எம்மை நாமே ஆள வேண்டும் அதுவே எமது இலட்சியம் - யாழில் மாவை தெரிவிப்பு
எமது தாயகத்தில் எம்மை நாமே ஆளவேண்டும் என்பதே எமது இலட்சியம் என தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர் நலனில் சர்வதேசம் அக்கறை கொண்டிருக்கின்ற நிலையில் அதனை இராஜதந்திர ரீதியாக பயன்படுத்தவேண்டும் என்றும் கூறி னார். எமது இலட்சியத்திற்கான பயணங்கள், போராட்டங்கள் மாறுகின்ற போதும் இலட்சியம் மாறாது என குறிப்பிட்ட அவர்,
தமிழ்மக்கள் தமது ஜனநாயகப்பலத்தினை நிரூபிப்பதன் ஊடாகவே அதனை விரைவாக அடையமுடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளைக் காரியாலயம் நேற்றைய தினம் வட்டக்கோட்டை அத்தியடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழர்களின் ஜனநாயக போராட்டங்கள் நிராகரிக்கப்பட்டு அடக்கியொடுக்கப்பட்டபோது ஆயதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வந்திருந்தது. உலகத்தின் பல பாகங்களில் ஜனநாயகப்போராட்டங்களினாலும், ஆயுதப்புரட்சிகளாலும் புதிய நாடுகள் உருவாகியிருக்கின்றன. அவை சுதந்திர நாடுகளாக மாற்றமடைந்து ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகித்து வருகின்றன.
எமது இனத்தின் விடுதலைப்போராட்டத்திற்கான பயணத்தில் ஆயிரமாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டிருகின்றன. எமது தலைவர்களைக் கூட அவ்வாறான போராட்டத்திலேயே இழந்திருக்கின்றோம். எத்தனையோ பொதுமக்கள் தமது உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். எமது தயாகம் கட்டியெழுப்பட்டு எமது ஆட்சி உருவாக வேண்டும் என்பதையே தந்தை செல்வா அவர்கள் அனைவருடைய உள்ளத்திலும் விதைத்துச் சென்றுள்ளார். இத்தனை இழப்பக்களையும், அர்ப்பணிப்பக்களையும் தியாகங்களையும் கடந்து எமது சமுகத்தின் அடிநாதமாக அதுவே இன்றும் காணப்படுகின்றது.
ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்தது மட்டுமன்றி விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் எனக் கூறினார். வரலாற்றில் தோற்றுப்போன சமூகம் எம்மைப் பார்த்துக் கூறினார். அதற்கு பின்னர் அவர் வடக்கு கிழக்கிலே ஒருபோதும் வெற்றியடையாதவாறு எமது மக்கள் தக்க படிப்பினையை வழங்கியிருகின்றார்கள். எம்மை நாம் ஆளுவதற்காக எங்களை விலைகொடுத்தவர்கள் என்பதை அழுத்தமாகக் கூறியிருகின்றார்கள்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக மார்பு தட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முள்ளுக்கம்பிகளுக்குள் முகாம்களில் நசுக்கப்பட்ட எமது மக்களை மக்களை பார்ப்பதற்கு கூட அனுமதியை மறுத்தார். எமது நிலங்களை அபகரித்து இன அடையாளத்தை இல்லாமல் செய்வதற்கான பல நடவடிக்கைகளை எமது சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விட்டார். எவ்வளவு அடக்கு முறைகளுக்குள் எமது மக்கள் நசுக்கப்பட்டாலும் பேரழிவுகளுக்கு முகங்கொடுத்தாலும் எமது தேசத்தின் தந்தை காட்டிய அந்த வீட்டுச் சின்னத்துக்கே வாக்களித்து வந்திருக்கின்றார்கள்.
பண்ணாகம் மெய்கண்டான் மண்டபத்தில் நடைபெற்ற பாரிய மாநாட்டிலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எம்மை நாமே ஆளவேண்டும். இழந்த சுதந்திரத்தை மீளப்பெறவேண்டும். சுயநிர்ணய உரிமை எமக்குள்ளது என்பது இன்றும் எமது இதயங்களிலிலே வாழ்ந்துகொண்டுதான் உள்ளது. மாறிவரும் சூழலில் அந்த இலட்சியத்திற்கான பயணத்தின் வடிவங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அடிப்படையில் எமது இலக்கு அதுவாகவே உள்ளது என்பதை எம்மால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போத வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி கொண்டார்கள். அடக்கு முறை, சர்வாதிகாரம், ஊழல் மோசடி நிறைந்த நயவஞ்சக ஆட்சிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று திரண்டு மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பினார்கள். எம்மை தோற்றுப்போனவர்கள் என கூறியவரை, எம்மை அடக்கி எமது அடையாளங்களை மாற்றியமைக்கவேண்டும், எமது இருப்பை ஒழிக்க வேண்டும் என திட்டமிட்டவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். இன்று பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுவார்களாக என்ற அச்சத்தில் வீட்டில் இருந்தாலும் சிறைக்குள்ளே இருக்கும் நிலையிலேயே உள்ளார்கள்.
ஆயுதமில்லாமல் ஜனநாயக ரீதியாக இந்தப் புரட்சியை தமிழ் மக்கள் நிகழ்த்தியிருக்கின்றார்கள். இந்த நாட்டில் அக்கறைகொண்டதும், ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரமும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பலன்கள் எமக்கு உடனடியாக கிடைக்காது விட்டாலும் நல்லெண்ணச் சூழலொன்று உருவாகியுள்ளது. நூறுநாட்கள் திட்டம் அறிவிக்கப்பட்டு ஆறுமாதங்கள் கடந்த போதும் பல்வேறு விடயங்கள்தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வௌியிலும் முன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டாலும் எம்மை நாமே ஆளவேண்டும் என்ற இலட்சியம் , கொள்கை ஆகியவற்றுக்காக எமது ஜனநாக சந்தர்ப்பங்களை நாம் சரியாக பயன்படுத்தவேண்டும். சர்வதேச நாடுகள் தமிழர்கள் சார் நலனில் அக்கறை கொண்டுள்ளன. அதில் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆகவே எமது ஜனநாயக பலத்தை உறுதி செய்து சர்வசேத்தின் அக்கறையை தூக்கியெறியாது இராஜதந்திர ரீதியில் வெற்றி பெறுவதன் மூலமே எமது இலட்சியத்தை எட்டமுடியும் என்றார்.
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமமாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.