ஐ.ம.சு.மு.தலைமையிலிருந்து ஜனாதிபதி உடன் விலகவேண்டும்! குற்றஞ்சாட்டுகிறார் வாசுதேவ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படுவதென்றால் மைத்திரிபால சிறிசேன உடனடியாக கட்சித் தலைமைப்பதவியை துறக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் ஜனாதிபதியை சமாளித்து செயற்படுவதே எமக்கு பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியன் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிடுகையில்;
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை வீழ்த்தி மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியை கொண்டுவரவே நாம் முயற்சிக்கின்றோம். மேற்கு உலக நாடுகளின் தேவைக்கு ஏற்ப செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கை இலங்கைக்கு பொருந்தாது. நாட்டை பிரித்து மீண்டும் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் அனைவரினது செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களில் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம் மந்தமான நிலையில் செல்கின்றது. விலை குறைப்பு, மக்களுக்கான நிவாரண சலுகைகள் என அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் இன்றுவரை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே உள்ளன.
மக்கள் எந்தவித சலுகைகளையும் அனுபவிக்காது கஷ்டப்படுகின்றனர். மீண்டும் நாட்டில் இனவாதம் தலை தூக்கியுள்ளது. வடக்கில் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல், சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் என பல சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. ஏன் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கில் குற்றச் செயல்கள் குறைவடைந்திருந்தது. இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும். ஆனால் ஆட்சி மாற்றத்துடன் வடக்கின் நிலைமைகள் மாற்றமடைந்து விட்டன. பாதுகாப்பு செயற்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன. வடக்கில் பாதுகாப்பு வலையங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளன. சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவே வடக்கை அரசாங்கம் தாரைவார்த்துள்ளது.
அதேபோல் இனவாத செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளன. மோசடிகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கே தலைவர். ஆனால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த முயற்சிப்பதன் நோக்கம் என்ன?
இவ்வாறு செயற்படுவதென்றால் உடனடியாக ஜனாதிபதி தனது கட்சி தலைமை பதவியை துறக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் மீண்டும் புதிய ஆட்சியை கொண்டுவர நாம் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படுகின்றார். கட்சிக்குள் பிரிவினையினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு ஜனாதிபதியிடமே உள்ளது. அவருடன் சேர்ந்துகொண்டு ஒருசிலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி கட்சியை சீரழிக்க முயற்சிக்கின்றனர். ஆகவே அதற்கு கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் இடம் கொடுக்கக் கூடாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எமக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அவரை சமாளிப்பதே கட்சிக்குள் சிக்கலாக உள்ளது. தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் என்றகொள்கையின் கீழ் நாம் பயணிக்க தயாராக இல்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் தனித்த ஆட்சி அமையப்பெற வேண்டும்.
அதை ஜனாதிபதி விளங்கிக்கொண்டு செயற்படுவதே நல்லது. அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் உறுப்பினர்கள் அதிகமாகவே உள்ளனர். கட்சியில் பெரும்பான்மை அதரவு மஹிந்தவிற்கே உள்ளது. அவ்வாறான நிலையில் அவரை நீக்கிவிட்டு கட்சியால் தனித்து பயணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.