Breaking News

மகிந்தவை ஈழத் தமிழர்கள் வீழ்த்த வேண்டும் - ராமதாஸ்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச வீழ்த்தப்பட வேண்டும். ராஜபக்ச தப்பிக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்களான ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனா ஆகிய இருவருமே தமிழர் நலனுக்கு எதிரானவர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இலங்கைப் போரில் அப்பாவி தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை கொடூரமாக படுகொலை செய்ததுடன், மீதமுள்ள தமிழர்களை இன்றளவும் வாழ விடாமல் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கும் கொடியவன் தான் ராஜபக்சே. சிறிசேனா 3 மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்சே அரசில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்து, அனைத்துக் குற்றங்களுக்கும் துணை போனவர் தான்.

யாழ்ப்பாணக் கூட்டத்தில் பேசும் போது, தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான என்னை ஆதரியுங்கள் என்று கூறினார். இதன் மூலம் தாம் யார் என்பதை ராஜபக்சே உணர்த்தியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை ஈழத் தமிழர்கள் வீழ்த்த வேண்டும்.

தேர்தலில் வீழ்த்தப்படுவது மட்டுமே அக்கொடியவனுக்கு தண்டனையாகி விடாது. தமிழர் வாழும் பகுதிகளில் பரப்புரை செய்த போது, இனப்படுகொலையில் தமக்கு உள்ள பங்கு குறித்து மறைமுகமாக இராஜபக்சே கூறியதையெல்லாம், அவரது வாக்குமூலமாக கருதி, அவரை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்கான பணிகளை இலங்கையில் அமையவுள்ள புதிய அரசுடன் இணைந்து இந்தியாவும் , உலக சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால், ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல இராஜபக்சே திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிருக்கின்றன.

தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சே தப்பிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, புதிய அதிபர் பதவியேற்ற பிறகாவது, ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், இனப் பிரச்சினைக்கு அவர்கள் விருப்பப்படி தீர்வு காணும்படியும் இலங்கையில் அமையவுள்ள புதிய அரசுக்கு இந்திய அரசும், சர்வதேச சமுதாயமும் அனைத்து வழிகளிலும் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.