நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கோத்தா
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அரசியலில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர், அரசியலில் நுழைவது தொடர்பாக தாம், ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ”பல்வேறு காரணங்களுக்காக, சிலர் என்னை அரசியலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.
நான் விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன். ஆனால், இன்னமும் எந்தக் கட்சியின் ஊடாக அரசியலுக்கு வருவதென்பது குறித்து தீர்மானிக்கவில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதே எனது பிரதான நோக்கம். பாதுகாப்புச் செயலராக, ஒரு அரசாங்க அதிகாரியாக, அதைச் செய்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டுக்குச் சேவையாற்ற இன்னொரு சந்தர்ப்பம் கிட்டினால், அதைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச தமது கட்சியின் ஊடாக அரசியலுக்கு வரலாம் என்று, அபே ஜாதிக பெரமுன என்ற கட்சியின் தலைவரும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலருமான கப்டன் சேனக ஹரிப்பிரிய தெரிவித்துள்ளார்.