைத்திட்டத்துக்கான அரசாங்கமாகவே அமைக்கப்பட்டது. எனினும் 200 நாள் கடந்தாலும் பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது புரியாதுள்ளது.
100 நாட்களுக்காக அனுமதிகோரி இவ்வாறு நாட்களை கடத்துவது. மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்கு தார்மீகமானதல்ல. அதேபோன்று பிரதமரும் மக்கள் ஆணையின் பிரகாரம் நியமிக்கப்பட்டவரல்ல. எனவே பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றார்.
உங்கள் தலைவருக்கு கட்டுப்படுங்கள் இல்லையேல் எனக்கு ஆதரவளியுங்கள் -ரணில்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூற்றுக்களை அவதானித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியை சேர்ந்த உறுப்பினர்கள் மகிந்தவுக்கு பணியாற்றுவதை விடுத்து உங்களது தலைவருக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அது முடியாவிட்டால் எனக்கு ஆதரவளித்து என்னோடு இணைந்து செயற்படுங்கள் என்று கூறினார் .
பிரதமர் மேலும் கூறிகையில்,
பிரதியமைச்சர் அஜித் பி.பெரேராவினால் கூறப்பட்ட கூற்று உண்மையா? உண்மைக்கு புறம்பானதா? என்பது குறித்து எனக்கு தெரியாது. இக்கூற்று தவறு எனில் அது தவறு என உறுப்பினர் தினேஸ் குணவர்தனவினால் சுட்டிக்காட்ட முடியுமே தவிர அவர் கூற்றினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கு எந்த பாதகமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதை தினேஸ் குணவர்தன உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
இப்போது இருப்பது சிறுபான்மை அரசாங்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச இந்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் செயற்பட்டு கொண்டிருப்பதை விடுத்து முன்னணியின் தலைவருக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்கின்றேன். இல்லாவிட்டால் எனக்கு ஆதரவளித்து செயற்படுங்கள்.
பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு முதலில் வலியுறுத்தியது ஐக்கிய தேசியக்கட்சிதான். ஆனாலும் எமது சிறுபான்மை அரசாங்கம் நீடித்து செல்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே காரணமாகும். எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் எமக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது.
எனினும் இங்கு இருபதாவது திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த வகையில் பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பாராளுமன்றத்தில் செயற்பட முடியும்.
எப்படி இருப்பினும் 20 வது திருத்தம் கொண்டு வரப்பட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இடமளிக்க முடியாது. மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையானாலும் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதானாலும் நாம் எதற்குமே தயாராகவே இருக்கின்றோம் என்றார்.