மரணித்தவர்களின்; நினைவாக முதல்வர் தலைமையில் மரநடுகை
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில்
ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (01.11.2016) கிளிநொச்சியில் நடைபெற்றது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் மரங்களைத் தெய்வங்களாகப் பூசித்தவர்கள். உருவ வழிபாடு ஆரம்பித்தபோது,அந்த மரங்களுக்குக் கீழே தெய்வங்களை இருத்திஅம்மரங்களைத் தெய்வங்களுக்கு நிழல் தரும் குடையாக மாற்றினார்கள். அந்தப் பண்பாட்டின் எச்சமாகவே இன்று புளியடி வைரவர், மருதடிப் பிள்ளையார், அழிஞ்சில் பிள்ளையார் என்று மரத்தின் பெயரால் தெய்வங்களை அழைக்கிறோம். அதேபோன்று இறந்தவர்களின் நினைவாக மரங்களை நட்டு வணங்குவதும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறாக உள்ளது. தமிழ்நாட்டில்,சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் வாழுகின்ற பழங்குடியினர் இறந்த உறவுகளின் நினைவாக மரங்களை நட்டு அந்த மரங்களை அம்மா, அப்பா, அக்கா என்று உறவுமுறையில் பெயரிட்டு அழைத்து வருகிறார்கள்.
மரங்களைத் தெய்வங்களாகப் பூசிப்பதும், மரங்களை இறந்தவர்களின் நினைவாக நட்டு வணங்குவதும் தமிழர் பண்பாட்டில் உணர்வுபூர்வமான அணுகுமுறை.2013ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி நாங்கள் மரங்களை நடுகை செய்திருந்தோம். அன்றிரவு எங்கள் வீடுகள் தாக்கப்பட்டன. அதன்பின்னரே, மரங்களை நடுகை செய்வதும், அதனை இறந்தவர்களின் நினைவாகச் செய்வதும் எங்களின் உரிமை என்பதை நிலைநாட்டும் பொருட்டு வடமாகாண மரநடுகை மாதத்தைப் பிரகடனப்படுத்தி மரநடுகையை முன்னெடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், இ.ஆர்னல்ட், வே.சிவயோகன், க.தர்மலிங்கம், க.சிவாஜிலிங்கம், ம.தியாகராசா, இ.இந்திரராசா, வ.கமலேஸ்வரன், ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் சு.அருமைநாயகம் ஆகியோருடன் பல்வேறு திணைக்களங்ளைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரு மரக்கன்றுகளும், பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்