புலிகள் உட்பட தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்கள் குறித்து டக்ளஸ் கரிசனை
முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில், உரிய பொறிமுறையின் ஊடான திட்டமொன்று வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அக்கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் புலிகள் இயக்கம் உட்பட ஏனைய தமிழ் இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்ட இளைஞர், யுவதிகள் பலர் உரிய கல்வி மற்றும் ஏனைய தகுதிகள் இன்மை காரணமாக அரச வேலைவாய்ப்பற்றும் வேறு தொழில் வாய்ப்புகள் இன்றியும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் தங்களது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் வகையில் உதவிகளை செய்யுமாறு என்னிடம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த அரச காலத்தின்போது இவர்களில் ஒரு சாராருக்கு சுய தொழில் ஏற்பாடுகளின் மூலம் என்னால் உதவ முடிந்துள்ள போதிலும் ஓர் உரிய பொறிமுறையின் கீழ் இவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படல் அவசியமாகும்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது