அமெரிக்காவின் தடைகளை மீறியதா இலங்கை?
அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில், ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட 10 பில்லியன் டொலர் பெறுமதியான ஒரு மில்லியன் பரல் எண்ணெயை ஏற்றிய பனாமா கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாக நேற்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கப்பலில் இருந்து எண்ணெய் இறக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தச் செய்தியை முற்றாக நிராகரித்துள்ளார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே.
இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “நாளிதழ் ஒன்றில் இந்தச் செய்தியை பார்வையிட்டோம். இது முற்றிலும் தவறானது. இலங்கை எப்போதுமே தடைகளை மதித்து நடந்து வருகிறது. பனாமா கொடி தாங்கிய எவ்-வேல் என்ற கப்பல், கடந்த 5ம் நாள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்தது.
இந்தக் கப்பல் ஈரானிய எண்ணெயை ஏற்றி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இந்தக் கப்பல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எண்ணெய் ஏற்றி வரவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும். இந்தச் செய்தி தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்