இணைப்புக் குழுவை கூட்டுமாறு சம்பந்தனிடம் கோரிக்கை!
எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு தலைவர் இரா.சம்பந்தனுக்கு மூன்று கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ, புளொட் ஆகிய அமைப்புக்களே இவ்வாறு கோரியுள்ளன. இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
பாராளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற சூழல் உள்ளது. இந்தநிலையில் தேர்தல் வேலைகளை ஐக்கிய தேசியக் கட்சி போன்றவை ஏற்கனவே தென் பகுதியில் ஆரம்பித்துவிட்டன. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடி எதனையும் பேசவில்லை.
நாம் பல விடயங்களைப் பேச வேண்டியுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பு சார்பாக எவ்வாறு வேட்பாளர்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்ளவது என்பது குறித்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் விரிவாகப் பேசவேண்டியுள்ளது.
எனவே அதன் முன்னோடியாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் , டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சி பிரதிநிதிகள் கூடி பேசி அதன்பிரகாரம் ஒரு வாரத்துக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழுவைக் கூட்டி பேசுமாறு நாம் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
இதுகுறித்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் சம்பந்தனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, எனக் கூறியுள்ளார்.