வடக்கு அமைச்சரொருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! - சி.வி போட்டுடைப்பு
வடக்கு மாகாண அமைச்சர்களில் ஒருவருக்கு எதிராக சில உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான திட்டத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போட்டுடைத்துள்ளார். நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே குறித்த தகவலினை முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி இடம் பெறவுள்ள மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண அமைச்சர்களில் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு வடக்கு மாகாண உறுப் பினர்களில் சிலர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டுள்ளதோடு, தமது செயற்பாட்டிற்கு ஏனைய உறுப் பினர்களிடம் ஆதரவு கோரும் நடவடிக்கைகளும் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதுக்குடியிருப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற புது வசந்தம் தையல் நிலையம் திறப்பு விழாவில் உரையாற்றும் போது, தனது உரையில் மேற்கண்ட தகவலை வெளிப்படுத்தி உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தகவல்கள் கசிந்த நிலை யில் முதலமைச்சரது உரை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
மேற்படி நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றுகையில்,
எமது அரசியலுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களை எப்படி சராசரி மனிதர்களாக சமுதாயத் தில் ஓர் அங்கமாக அவர்களை மாற்றலாம் என்றே அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாங்கள் எவரும், எல்லோரும் கொண்டுவரும் பொருளாதார முன்மொழிவுகளை உடனே ஏற்றுக்கொள்ளமாட்டோம். எமது கருத்துரையாளர்களின் கருத்தறிந்தே இதைச் செய்கின்றோம்.
இதனால் எம்மால் பலவிதமான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.உதாரணத்திற்கு ஒரு சிங்கள நபர் இதுவரை கை விடப்பட்ட நிலையில் இருந்த ஆலையொன்றினைத் தனக்குத் தருமாறு கோரியிருந்தார்.
உண்மையில் எமது கூட்டுற வுச் சங்கமொன்று அதனை நடத்தப் போதிய வசதி இல்லாததாலேயே அவ்வாலை பூட்டிக்கிடந்தது. நாங்கள்; எமது திணைக்களம் ஒன்றினால் அதனை ஏற்று செயலாக்க முன்வந்த போதே மேற்படி நபர் அதனைக் கோரினார்.
நாங்கள் மறுத்ததால் அவர் எமது ஆளுநரைச் சந்தித்து கைவிடப்பட்ட நிலையில் ஆலைகள் பல உண்டு அவற்றை எடுத்து நடத்தவும் வட மாகாணசபைக்கு முடியவில்லை, நாங்கள் கேட்டாலும் தருகின்றார் கள் இல்லை என்று முறைப்பாடு செய்தார். இதனால் ஆளுநர் அதைப் போய்ப் பார்த்துவிட்டு பரிசீலித்து விட்டு கைவிடப்பட்ட சகல கைத் தொழில் ஆலைகளையும் நாம் தனியாருக்காவது கொடுத்து நடத்த முன் வரவேண்டும் என்றார். இவ்வாறு தான் பல விமர்சனங்களுக்கு நாங்கள் முகங்கொடுத்து வரகின்றோம்.
அதே நேரத்தில் எமது மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறு பிள்ளைத்தனமான பல நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றார்கள். எமது அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதாவது இருந்தால் எழுத்தில் ஆதாரத்துடன் தந்தால் உடனே உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்று கூறிய பின்னரும் சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவரத் தயாராகின்றார்கள்.
ஒருவரின் குற்றங்கள் கையு யர்த்தி ஏற்கப்படும் விடயங்கள் அல்ல. தாருங்கள் நான் உரிய வர்களைக் கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என் றால் எதையும் என்னிடம் கையளிக்காமல் சபையில் சாட விரும்புகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள்.
பல நன்மைகளை எதிர் பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர் மறை யான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள்.
எங்கோ ஒரு தேசத்தில், அந்த நாட்டில் கடும் குளிரின் மத்தியி லும் இரவு பகலெனப் பாராது தமது உடலை வருத்தி உழைக்கின்ற சில அன்பு உள்ளங்களால் கல்வி அபிவிருத்தி, பின்தங்கிய வடக்கு கிழக்கு மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கான தையல் நிலையம் என இன்னோரன்ன உதவிகளை ஆற்ற முடியுமானால் நாம் எமது பங்கிற்கு என்ன செய்திருக் கின்றோம்? வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு அடித்துவிட்டு அதனை போட்டோ பிடித்து புதினப் பத்திரிகைகளில் போடுவது மட்டும் நிறைவாகாது.
எனவேதான் நாங்கள் எங்கள் அலுவலர்களை மாற்றி ஒரு புதிய யுகம் சமைக்க ஆவன செய்து வருகின்றோம். எமது தேவைகள் பற்றிய ஒரு கணிப்பறிக்கையை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் விரைவில் எமக்குத் தயாரித்துத் தருவதாகக் கூறியுள்ளார். முதலில் எங்கள் மக்களின் தேவைகளை முழுமையாக அறிந்து தேவையான நீண்ட காலத் திட்டத்தினை அமைத்து முன்னேற முடிவெடுத்துள்ளோம்.
ஆனால் எங்கள் முயற்சிகள் பயனளிக்கும் வரையில் நீங்கள் காத்துக் கிடக்க முடியாது. அதனால் தான் இப்பேர்ப்பட்ட கொடையுதவிகள் எமக்கு மிகவும் தேவைப்படுகின்றன. எமது கொடையாளிகளுக்கு எமது மனமார்ந்த நன்றி யறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இங்குள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங் களும், மகளிர் அமைப்புக்களும் தங்களுக்குள்ளேயே குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவருக் கொருவர் உதவியாக அவசர தேவைகள், திடீர் செலவீனங்கள் ஏற்படுகின்ற போது தமக்குள் ளேயே உதவி வாழ்க்கை நடத்து கின்ற அந்தத் தன்மை வரவேற் கப்பட வேண்டியது.
இம் மக்களுக்கு எமது அன்புக் கரத்தை நீட்டி சற்று மேலே இவர்களை உயர்த்தி விட்டால் இவர்கள் வாழ்க்கையிலும் வசந்தம் பிறக்கும். முன்னர் கூறியது போன்று இப்போது மகளிர் விவகாரம் தொடர் பான திணைக்களம் முதலமைச் சரின் அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மகளிர் அமைப்புக்கள் தொடர்பான விபரங்கள் எமது அமைச்சில் இருந்து விரைவில் கோரப்படும்.
அதன் பின்னர் பெற்ற தரவு களின் அடிப்படையில் வாழ்வாதார உதவிகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற நல்ல செய்தியையும் உங்களுக்கு தெரிவித்து எங்கள் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றாக இணைந்து கொண்டு இம்மக்களை முன்னேற்ற வாருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.