காணாமல்போன உறவுகளை தேடி அலையும் நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்துவது எவ்வாறு?
தமிழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும் தமது உறவுகள் எங்குள்ளனர் என்பது தெரியாமல் தமிழர்கள் தத்தளித்துக்கொண்டிருக்கையில் புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்துவது எவ்வாறு நியாயமாகும்?
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என வெள்ளியன்று சபையில் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் ஏமாற்றப்படும் இனமாகவே தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அரியநேத்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தமிழ் அரசியல் கைதிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகளும் அவர்களது குடும்ப அங்கத்தினர்களும் திருமலையில் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடு ஏதும் செய்தும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை.
இவ்வாறு தமிழ் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே பொருளாதார நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இங்கு அழைத்து விழா நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்கின்றது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
இன்று ஜனாதிபதி மாறியுள்ளார். அவ்வளவு தான் ஆட்சி. தொடர்ந்தும் தமிழர்களை ஏமாற்றும் ஆட்சியாகவே உள்ளது. ஆட்சியாளர்களின் மனநிலை மாறவில்லை. தமிழர்கள் தொடர்பான கொள்கைகள் மாறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். இன்றும் அதுவே தான் இடம்பெறுகின்றது.
நல்லாட்சிக்கு 168 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் தமிழர்களுக்கு நன்மையில்லை. புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்த முயற்சிக்கும் அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய 18 தமிழர்களை தடுத்து வைத்துள்ளது.
இவர்களை விடுதலை செய்வதற்காக எடுத்த முயற்சிகள் எதுவும் நிறைவேறவில்லை. இதுதான் தமிழர்களின் இன்றைய நிலை. யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் திட்டமிட்டு போதைப்பொருட்கள் மது விற்பனை அதிகரிக்கப்பட்டு தமிழ் சமூகம் சீரழிக்கப்படுகின்றது. 20 ஆவது திருத்தம் சிறுபான்மையின மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பறிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
மட்டக்களப்பில் நெல் அறுவடைக்காலம் நடைபெறுகின்றது. தற்போது அங்கு காட்டு யானைகளின் தொல்லைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.