சனிக்கிழமை இறுதி முடிவு-ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கா அல்லது பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா ஆதரவளிப்பது என்ற விடயத்தில் இன்னும் தீர்க்கமான முடிவு எட்டப்படாத நிலையே தொடர்ந்து வருகின்றது.
முஸ்லிம்கள் தொடர்பாக அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் குறிப்பாகத் தனிக் கரையோர மாவட்டம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருவதாகவும் இதற்கு அரச தரப்பில் இருந்து சாதகமான சமிக்ஞைகள் கூறி கட்சித்தலைமை காலத்தை நீடித்து வருகின்றது.
இந்த நிலைப்பாடு கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்துடன் மக்கள் விருப்பப்படி அரசிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்றுப் புதன்கிழமை கட்சியின் உயர் மட்ட சந்திப்பின்போது வரும் சனிக்கிழமை வரை காத்திருந்து அதன் பின்னர் முடிவு எடுக்கலாம் என கட்சியின் தலைவர் இறுதியாகவும் - உறுதியாகவும் தெரிவித்தாராம். இதேவேளை கட்சித் தலைவரின் முடிவுக்காகக் காத்திராமல் பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்போகிறோம் எனக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அம்பாறையில் கூடவிருந்த செய்தியறிந்தே ரவூப் ஹக்கீம் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரிகின்றது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு என்னவென்று இன்னமும் தெரியாத நிலையில் நாம்ஏன் அவசரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.