இலங்கை தேர்தல் குறித்து ஐ.நா கரிசனை
இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அரசாங்கம் காத்திரமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக், இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் வன்முறைகள் தொடர்கின்றன. எனவே அங்கு நல்லிணக்கம் அவசியமானது. அத்துடன் அரசாங்கம் நியாயமான தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதன்போது சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் தேவை என்றும் துஜாரிக் குறிப்பிட்டார். இதேவேளை நியாயமான தேர்தல் ஒன்றுக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.