Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 28

சிவம் காவல் நிலைகளை கண்காணிக்க அன்றிரவு சென்ற போதுதான் ரூபாவைச் சந்தித்தான்.

“எப்பிடி ரூபா நிலைமையள் இருக்குது?”, எனக் கேட்டான். “கொஞ்சம் இறுக்கம் தான்… இருபத்தி நாலு மணி நேர விழிப்பு நிலையிலை இருக்கவேண்டியிருக்குது”, என்றாள் ரூபா.

“எந்த ஒரு பக்கத்தாலையும் உடைக்க விட்டிடக் கூடாது. விட்டமெண்டால் லேசிலை திருப்பிப் பிடிக்கேலாது”

“ஓமோம்.. விளங்குது.. இந்த இடத்தின்ரை அமைவு அப்பிடி.. நாங்கள் எத்தினை பேர் வீரச்சாவடைஞ்சாலும் ஒரு அங்குலம் கூட அவனை முன்னேற விடுறதில்லை” சிவம் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்,

“ம்.. இப்ப அதுதான் பெரிய பிரச்சினை” “என்னது?” “ஒரு கிழமைக்குள்ள இருபத்தொரு போராளிகள் வீரச்சாவடைஞ்சிட்டினம்.. முந்தநாள் சிறப்புத் தளபதி கூப்பிட்டு மேலிடத்திலையிருந்து கேள்வி மேல கேள்வியாய் வந்து கொண்டிருக்குது, எண்டும் எங்கடை கவனக்குறைவு தான் காரணம் எண்டும் ஏசிப்போட்டார்” ரூபாவும் அதை ஏற்றுக் கொண்டாள்.

“ஓம் சிவம்.. ஒவ்வொரு போராளி வீரச்சாவடையிற போதும் அண்ணைக்கு இதயத்தால இரத்தம் வடியும்” “எங்களாலையும் அதை உணர முடியுது. ஆனால் மோதல்கள் வரேக்கை இழப்புக்களைத் தவிர்கக் முடியேல்லை.. இப்பவெல்லாம் அவங்கள் முந்தி மாதிரி இல்லை.

ஒருதன் விழ மற்றவன் எண்டு முன்னுக்கு வாறாங்கள்” “வரட்டும், வரட்டும். எங்கட துவக்குகளுக்குத் தீனி குடுப்பம்”, என்றாள் ரூபா மிகவும் உறுதியுடன்.

சிவம் விடைபெற்றுக் கொண்டு அடுத்த காவலரண்களைக் கண்காணிக்கப் புறப்பட்டான். அவன் தளபதியைச் சந்திக்கப் போனபோது பெரும் எதிர்பார்புடனேயே போயிருந்தான். ஏதோ ஒரு அதிரடி நடவடிக்கை தொடர்பாகவோ ஊடுருவல் தாக்குதல் தொடர்பாகக் கலந்துரையாடவே தாங்கள் அழைக்கப்பட்டதாக எண்ணியிருந்தான். ஆனால் அவர் அவை பற்றி எதுவுமே பேசவில்லை. மாறாக பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் போராளிகளின் இழப்புக்களைத் தவிர்ப்பது பற்றியுமே கதைத்தார்.

சிவம் ஏமாற்றத்துடனும் கண்டனம் வேண்டிய கவலையுடனுமே திரும்பியிருந்தான். அவன் அவ்விடத்திலிருந்து அகன்ற சில நிமிடங்களிலேயே ரூபாவின் வோக்கி இயங்க ஆரம்பித்தது.

“ரூபா.. ரூபா.. கணேஸ்.. ரூபா… ரூபா.. கணேஸ்.” “கணேஸ்.. கணேஸ்.. ரூபா” “ரூபா.. எப்பிடி இருக்குது நிலைமையள்?” “ஒவ்வொரு நாளும் மோதல் தான்.. ஒரு அங்குலம் கூட முன்னேற விடுறதில்லை எண்ட முடிவோடை போராடுறம்” கணேசிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

வோக்கியில் கேட்பது அவன், “உங்கை சண்டை நடக்க இஞ்சை நான் கட்டிலிலை படுத்திருக்க நித்திரை வருகுதில்லை. என்ன செய்யிறது இடுப்புக்கு கீழ இயங்காது எண்டிட்டினம்” நோயுற்று இயலாத நிலையிலும் அவனுள் கொழுந்துவிட்டெரிந்த அவனின் நினைவுகள் அவளை மெய் சிலிர்க்க வைத்தன.

ஆனால் தன்னைப்பற்றி அன்புடன் விசாரிக்கமாட்டானா என்ற ஏக்கமும் அவளுள் எழாமல் இல்லை. எனினும் அவள், “நீங்கள் கவலைப்படாதேங்கோ.. உங்களுக்காகவும சேர்த்து நான் சண்டைபிடிக்கிறன்”, என்றாள்.

“நல்லது, நல்லது.. அப்பிடித்தான் இருக்கவேணும்!”, என்றுவிட்டு வோக்கி உரையாடலை முடிவுக்கு கொண்டுவந்தான் கணேஸ். அன்பான நாலு வார்த்தைகளுக்காக ஏங்கிய அவளின் மனம் ஏமாற்றமடைந்த போதிலும், அவனது குரலை பல நாட்களின் பின்பு கேட்டது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஒரு உயர்ந்த இலட்சத்தியதுக்கான பயணத்தின் போது தோன்றிய காதல்கூட அந்த இலட்சியங்களுக்குச் சேவை செய்யும் ஒரு ஆயுதமாக மிளிர்வதை உணர்ந்த போது ஏதோ ஒரு விதமான பெருமை அவளின் நெஞ்சை நிறைத்தது. இரவுக் காட்டிச் சாதனத்தின் ஊடாக காவல் நிலையின் முன்பகுதியை நோக்கிக் கொண்டிருந்த மலையவன், “டேய்.. மலையாண்டியண்ணை!”, என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

வதனி தேனீர் கேத்தலுடன் நின்று கொண்டிருந்தாள். அவள் தான் கொண்டு வந்த குவளைகளில் தேனீரை ஊற்றி மலையவனிடமும் மற்ற இரு போராளிகளிடமும் கொடுத்துவிட்டு, “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு வாய் பாத்துக் கொண்டிராமல் வடிவாய் சென்றி பாருங்கோ” என்றாள்.

“என்னண்டு உன்ரை வாயைப் பாக்கிறது.. நீ போகேக்க கொண்டு போடுவியே”, என்றான் மலையவன் சிரித்தவாறே. அவள் வெற்றுக் குவளைகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள். போராளிகள் மூவரும் அவளுக்கு புன்னகையுடன் விடைகொடுத்தனர்.

அவள் சென்று சில நிமிடங்களில்.. “ஐயோ.. அண்ணா.. என்னை ஆமி பிடிச்சிட்டான்… காப்பாத்துங்கோ..”, என்ற வதனியின் அவலக்குரல் ஒலித்தது. மலையவன் படபடப்புடன் இரவுக் காட்டி சாதனத்தை எடுத்து முன் பகுதியை நோக்கினான். வதனி நிலத்தில் விழுந்து காலை உதறிப் போராட அவளின் இரு கரங்களையும் பிடித்து இழுத்துக் கொண்டு இராணுவத்தினர் இருவர் ஓடிக்கொண்டிருந்தனர்.

சாக்கு மறைப்புக்குக் கீழால் இரகசியமாகப் புகுந்த இராணுவ ‘றெக்கிகள்’, வதனியை மடக்கி மறைப்புக்கு வெளியே கொண்டு சென்றுவிட்டனர் என்பதை அவன் உடனடியாகவே புரிந்து கொண்டான். ஒரு கணம் கூட தாமதியாது அவன் தனது துப்பாக்கியை இயக்கினான். படையினர் இருவரும் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டனர்.

ஆனால் மறுமுனையிலிருந்து ஓடிவந்த படையினரில் ஒருவன் வதனியைக் கட்டிப்பிடித்து தனக்கு மறைப்பாக்கிக் கொண்டு பின் நகர்ந்தான். வதனி, கத்தினாள், “அண்ணா.. என்னைச் சுடுடா.. என்னைச் சுடு”, ஒரு சிறு இடைவெளியே இருந்தது. பற்றை மறைவிற்குள் அவளைக் கொண்டு போய்விட்டால் எதுவுமே செய்யமுடியாது.

வதனியைத் தமது காம வக்கிரங்களுக்குப் பலியாக்கிவிட்டு கொன்றுவிடுவார்கள்.

வதனியைக் கட்டிப்பிடித்திருப்பவனைச் சுட்டால் வதனிக்கும் பட்டுவிடும். வதனி மீண்டும் கத்தினாள், “என்னைச் சுடு.. சுடு.. சுடடா”, மலையவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அவன் துப்பாக்கியை இயக்கினான்.

வதனியும் படையினர் நால்வரும் சுருண்டு விழுந்தனர். மிகுதியானோர் காயங்களுடன் ஓடிவிட்டனர். மோதல் தொடங்கிவிட்டதெனக் கருதிய சிவம் எல்லா நிலைகளுக்கும் தயார் நிலை அறிவித்துவிட்டு, ஒரு குழுவுடன் அங்கு வந்தான். அவன் வந்த போது எல்லாமே அமைதியாகவிட்டன. மலையவன் சிவத்திடம் விடயத்தை சொன்னான்.

சிவம் இரவுக் காட்டி சாதனத்தை வாங்கிப் பார்த்த போது முன்னால் இரு படையினரின் சடலங்களும் சற்றுத்தள்ளி நான்கு படையினரின் உடலங்களும் கிடந்தன. நடுவில் வதனியின் வித்துடல் கிடந்தது. சிவம் சிறிது நேரம் அமைதியாக யோசித்துவிட்டு, “மலையவன், வதனியின்ரை வித்துடலை அவங்கள் எடுக்க விடக்கூடாது.

நீங்கள் எடுக்கவும் முயற்சிக்க வேண்டாம். நாளைக்கு இரவு பாப்பம்..” என்றான். “சரியண்ணை..”, என்றான் மலையவன். சற்று முன்பு சிரித்துப் பேசிக் கலகலத்து, எல்லாருக்கும் தேனீர் கொடுத்த அந்தச் சின்னப் பறவையைத் தானே சுடவேண்டி நிலைமை ஏற்பட்டுவிட்டதை எண்ணிய போது அவனால் வேதனையைத் தாங்க முடியவில்லை.

அவளின் உடலை மடியில் கிடத்தி, “தங்கச்சி, தங்கச்சி”, எனக் கதறி அழவேண்டும் போலிருந்தது. மற்ற இருவரையும் அவதானமாக கண்காணிக்கும்படி கூறிவிட்டு மலையவன் கண்களை மூடியவாறு காவலரண் சுவரில் சாய்ந்து கொண்டான். சிவம் சாக்குத் தட்டிக்குக் கீழால் அவர்கள் புகுந்த இடத்தை நன்றாக பரிசீலனை செய்தான். இருவருக்குக் கூடுதலானவர்கள் வந்திருக்கக் கூடிய தடயங்கள் தென்பட்டன. எனவே இன்னும் உட்பகுதியில் இருவர் அல்லது மூவர் மாட்டுப்பட்டிருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டான்.

சாக்குத் தட்டிக் கரையை நோக்கி மறைவிடங்களில் சில போராளிகளைப் படுக்கவைத்து விட்டு வேறு சில போராளிகளுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினான். சற்று உட்பக்கமாகத் தேடிய போது செல் விழுந்து இடிந்து போயிருந்த ஒரு வீட்டிற்குள் மெல்லிய சரசரப்புக் கேட்டது. அவன் அதை அவதானிக்காதது போல் கடந்து சென்றுவிட்டு சற்றுத் தொலைவில் முன் பகுதியை கண்காணிக்கும் வகையில் ஒரு போராளியை நிறுத்தினான்.

பின்பு காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பதுங்கியவாறு வீட்டின் உட் பகுதியை நோட்டம்விட்ட போது சுவரின் மறைவில் இருவர் குந்திக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனடியாகவே சிவம் ஒரு சுவரை மறைப்பெடுத்துக் கொண்டு ஒரு கையை மட்டும் நீட்டி டோச் வெளிச்சத்தை அவர்கள் மேல் பாய்ச்சினான்.

திடீரென வெளிச்சம் அவர்கள் மீது பாயவே அவர்கள் சுவரேறிக் குதித்து முன் பக்கமாக ஓடினர். வெளிச்சத்தில் அவர்கள் உருவங்கள் நன்றாகத் தெரியவே முன்புறமாக நின்ற போராளி இருவரையும் சுட்டு விழுத்தினான். வெகு அவதானமாக துப்பாக்கியை நீட்டியவாறு சிவமும் மற்றப் போராளிகளும் அவர்களை நெருங்கினர். அவர்கள் படுகாயமடைந்திருந்த போதிலும் இன்னும் இறந்துவிடவில்லை. அவர்களின் ஆயுதங்களைக் களைந்துவிட்டு அவர்களின் கைகளைப் போராளிகள் கட்டினர்.

சிவம் உடனடியாகவே வாகனம் ஒன்றை வரவழைத்து அவர்களை மருத்துவப் பிரிவு முகாமிற்கு அனுப்பிவைத்தான். அவர்களை இறக்கவிடாமல் காப்பாற்றினால் அவர்களிடம் பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சிவம் நம்பினான்.

மனக்குழப்பத்துடன் கண்களை மூடியவாறு சாய்ந்திருந்த மலையவனை மற்றப் போராளிகள் தட்டியெழுப்பி இரவுக்காட்டி சாதனத்தைக் கொடுத்து முன்பக்கமாகப் பார்க்கும்படி சுட்டிக்காட்டினர். அங்கு கிடந்த உடலங்களை நோக்கி ஒரு சிறு பற்றை மிக மெதுவாக நின்று நின்று அசைந்து வருவது தெரிந்தது. அது உருமறைப்புச் செய்த படையினன் என்பதை மலையவன் புரிந்து கொண்டான்.

இப்படியான நேரங்களில் தனி ஒருவன் வரமாட்டான் என்பதால் மலையவன் உடனடியாகத் துப்பாக்கியை இயக்கவில்லை. அடுத்து வேறு இரு பற்றைகளும் அசைந்தன. போராளிகள் சுடத் தொடங்கினர். எதிர்ப்பக்கத்திலிருந்து எவ்வித பதில் சூடுகளும் வரவில்லை. ஆனால் பற்றைகளின் அசைவு நின்றுவிட்டது.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24