ரணிலை பாதுகாக்கவே பாராளுமன்றம் கலைப்பு
பிரதமர் ரணிலை பாதுகாக்கவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனாதிபதியும் ரணிலை மறைமுகமாக ஆதரிக்கின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் மக்கள் விட்ட வரலாற்றுத்தவறை இம்முறை நிவர்த்திசெய்து மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தேசிய அரசாங்கம் அமையப்பெற்ற பின்னர் நூறு நாட்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங் கம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இவர்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை கொண்டுசெல் லும் முயற்சியில் தான் இத்தனை காலமும் செயற்பட்டனர். நூறு நாட்கள் முடிவடைந்தவுடன்
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண் டும் என நாம் ஒவ்வொரு முறையும் தெரிவித்தோம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் செயற்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழல் செயற்பாடுகள் வெளிவர ஆரம்பித்து விட்டது. மத்திய வங்கி ஆளுநர் விடயத்திலும் ,நிதி அமைச்சரின் விடயத்திலும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் கோப் அறிக்கை வெளிவரயிருந்த நிலையில் இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்றம் கலைக்காதிருந்தால் இந்த வாரம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மற்றும் கோப் அறிக்கை வெளிவந்திருக்கும். ஆகவே இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதானது பிரதமர் ரணிலின் ஊழல்களை மறைப்பதற்காகவேயாகும். ரணிலை காப்பாற்றவே உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மறைமுகமாக ரணிலை காப்பாற்ற பார்க்கின்றார். ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு வட்டாரம் இந்த செயலில் ஈடுபடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்னவென்பது எமக்கு நன்றாகவே தெரியும். ஜனவரி மாதம் 8 ஆம் திகதியுடன் இந்த நாட்டில் பிரிவினை வாதத்துக்கான அடித்தளம் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைக்கு தனி நாட்டுக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுத்திக்கு அமையவே அவருடன் கைகோர்த்திருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள அரசியல் செவ்வியொன்றில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் வடக்கு கிழக்கு இணைந்த தாயக எண்ணத்திலேயே அவர்கள் ஜனாதிபதியுடன் கைகொர்த்துள்ளதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துக்கு இடையில் இரகசிய ஒப்பந்தங்கள் நடந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் புலம்பெயர் புலிகளை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு மாநாடு நடத்தும் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. விடுதலைப் புலிகளின் பணத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. அத்தோடு புலிகளின் தேவைக்காக இராணுவத்தை பழிவாங்கும் நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. வடக்கில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பலர் சிவில் புலிகளே ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிவில் இயக்கமும் இயங்கியுள்ளது. ஆகவே அவர்களை கொன்றமை மனித உரிமை மீறலாகாது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்து இராணுவத்தை சிறையில் அடைக்கும் முயற்சிகளை சர்வதேச புலிகள் ஆதரவு இயக்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் இதில் உள்ளது. ஆகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பாரிய தவறினை செய்துள்ளனர். நாட்டை தவறான பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை மக்கள் போட்டுவிடக்கூடாது.
எனவே கடந்த தேர்தலில் மக்கள் செய்த தவறை இந்தத் தேர்தலுடன் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மீண்டும் இந்த நாட்டுக்கான சிறந்த தலைவரை உருவாக்கி ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். மகிந்தவே இந்த நாட்டின் சிறந்த தலைவர். ஆகவே அவரை பிரதமராக்கி மீண்டும் நாட்டில் நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.