விவாதத்துக்கு வருமாறு மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதியமைச்சர்
பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிக்க வருமாறு கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவிடம், பந்துல குணவர்த்தன சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஹர்ஷா டி சில்வா ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாதிக்கவருமாறு முன்னாள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்சவுக்கு, பதில் சவால் விடுத்திருக்கிறார் ரவி கருணாநாயக்க.
பந்துலவின் சவாலை ஏற்றுக் கொண்டது கோட்பாட்டு ரீதியாகவேயாகும். ஆனால் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒருவருடன் விவாதம் நடத்தப்பட வேண்டியதே பொருத்தமானது. எனவே முன்னைய நிதி அமைச்சரான மகிந்த ராஜபக்சவை நான் விவாதத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.
தற்போதைய பொருளாதாரக் கொள்கையை மகிந்த ராஜபக்ச பிரதானமாக விமர்சிக்கிறார். முன்னைய அரசாங்கத்தில் பொருளாதார நிலைமைகள், எவ்வாறு இருந்தன என்பது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் விவாதிக்க விரும்புகிறேன். 12 ஆண்டு கால ஆட்சியில், அரசியல் குறுக்கீடுகளும், தவறான முகாமைத்துவமும், தான் பொருளாதாரத்தை சீரழித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைப் பற்றியும் பொருளாதாரத்தைப் பற்றியும் கவலைப்படுபவராக இருந்தால் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு மகிந்த ராஜபக்ச இந்த பிரச்சினைகள் குறித்து பதிலளிக்க முன்வர வேண்டும். இதனை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது போனால் தனது ஊதுகுழலான பந்துல குணவர்த்தனவையாவது விவாதத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.