நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 38
ரூபா மலையவனைச் சமாதானப்படுத்தி அவனைத் தென்பூட்டிய போதிலும் அந்த
முகாமுக்கு வந்த நேரம் தொடக்கம், அவளின் இதயமும் இரும்பாகக் கனத்துக் கொண்டிருந்தது.
முகாமுக்கு வந்த நேரம் தொடக்கம், அவளின் இதயமும் இரும்பாகக் கனத்துக் கொண்டிருந்தது.
போராட்ட வாழ்வில் வீரச்சாவுகள் தவிர்க்கமுடியாதவை என்பதை அவள் நன்கறிவாள். ஆனால் சிலரின் இழப்புக்கள் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிடுவதுண்டு.
அவள் காலை உணவு முடித்த பின்பு தனியாகப் புறப்பட்டுப் போய் அந்த சிறு கிளையாற்றின் அருகில் நின்ற மருதமரமொன்றின் திரண்ட வேரில் அமர்ந்து கொண்டாள். ஆற்றின் மறுகரையில் தெரிந்த பெரு விருட்சங்கள் அடங்கிய காட்டைப் பார்த்தபோது அவளின் எண்ணங்கள் பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
அது ‘ரணகோஷ’ இராணுவ நடவடிக்கை, வெகு மூர்க்கமாக முன்னேறிக்கொண்டிருக்கும் காலம். பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை முன்னேற முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த வேளையில் தான் ரணகோஷ வவுனியா – மன்னார் வீதியால் மடுவை நோக்கி முன்னேறியது. மடுத் தேவாலயத்தில் படையினரின் எறிகணை வீச்சில் நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் போராளிகளுக்கு அங்கிருந்து பின்வாங்குவதைவிட வேறுவழியிருக்கவில்லை.
அந்த ‘ரணகோஷ’ எதிர்ச் சமரில் அந்த இலுப்பைக்கடவைக் காட்டில் தான் தணிகைச் செல்வியின் பெண்கள் படையணி படையினரை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் பாலியாற்றினூடாக மிக இரகசியமாக முன்னேறிய இராணுவ அணியொன்று பெண் போராளிகளைப் பின்பக்கமாகச் சுற்றிவளைத்துக் கொண்டது.
நான்கு பக்கமும் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் மகளிர் அணி மிகவும் நெருக்கடிக்குள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அந்தச் சண்டையில் தணிகைச் செல்வி உட்பட 22 பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர். ரூபாவும் மேலும் பல போராளிகளும் படுகாயங்களுக்கும் உள்ளாகினர். எனினும் முன்பக்கமாகக் காப்புச் சூடு நடத்தியவாறு பின் பக்கச் சுற்றிவளைப்பை மகளிர் அணி உடைத்து வெளியேறியது.
அந்தச் சந்தர்ப்பத்தில் உதவிப் படையணியும் வந்து சேரவே இராணுவ அணிகள் நிர்மூலம் செய்யப்பட்டன. அந்தச் சண்டையுடன் படையினர் ரணகோஷவின் முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டுப் பின்வாங்கிவிட்டமை தணிகைச் செல்வியின் அணியினரின் பெரும் சாதனையாகவே விளங்கியது.
ரூபாவுக்கு தணிகைச் செல்வியின் இழப்பு பெரும் மனக்கவலையை ஏற்படுத்திவிட்டது.
யாழ்ப்பாணம் படையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்த போது அவள் பல வெற்றிகரமான ஊடுருவல் தாக்குதல்களை நடத்தியிருந்தாள்.
பல்கலைக்கழக மாணவி போல், நவநாகரிக மங்கை போல், ஒரு குடும்பப் பெண் போல் எனப் பல வடிவங்களிலும் ஆபத்தான இடங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிவிடுவாள்.
அதே வேளையில் சண்டைகளின் போது போராளிகளை வழி நடத்துவதில் தனித்திறமை பெற்றிருந்தாள்.
முன் அணியில் தானே நின்று போரிட்டவாறே கட்டளைகளை வழங்குவாள்.
ரூபா முகாமைவிட்டு வெளியேறிய போதே அவதானித்த கரும்புலிகள் அணியைச் சேர்ந்த ஜான்சி, அவள் நீண்ட நேரம் திரும்பிவராத நிலையில் அவளைத் தேடிப்புறப்பட்டாள்.
அவள் ரூபாவை நெருங்கிய போது, ரூபா அவளைக் கவனிக்கவில்லை. அவளின் கண்களிலிருந்து நீர் பொல பொலவென வழிந்து கொண்டிருந்தது.
ஜான்சி மெதுவாக, “என்ன ரூபாக்கா! என்ன நடந்தது” எனக் கேட்டாள்.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த ரூபா, அவசரமாகக் கண்களைத் துடைத்தவாறே, “ஒண்டுமில்லை.. இந்தக் காட்டிலை தானே தணிகைச் செல்வி அக்காவைப் பலி குடுத்தம், அதை நினைச்சாப்போலை கவலையாயிருந்தது”, என்றாள்.
ஜான்சி ஒரு பெருமூச்சுடன் சொன்னாள், “அக்கா, அவ என்னிலை எவ்வளவு அன்பு வைச்சிருந்தவ எண்டு தெரியும் தானே நான் ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்குப் போகேக்கை கண் கலங்க முத்தமிட்டு அனுப்புவா, ஆனால் நான் ஆறு முறை என்ரை இலக்கை நிறைவேற்றிப் போட்டு தப்பி வந்திட்டன்”.
“வீரச்சாவுக்காக என்னை வழியனுப்பிற அவவே, நாங்கள் வழியனுப்பாமல் வீரச்சாவடைஞ்சிட்டா.. போராட்டத்திலை இதெல்லாம் சகஜம், வாங்கோ.. போவமக்கா”
ரூபா, அவளின் முகத்தை உற்று நோக்கினாள். ஆறு முறை சாவடைந்தும் தன் முன் சிரித்துக் கொண்டு நிற்கும் ஜான்சியை பார்க்க அவளுக்குப் பெருமையாக இருந்தது. போராளிகள் சாதிக்கும் அற்புதங்களில் ஜான்சியும் ஒன்றாகவே ரூபாவுக்குத் தோன்றியது.
விடிந்து வெளிச்சம் பரவ ஆரம்பித்த போது வெள்ளாங்குளத்தில் இருந்து மல்லாவி போகும் பாதையில் சுந்தரம் ஏறக்குறைய இரு மைல்கள் கடந்துவிட்டான்.
அந்தப் பாதையில் விடியும் முன்பு போவது ஒரு பெரும் உயிராபத்தான பயணமாக முடிந்துவிடும். அது யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி. சில சமயங்களில் எருமைக் குழுவன்களும் அவ்வீதியைக் குறுக்கறுப்பதுண்டு.
சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான். சித்திரை வெயில் உச்சியைப் பிளக்கும் முன்பாக அவன் எப்படியும் புத்துவெட்டுவானை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் வேகமாகப் போய்க்கொண்டிருந்தான்.
புத்துவெட்டுவான் ‘சவாரிச் செல்வராஜா’ என்றால் அந்தப் பிரதேசத்தில் அவரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவர் நல்ல சுழி, சுட்டி உள்ள இளம் மாடுகளை விலை கொடுத்து வாங்கி சவாரி பழக்குவார். பின்பு மாட்டு வண்டில் சவாரிப் போட்டிகளில் பங்கு கொண்டு தானே மாடு கலைத்து எப்படியும் முதல் பரிசோ அல்லது இரண்டாம் பரிசோ பெற்றுவிடுவார். அந்தச் சூட்டுடன் அந்தச் சோடியை நல்ல விலைக்கு விற்றுவிட்டு வேறு இரு புதிய மாடுகளை வாங்கிப் பழக்க ஆரம்பித்துவிடுவார்.
மன்னாரில் செல்வராசாவுக்கு நல்ல மாடுகளைப் பரமசிவம் தேடி வாங்கிக் கொடுப்பார். கடந்த தைப்பொங்கல் சமயத்தில் பரமசிவம் அவருக்கு ஒரு சோடி மாடு வாங்கிக்கொடுத்திருந்தார். அதில் செல்வராஜா இன்னும் ஒரு ஆயிரம் ரூபா பரமசிவத்துக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. செல்வராஜா கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கண்ணியமானவர் என்றபடியால் அது பற்றி பரமசிவம் அக்கறைப்படவில்லை. இப்போ இடப்பெயர்வின் பின்பு காசுத் தேவைகள் ஏற்பட்டுவிட்டதால், சுந்தரத்தை செல்வராசாவிடம் காசு வாங்கிவர அனுப்பியிருந்தார்.
வரவரக் காட்டின் அடர்த்தி அதிகமாயிருந்தது. மேலும் சில மைல்கள் வந்த போது நடு வீதியில், ‘யானை இலத்திகள்’ அங்குமிங்குமாகப் பல இடங்களில் கிடந்தன. அவற்றிலிருந்து மெல்லிய ஆவி வெளியேறிக் கொண்டிருந்ததைக் கண்ட போது சுந்தரத்துக்கு நெஞ்சு ‘திக்’ என்று அடித்துக் கொண்டது. எப்படியும் ஒரு அரை மணி நேரத்துக்கு உள்ளேயே யானைகள் வீதியைக் குறுக்கறுத்திருக்கவேண்டுமென ஊகித்துக் கொண்டான்.
வீதியின் இரு பக்கங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்தவாறு, பிரேக்கை விரலுக்குள் வைத்துக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்.
அலியன் யானைகள் ஆளரவம் கண்டால் எவ்வித சத்தமுமில்லாமல் மறைவாக நின்றுவிடும். மனிதன் நெருங்கியதும் தும்பிக்கையால் சுருட்டித் தூக்கி காலுக்குள் போட்டு மிதித்துவிடும். ஆனால் மனிதன் யானையை முதலில் கண்டுவிட்டால் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடினால் அது சைக்கிளை மிதித்து துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுமாம்.
கூட்டமாக வரும் யானைகளால் ஆபத்துக் குறைவான போதிலும் சில சமயங்களில் அவையும் மனிதரை அடித்துவிடலாம். எனவே சிவம் மிக மிக அவதானத்துடன் போய்க்கொண்டிருந்தான்.
கல்விளாங்குளம் சந்திக்கு வந்து சேர்ந்த போது நேரம் எட்டரையாகிவிட்டது. ஏதாவது ஒரு தேநீர் கடையை அவனின் கண்கள் தேடிய போதும் அங்கு அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் பறங்கியாற்றுப் பாலத்தைத் தாண்டி துணுக்காயை நோக்கி சைக்கிளை வேகமாக மிதித்தான்.
சுந்தரம் துணுக்காய்க்கு வந்து சேர்ந்த போது நன்கு களைத்தேவிட்டான். முக வெயிலும் வேகமாகச் சைக்கிள் ஓடியமையும் அவனின் உடலை வியர்வையில் குளிப்பாட்டிவிட்டன.
சங்கக்கடைக்கு அருகில் இருந்த ஒரு தேனீர் கடையின் முன்பு சைக்கிளை விட்டுப் பூட்டிவிட்டு உள்ளே போய் வாங்கினில் அமர்ந்து கொண்டான்.
“அண்ணை இரண்டு பணிசும், ஒரு பிளேன்ரீயும் தாங்கோ”, என்றான் சுந்தரம். அவனை நன்றாக உற்றுப் பார்த்த கடைக்காரர்.
“தம்பி.. நீர் சங்கரசிவத்தின்ரை தம்பியல்லே?”, எனக் கேட்டார்.
அந்தக் கேள்வியில் வியப்படைந்த சுந்தரம் அவரின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, “அட.. எங்கடை சைமன் அண்ணை”, என்றான்.
“ம்.. கண்டு பிடிச்சிட்டீர்”, என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு ஒரு தட்டில் பணிசையும், வாழைப்பழங்களையும் கொண்டு வந்து வைத்தார்.
“உங்கடையே கடை?”
“ஓ.. ஜெயசிக்குறு சண்டையில ஒரு கால் போட்டுது. ஒரே தங்கச்சி.. அவளும் இயக்கத்துக்குப் போட்டாள். வயது போன அம்மா, அப்பாவைப் பாக்க ஒருதருமில்லை.. பின்னை துண்டு குடுத்திட்டு வந்து இந்தக் கடையைப் போட்டிருக்கிறன்”,
அவர் சொல்லி முடித்துவிட்டு தேனீர் பட்டடையில் போய் பாத்திரத்தில் சாயத்தையும், சீனியையும் போட்டு சுடுநீரை விட்டு இழுத்து ஆத்த ஆரம்பித்தார்.
அப்போதுதான் அவர் செயற்கைக் காலுடன் இழுத்து நடப்பதைச் சுந்தரம் கவனித்தான்.
சிவம் ஒரு சாதாரண போராளியாக இருந்த போது சைமன் ஒரு அணித்தலைவராக இருந்தார். அவர் இரண்டு, மூன்று தடவைகள் சிவத்துடன் பரமசிவம் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்.
சுந்தரம் தாங்கள் இடம்பெயர்ந்து முழங்காவிலில் இருப்பதையும் காசு வாங்குவதற்காக புத்துவெட்டுவான் போகும் விஷயத்தையும் அவரிடம் சொன்னான்.
“மல்லாவியிலை எங்கடை இரண்டு ஏக்கர் தென்னங்காணியும் மூண்டு ஏக்கர் வயலும் இருக்கு.. விருப்பமெண்டால் அங்க வந்திருக்கச் சொல்லி ஐயாட்ட சொல்லுங்கோ”, என்றார் சைமன்.
“முழங்காவிலிலை தோட்ட வேலை துவங்கியிட்டம்.. எண்டாலும் ஐயாட்டை சொல்லிப் பாக்கிறன்”, என்றான் சுந்தரம்.
பணிசைச் சாப்பிட்டுவிட்டு தேனீரையும் அருந்திவிட்டுப் புறப்பட்டான் சுந்தரம். அவன் எவ்வளவு வலியுறுத்தியும் சைமன் காசு வாங்க மறுத்துவிட்டார்.
ஒரு காலத்தில் நிமிர்ந்த நெஞ்சும், தோளில் துப்பாக்கியும் இடுப்பில் பிஸ்டலும், ஆஜானுபாகுவாய் நடந்த சைமன் இப்போ காலை இழுத்து இழுத்து நடந்து தேனீர் ஊற்றப் போனதை நினைத்த போது சுந்தரத்துக்கு மனதை என்னவோ செய்தது. ஒரு பெருமூச்சுடன் எல்லாமே விடுதலைக்குக் கொடுத்த விலை என எண்ணியவனாக சைக்கிளை ஓட ஆரம்பித்தான்.
நேராக மாங்குளம் வீதியில் வந்த சிவம் சக்கத்துச் சந்தியில் திரும்பி கொக்காவில் வீதியில் இறங்கினான். சிறிது தூரம் வந்ததும் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வெண்ணிறக் கல்லறைகளால் நிறைந்து விடுதலைக்கான ஒப்புயர்வற்ற சாட்சியமாக நிமிர்ந்து நின்றது.
ஒரு நிமிடம் நின்று மனதிற்குள் அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டான்.
பாடசாலை, பண்ணை என்பவற்றைக் கடந்து நீர் வற்றிக்கிடந்த அந்த “கோஸ்வேயால்” இறங்கி ஏறி கிரவல் வீதியில் பயணத்தைத் தொடர்ந்தான்.
வழியில் எதிர்ப்பட்ட சிறு வெளியைத் தாண்டி மரங்கள் அடர்ந்த பகுதிக்கு வந்த போது அவன் கண்ட காட்சி அவனைத் திகைக்கவைத்துவிட்டது. அது என்னவாக இருக்கும் என அவனுள் எழுந்த கேள்விக்கு விடை கிடைத்த போது அவன் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவன் அதனருகில் சென்றான்.
-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-
(தொடரும்)
(தொடரும்)
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24