Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 40

வானம் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்தை இழந்து கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில்
அண்மையில் கேட்ட இரு குண்டோசைகளும் கிபிர் விமானம் மேலெழும்பிய இரைச்சலும் காட்டு மரங்களையும் ஒரு முறை நடுங்கவைத்தன. காலைப் பயிற்சிகளை முடித்துவிட்டு அப்போதுதான் முகாம் திரும்பி வந்திருந்த போராளிகள் மேலிடத்தின் கட்டளைகளை எதிர்பார்த்து அவசர அவசரமாகத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டனர். அடுத்தடுத்து வந்த மூன்று விமானங்கள் மாறி மாறிக் குண்டுகளைப் பொழிந்து தள்ளின. சிவம் விடத்தல் தீவின் மீது தான் விமானத் தாக்குதல் இடம்பெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டான்.

விடத்தல் தீவின் கடற்கரைப் பகுதி கடற்புலிகளின் பலமான பாதுகாப்பிலேயே இருந்தது. எருக்கலம்பிட்டிப் பகுதியிலிருந்து எரிபொருள், வாகன உதிரிப்பாகங்கள் என்பவற்றை கடற்படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கடத்திக் கொண்டுவருவதில் விடத்தல்தீவு பிரதான மையமாக விளங்கியது. அப்படியான நிலையில் விமானத் தாக்குதல்கள் விடத்தல் தீவின் மேல் நடத்தப்படுகிறதென்றால் ஏதோ ஒரு பெரும் நகர்வு முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே சிவம் கருதினான். உடனடியாகவே சிவத்தின் அணியை இலுப்பைக்கடவை பிரதான வீதிக்கும் கடற்கரைக்கும் இடையில் உள்ள பற்றைக் காட்டுப்பகுதியால் முன்னேறும்படி கட்டளை வந்தது. அது போல் பெண்கள் அணியைக் காடுகள் வயல்கள் ஊடாக வீதியின் கிழக்குப் பகுதியால் முன்னேறும்படி பணிக்கப்பட்டது.

சிவத்தின் அணி நகர்ந்த பாதை மிகவும் கடினமாகவேயிருந்தது. விளாத்திக்காடும், நாகதாளிப் பற்றைகளும் அவர்களின் நகர்வுக்குப் பெரும் இடையூறாக இருந்தன. எனினும் போராளிகள் சலித்துவிடவில்லை. அவர்கள் இயன்றளவு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். விமானக் குண்டு வீச்சு ஓய்ந்த நிலையில் விடத்தல் தீவையும் பள்ளமடுவையும் நோக்கி தொடர் எறிகணைகள் வந்து விழ ஆரம்பித்துவிட்டன. விடத்தல் தீவு கடற்கரையில் குடியிருந்த இரு குடும்பங்கள் ஒருவர் கூட எஞ்சி விடாமல் விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டுவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்துவிட்டனர். ஒரு மசூதியும் இரண்டு தேவாலயங்களும் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. அதேவேளையில் கடற்புலிகளின் எரிபொருள் களஞ்சியம் தாக்கப்பட்டு எரிந்துகொண்டிருந்தது. தொடர்ந்து எறிகணைகள் விடத்தல் தீவிலும் பள்ளமடுவிலும் விழுந்து கொண்டிருந்ததால் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் படகுகள் மூலமே வெளியேற்றவேண்டியிருந்தது. போராளிகள் பதில் பீரங்கித் தாக்குதல்களைத் தொடுத்த போதும் படையினரின் பல்குழல் பீரங்கிகள் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தன.

இரு கடற்படையினரின் டோறாப் படகுகள் கடலின் ஆழமான ஆறு போன்ற பகுதிக்குள் ஓடியோடித் தீவின் மீது தாக்குதல்களை நடத்தின. அவை ஆழங்குறைந்த பகுதிகளில் வர முடியாதவை என்பதால் தீவை நெருங்கமுடியவில்லை. கடற்புலிகள் சிறிய படகுகளிலும் கடற்கரையிலும் நின்று தாக்குதல்களைத் தொடுத்தனர். கடற்புலிகள் தாக்கியவாறு முன்னேறிய சந்தர்ப்பத்தில் அவர்களின் ‘குருவி’ ஒன்று வேகமாக டோறாவை நோக்கிச் செல்லவே அவர்கள் பின்வாங்கி ஓடிவிட்டனர். சிவத்தின் அணியினர் அடுத்த கட்டளையை எதிர்நோக்கியவாறு முன் நகர்ந்து கொண்டிருந்த போது விடத்தல் தீவு மக்கள் கையில் கிடைத்தவைற்றை எடுத்துக் கொண்டு கடற்கரையை அண்டிய காடுகளுடாக இலுப்பைக்கடவை நோக்கி வெளியேறிக்கொண்டிருந்தனர்.

பாப்பாமோட்டைக்கும் திருக்கேதீஸ்வரம் கடற்கரைப் பகுதிக்குமிடையேயுள்ள பகுதியால் பெருந்தொகையான படையினர் முன்னெறி பள்ளமடுவை நெருங்கிவிட்டதாகவும் பள்ளமடு விடத்தல் தீவு வீதிக்கு அப்பால் முன்னேற விடாது தடுத்து அடிக்கும் படியும் சிவத்துக்கு மேலிடத்திலிருந்து கட்டளை வந்தது.

அந்த இடம் போராளிகளுக்கும் சாதகமற்ற வெட்டவெளி என்ற போதிலும் அதைப் படையினர் தாண்டவிடக்கூடாது என்பதில் சிவம் உறுதியாயிருந்தான். அவர்கள் அந்த இடத்தை நெருங்கிய போது போராளிகளின் பீரங்கிப் படையினர் எறிகணைகளால் வேலியமைத்து முன்னேறும் படையினரைச் சிதறடித்துக் கொண்டிருந்தனர். ரூபாவின் படையணி மங்களா தலைமையில் முன்னேறிக் கொணடிருந்தது. பெரியமடுவை உடைத்து முன்னேறிய இராணுவமும் அடம்பன் ஆட்காட்டி வெளியுடாக இரகசியமாக முன்னேறிய ஒரு இராணுவ அணியும் பரப்புக்கடந்தானில் அரசியல்துறைப்படையணியை சுற்றிவளைத்து விட்டதாகவும் உடனடியாக முன்னேறி அவர்களை மீட்கும்படியும் மங்களாவுக்கு கட்டளை வந்தது.

பெண்கள் படையணி இராணுவத்தினரை நெருங்குவது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. அவர்கள் 50மி.மீற்றர் உந்துகணையால் போராளிகள் மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தனர். மங்களா உடனடியாக ஒரு அதிரடி முடிவை எடுத்தாள். பீரங்கிப்படையணி போராளிகளை தொடர்ந்து பத்து நிமிடங்கள் தங்களுக்கும் படையினருக்கும் இடையில் எறிகணை வீசும் படி கேட்டுக் கொண்டாள். பத்து நிமிடம் முடிந்ததும் புகை அடங்கு முன்பே பெண் போராளிகள் புகை மண்டலத்தினூடாக அதிரடியாகப் பாய்ந்தனர். அதைச் சற்றும் எதிர்பாராத படையினர் நிலைகுலைந்துவிட்டனர். சண்டை மிக அருகருகாகவே ஆரம்பமாகிவிட்டது. அரை மணி நேரத்துக்கிடையிலேயே சுற்றி வளைப்பை உடைத்தது மட்டுமின்றி, பெரிய மடுப் பக்கமிருந்து முன்னேறிய படையினரைப் பின்தள்ளி, அரசியல்துறைப் படையணி வெளியேற மகளிர் அணி பாதை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்போது இரு அணியினரும் இணைந்துவிட்டதால் கள நிலை போராளிகளுக்குச் சாதகமாக மாறிவிட்டது. மங்களா எப்படியாவது பெரியமடு – பள்ளமடு வீதியில் ஏறிவிட்ட படையினரைப் பழைய இடத்திற்கு பின் தள்ளுவதை இலக்காக வைத்து தன் அணியை வழிநடத்திக்கொண்டிருந்தாள். அரசியல்த்துறைப் படையணியில் கணிசமான போராளிகள் வீரச்சாவடைந்துவிட்டனர். பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிவிட்டனர். மகளிர் அணி காப்புக் கொடுத்துச் சண்டையிட களமுனை மருத்துவப் போராளிகள் வேகமாகக் காயமடைந்தவர்களையும் வித்துடல்களையும் களத்தைவிட்டுப் பின்னால் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். அந்தப் பணியில் ஏற்கனவே மருத்துவப் போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துவிட்டனர். அடம்பனிலிருந்து முன்னேறிய இராணுவ அணி சிறிது சிறிதாகப் பின்வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால் பள்ளமடுவை உடைத்து முன்னேறிய இராணுவ அணி அசைய மறுத்தது. அவர்களுக்கு ஆதரவாக இரு டாங்கிகளும் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன.

அந்த முனையில் ரூபாவே தலைமையேற்று மகளிர் போராளிகளை வழிநடத்தினாள். அவர்களில் பலர் நிறைந்த களமுனை அனுபவம் உள்ளவர்களாதலால் பெருமளவு வீரச்சாவையும் காயமடைதலையும் தவிர்த்துத் திறமையுடன் போராடிக்கொண்டிருந்தனர். சிவத்தின் தலைமையிலான அணி நின்று போரிட்ட இடம் போராளிகளுக்குச் சாதகமாக அமையவில்லை. வெட்டவெளியாதலால் கிபிர் அடிக்கடி வந்து குண்டு தள்ளுவதும் போராளிகளின் விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதலால் இலக்குத் தவறி அவை படையினரின் பகுதிக்குள் விழுவதுமாக இருந்தது.

இரு முறை அப்படி நடந்தும் கூட படையினர் பின்வாங்குவதாக இல்லை. சண்டை மிக நெருக்கமாக இடம்பெற்றமையால் விமானத் தாக்குதலும் எறிகணை வீச்சுகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் அந்த இடத்தை இப்போ டாங்கிகள் எடுத்துவிட்டன. எனினும் அவை போராளிகளின் ஆர்.பீ.ஜிக்கு பயந்து படையினருக்குப் பின்னால் நின்றே தாக்குதலை மேற்கொண்டன. சண்டை எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் சிவத்தின் அணியினர் சளையாது போராடிக்கொண்டிருந்தனர்.

சுந்தரம் வெள்ளாங்குளம் சந்திக்கு வந்த போது நேரம் பத்து மணியைத் தாண்விட்டது. அடிக்கடி வந்து குண்டுவீசி விட்டு மேலெழும்பிய விமானங்களும் தொலைவில் கேட்ட எறிகணை ஒலிகளும் சண்டை தொடங்கிவிட்ட செய்தியை அவனுக்குத் தெரிவித்துவிட்டன. அவன் முழங்காவிலுக்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டு, சைக்கிளை இலுப்பைக்கடவைப் பக்கம் திருப்பிவிட்டான். புத்துவெட்டுவானிலிருந்து நீண்ட தூரம் ஓடி வந்திருந்த போதிலும் களைப்பையும் பொருட்படுத்தாமல் சைக்கிளை வேகமாகச் செலுத்தினான். சிரமம் கொடுத்த கிடங்கு பள்ளங்களைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. அவன் இலுப்பைக்கடவைப் பாடசாலையை நெருங்கிய போது இடம்பெயர்ந்து அங்கு தங்கியிருந்தோரில் பெரும்பான்மையானோர் மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

விடத்தல் தீவிலிருந்து வந்தவர்கள் ஆங்காங்கே மர நிழல்களில் களைத்துப் போய் குந்தியிருந்தனர். சில இளைஞர்கள் அவர்களுக்கு இளநீர் வெட்டிக்கொண்டு வந்து கொடுத்ததை விட வேறு எந்த உதவியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. சுந்தரம் என்ன செய்வதென யோசித்தவாறே தயங்கி நின்றபோது அவனருகில் ஒரு உழவுயந்திரம் வந்து நின்றது. சாரதி ஆசனத்தில் அவனின் பழைய நண்பனான முருகையா அமர்ந்திருந்தான்.

“என்ன மச்சான் என்னை யோசினை?”, எனக்கேட்டான் முருகையா. “யோசினை ஒண்டுமில்லை.. இந்தச் சனம் எங்கை போகுது, என்ன செய்யப் போகுது எண்டு யோசிக்கிறன்”. “இப்ப.. நீ.. என்ன செய்யப் போறாய்?” “அப்பிடிச் செய்ய ஒண்டுமில்லை.. சத்தம் கேட்டாப்போல என்னண்டு பாப்பமெண்டு வந்தன்”, என்றான் சுந்தரம்.

“அப்ப.. ஓரிடத்துக்குப் போட்டுவருவம்.. வாறியே?” “எங்கை?” “சண்டை நடக்கிற இடத்துக்குச் சாப்பாடு கொண்டுபோகவேணுமெண்டு ட்றக்ரரைக் கேட்டாங்கள்.. நானும் வாறனெண்டு வெளிக்கிட்டன்.. வாவன் போவம்” “இதைக் கூடிச் செய்யாட்டில் நாங்கள் இந்த மண்ணிலை பிறந்ததிலை என்ன அர்த்தம்? நில் இந்தச் சைக்கிளை அந்த வீட்டிலை விட்டிட்டு வாறன்”, என்றுவிட்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு ஓடினான் சுந்தரம்.

வழியிலை போய்க்கொண்டிருக்கும் போது முருகையா சொன்னான், “றோட்டாலை போக ஏலாது. கிபிர்க்காரன் பொழிஞ்சு விட்டிடுவன். காட்டுப் பாதையாலை தான் போகவேணும்” “அது பிரச்சினையில்லை.. எனக்கு இந்தக் காட்டிலை தெரியாத பாதையில்லை” என்றான் சுந்தரம்.

சமையல் பகுதியில் போய் தேயிலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாப்பாடுகளையும் ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர். இரு போராளிகளும் துப்பாக்கியுடன் உழவுயந்திரத்தில் ஏறிக்கொண்டனர்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 38
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 39