மகிந்தவை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி! நாளை மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
காலி, கொழும்பு, புத்தளம் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரே நாளை ஜனாதிபதியால் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு அமைச்சர்கள் அண்மையில் வெளியேறிய பின்னர், ஐந்து புதிய அமைச்சர்களை நியமித்திருந்தார் ஜனாதிபதி.
இந்த நிலையில் மேலும் மூவரை பிரதி அமைச்சர்களாக அவர் நியமிக்கவுள்ளதாகவும், இதன் மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான அணியை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணிசமானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. தாம் உள்ளிட்ட பலர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை என்பதை, அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.