தேசிய அரசுக்கு நாடாளுமன்றில் விழுந்தது முதல் அடி! வங்குரோத்து நிலையில் திறைசேரி?
நிதி நெருக்கடியைச் சமாளிக்க உள்நாட்டில் திறைசேரி உண்டியல் மூலம், மேலதிகமாக 400 பில்லியன் ரூபா வரையிலான கடனைத் திரட்டும், அரசாங்கத்தின் முயற்சி, நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.
திறைசேரி உண்டியல் மூலம் நிதிதிரட்டுவதற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 850 பில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, 400 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்காக, உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையை புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தது.
இந்த திருத்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற போது அதற்கு ஆதரவாக, 31 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர். ஜேவிபி, ஜனநாயக தேசிய முன்னணி, ஆகியவற்றின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. அத்துடன், வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கூட சபையில் இருக்கவில்லை. அரச பணியாளர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியம் போன்றவற்றைச் செலுத்துவதற்காகவே மேலதிக கடனைத் திரட்டவுள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது.
இந்தநிலையில், திறைசேரியை தற்போதைய அரசாங்கம் வற்ற வைத்து வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்று விட்டதாகவும், அதனாலேயே, மேலதிக கடன்களை திரட்டவுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
நேற்று அரசாங்கத்தின் பிரேரணை தோல்வியடைந்ததையடுத்து, தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார். அதேவேளை, எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பதாக நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
திறைசேரி உண்டியல் மூலம் கடன் திரட்டும் எல்லையை மேலும் விரிவாக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி கண்டிருப்பது, நாட்டில் பாரிய நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்குப் பெரும் தோல்வியாக கருதப்படுகிறது.