சுசிலுடன் மஹிந்த அணி இன்று பேச்சு! பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் பனிப் போர் ஆரம்பமாகியுள்ளது. மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணியில் போட்டியிடும் தீர்மானத்தில் மஹிந்த ஆதரவு அணியினர் உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்றும் வேண்டுமானால் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்க முடியும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழுவில் 56 பேர் அங்கம் வகிக்கின்றனர் இவர்களில் 42 பேர் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனாலும் முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரி பால சிறிசேன திடமான முடிவில் இருப்பதனால் இவர்கள் மாற்று அணியாகவே போட்டியிட வேண்டிய நிலை தற்போது தோன்றியிருக்கின்றது.
இருந்தபோதிலும் மஹிந்த மைத்திரிக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவானது தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜூலை 1ஆம் திகதி நடைபெறும் கட்சியின் இறுதிக்கட்ட பேச்சுக்களில் தீர்மானிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் கட்சியின் மத்திய குழுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை ஒன்றினைத்து நடத்தப்படவிருக்கும் இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி நியமித்துள்ள ஆறுபேர் கொண்ட குழுவினர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பிலான தமது அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளனர். அதேபோல் கட்சியின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் இன்றும் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் குழுவின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சியின் அனைவரது ஆலோசனைகளையும் ஆராய்ந்தும், அதேபோல் கட்சியின் நிலைப்பாட்டினை தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி நாம் ஜனாதிபதியிடம் எமது அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளோம். கட்சிக்குள் பிளவுகள் இல்லாத வகையிலும், கட்சியை ஒன்றிணைக்கும் வகையிலுமே நாம் கடந்த காலங்களில் ஆராய்ந்தோம்.
ஆகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த நாளை(இன்று) நாடு திரும்பியவுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது. அதேபோல் எதிர்வரும் 1ஆம் திகதி ஜனாதிபதியுடனான பேச்சுவாத்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சிகளை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
சுசிலுடன் மஹிந்த அணி இன்று சந்திப்பு
இந்நிலையில் மஹிந்த ஆதரவுக் கூட்டணியினர் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்தவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். பிரதமர் வேட்பாளர் தொடர்பில் சுசில் தலைமையிலான குழுவினர் தீர்மானம் எடுத்து வரும் நிலையில் மஹிந்த ஆதரவுக் குழுவினர் இந்த சந்திப்பை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் தேவையான அளவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இனிமேல் எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு தான் மஹிந்த தேவைப்படுகின்றார்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை களமிறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எம்மிடம் இரண்டாவது திட்டம் ஒன்று உள்ளது. முதலாவது திட்டத்தை விடவும் இரண்டாவது திட்டமே இப்போது மஹிந்த ஆதரவுக் குழுவின் ஒருமித்த ்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை களமிறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எம்மிடம் இரண்டாவது திட்டம் ஒன்று உள்ளது.
முதலாவது திட்டத்தை விடவும் இரண்டாவது திட்டமே இப்போது மஹிந்த ஆதரவுக் குழுவின் ஒருமித்த விருப்பமாக உள்ளது. இம்முறை நாம் மஹிந்த தலைமையிலான கூட்டணியின் பொதுச் சின்னத்தில் தான் தேத்தலில் போட்டியிடவுளோம். இந்த முடிவில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டார்.