யாழில் தடைசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கூட்டமாக மாறியது
பின்னான காலப்பகுதியில் 84 ஆயிரம் விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதன் மூலம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் போரின் போது 84 ஆயிரம் திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இரண்டு லட்சம் இராணுவம் உள்ளது.
அதில் வடக்கில் 1 1/2 லட்சம் இராணுவத்தினர் இங்கு நிலை கொண்டுள்ளனர். ஆனால் வடக்கு மாகாணத்தில் பத்து லட்சம் மக்கள் தான் இருக்கின்றார்கள். இதனை வைத்து பார்த்தீர்களானால் புரியும் நாம் இராணுவ ஆட்சிக்குள் அகப்பட்டிருக்கின்றோம். அதேவேளை வடக்கு கிழக்கில் போரின் பின்னரான காலத்தில் அரசினால் பெறப்பட்ட புள்ளிவிபரத் தகல்களின்படி 84 ஆயிரம் விதவைகள் உள்ளனர்.
அப்படியென்றால் போரின் போது வடக்கு கிழக்கில் 84 திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. மேலும் யாழ் மாவட்டத்தில் ஏறத்தாள 50ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் மீள குடியேற்றப்படவேண்டியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மீனவ சமுகத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லவிடாது அவர்களது நிலங்களை அரசாங்கம் கபளீகரம் செய்துகொண்டு தனது உடமை என்கிறது என தெரிவித்தார். யாழில் ஆர்ப்பாட்டம் கூட்டமாக மாறியது யாழ்ப்பாணத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்று அவ்வமைப்பினர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை 10 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை யாழ். பஸ் நிலையத்துக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்திருந்தது. அத்துடன், ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு பேரணியாகச் சென்று அங்கு மனு ஒன்றையும் கையளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என நீதிமன்றில் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்த கூடாது என்று யாழ். நீதிவான் நீதிமன்று நேற்று தடை விதித்தது. இதனையடுத்து, தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையினர் இன்று கண்டனக் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியை சேர்ந்த பாஸ்கரா மற்றும் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுடன் உள்ளூர் மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.