தமிழ் - சிங்கள இன ஒப்பந்தம்: பேரவையின் யோசனையில் பிரதான அம்சம்
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னர் இந்த நாட்டின் சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு செய்யப்பட வேண்டும். அந்த சமூக உடன்பாட்டின் மீதே அரசியல் அதிகாரங்களைப் பகிரும் புதிய அரசமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும். -
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிடவிருக்கும் அரசியல் தீர்வுத் திட்ட யோசனையின் முன்வரைவில் இந்த அம்சமே இடம்பெற்றிருக்கின்றது என அறிய வந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பகிரங்க நிகழ்வில் இந்த வரைவு வெளியிட்டு வைக்கப்படவிருப்பது தெரிந்ததே.
அந்த வரைவு இரண்டு பிரிவுகளாக அமைந்திருக்கும் எனத் தெரிகின்றது. இரண்டாவது பிரிவு அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்களை வலியுறுத்துகின்றது. முதல் பிரிவு பொது அம்சங்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. அந்த முதல் பிரிவிலேயே சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையிலான சமூக உடன்பாட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது.
அந்தப் பிரிவின் சாராம்சம் வருமாறு:-
இலங்கைத் தீவு பௌத்த சிங்கள மக்களுக்கு உரியது என்ற மேலாதிக்க சிந்தனையில் பெரும்பான்மை சிங்கள இனம் இருக்கும் வரையில் இங்கு ஓர் அமைதியான - இணக்கமான - நியாயமான - நிரந்தரத் தீர்வுக்கு ஜனநாயக முறைமையின் கீழ் வாய்ப்புகள் இல்லை. அதாவது பேரினவாத மேலாதிக்க சிந்தனை பெரும்பான்மை இனமான சிங்களவர்களைப் பற்றிக் கவ்வி நிற்கும் சூழலில் எந்தத் தீர்வும் ஜனநாயக முறைமையின் கீழ் நின்று நிலைக்க முடியாது. எனவே எண்ணிக்கையின் அடிப்படையிலான ஜனநாயக முறைமையின் கீழ் பெரும்பான்மையினரால் எந்தச் சமயத்திலும் முறியடிக்கப்பட முடியாத வகையில் ஒரு தீர்வு நிலை நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.
அதற்காகத்தான் இந்த நாட்டின் சிங்கள தேசிய இனமும் தமிழ்த் தேசிய இனமும் முதலில் ஓர் இன சமூக உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும். அந்த உடன்பாட்டின் கீழ் மூன்றாவது தரப்பாக இந்தியா, அமெரிக்கா, போன்ற சர்வதேச நாடுகளோ அல்லது ஐ.நாவோ உறுதி ஒப்பமிட்டு அதனை வலியுறுத்தி நிற்க வேண்டும். 1978 இல் வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களை அவர்களின் தாயகமாக ஏற்றுக் கொண்டு, இரண்டு தேசிய இனங்களும் இந்தத் தீவில் ஒருங்கிணைந்து வாழ்வதை இந்த சமூக உடன்பாடு உறுதி செய்வதாக அமைய வேண்டும்.
அத்தகைய சமூக உடன்பாட்டில் இரு இனங்களும் ஒப்பமிட்ட பின்னர், அடிப்படையில் தமிழர்களின் அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் யோசனைகள் அடங்கிய தீர்வைக் கொண்டதாக அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த ஏற்பாட்டை பெரும்பான்மைச் சிங்கள இனம் எதிர்காலத்தில் ஒரு தலைப்பட்சமாக முறிக்கக்கூடாது. அப்படி முறிக்க முயலுமானால் தமிழ்த் தேசிய இனம் தனது அரசியல் அந்தஸ்தையும் எதிர்காலத்தையும் தலைவிதியையும் முடிவு செய்வதற்காக தனது தாயகத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். -இத்தகைய பல அம்சங்கள் அந்த நகல் வரைவில் இடம்பெற்றுள்ளன என அறிய வருகின்றது.
தொடர்படைய செய்திகள்-