Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 33

அன்று அதிகாலை மூன்று மணிக்கே படையினரின் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. ஏற்கனவே அவர்கள் நிலைகொண்டிருந்த
இடத்தை நோக்கி எறிகணைகள் சரமாரியாக விழுந்து கொண்டிருந்தன. ஏற்கனவே தாங்கள் அப்பகுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டதால் அந்த வெற்றிடம் போராளிகளால் நிரப்பப்பட்டிருக்குமென அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கவேண்டும்.

அதனால் தான் அப்பகுதியை இலக்குவைத்து எறிகணைகளை வீசிக்கொண்டிருந்தனர். சிவத்தின் அணியினர் கட்டைளைப் பீடத்தின் உத்தரவின் பேரில் தங்கள் பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிவிட்டனர். ஆனால் போராளிகளும் இராணுவத்தினருமற்ற வெற்றிடப் பிரதேசத்தில் இரவோடிரவாக பீரங்கிப் படைப்பிரிவினர் ‘பிக்ஸ்’ அடித்துவிட்டனர்.

அது அந்த இரவுப் பொழுதில் மிகச் சுலபமாகவே இருந்தது. எறிகணை வீச்சு இடம்பெற்ற போது போராளிகள் எவ்வித எதிர்த் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. கிழக்கு வெளிக்க ஆரம்பித்த போது படையினரின் முன்னேற்ற முயற்சி ஆரம்பித்தது. போராளிகள் தங்கள் நிலைகளிலிருந்து சற்றுப் பின்வாங்கி வந்து குறைந்தபட்சத் துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

படையினர் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். திடீரென ஒரே நேரத்தில் பல எறிகணைகள் போராளிகளால் ஏவப்பட்டன. ஒவ்வொன்றும் துல்லியமாக பத்து, பன்னிரண்டு படையினரைப் பலி கொள்ள ஆரம்பித்தன. அரை மணி நேரத்தில் களமுனை வெறிச்சோடிவிட்டது. திரும்பி ஓடியோர் தவிர ஏனையோரின் பிரேதங்கள் எங்கும் பரவிக்கிடந்தன. மீண்டும் எறிகணைகள் போராளிகளின் நிலைகளை நோக்கி விழ ஆரம்பித்தன.

போராளிகளை மேலும் சிறிது தூரம் பின்வாங்கி நிலையெடுக்கும்படி உத்தரவு வந்தது. இங்கு பண்டிவிரிச்சான் களம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்க முள்ளிக்குளம் பக்கம் ஒரு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியிருந்தது. வீரச்சாவுகள் அதிகரித்தது மட்டுமின்றி கீரிசுட்டான் நோக்கிப் பின் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது.

கீதா மிகவும் திறமையுள்ள தளபதி என்பதில் சந்தேகமில்லை. துணிச்சலுடனும் திட்டமிட்ட வகையிலும் போராளிகளை வழிநடத்துவதில் பல முறை தலைவரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறாள். தீச்சுவாலை எதிர்ச்சமரின் போது அவள் ஆற்றிய சாதனைகள் அற்புதமானவை. ஒரு மையத்தை ஒரே நாளில் ஆறுமுறை விட்டுப்பின்வாங்குவதும் மீட்பதுமாகச் சாதனை படைத்தவள். 

ஒரு சந்தர்ப்பத்தில் தனது தோட்டாக்கள் முடிந்துவிட்ட நிலையில் எதிரி மேல் பாய்ந்து அவனைக் கத்தியால் குத்தி அவனின் துப்பாக்கியையே எடுத்து அவனின் உடலைக் கவசமாகப் போட்டு மோதியவள். அச்சம் என்பது அவளுக்குக் கனவில்கூடு வந்ததில்லை. ஆனால் அவளுக்கு காடுகள் பற்றிய அனுபவமோ, அறிவோ இல்லை. போராளிகளின் இழப்பு அதிரிக்கவே கட்டளைப்பீடத்திலிருந்து, கீரிசுட்டான் நோக்கி பின்வாங்கும்படி உத்தரவு வந்தது.

கீதா படையினரை மேலும் அங்குலம் கூட முன்னேற விடுவதில் என்ற முடிவுடன் கடும் எதிர்த் தாக்குதலைத் தொடுத்தாள். களமுனைத் தளபதி செல்வமே வியப்படையும் வகையில் பெண்கள் படையணியின் தாக்குதல் மூர்க்கமாக இருந்தது. அன்று ஏனோ கிபிர் கூட மூன்று முறை வந்து தாக்குதல்களை நடத்திய பின்பு அன்று பிற்பகல் வரவேயில்லை. முற்பகல் பத்து மணியளவில் சண்டை ஓய்ந்து விட்டது. கீதா வெறிபிடித்தவள் போலாகிவிட்டாள்.

நின்ற இடத்தை விட்டு பின் வாங்கும் நிலை ஏற்பட்டதுடன் 12 பெண் போராளிகள் வீரச்சாவடைந்தும் விட்டனர். அதிலும் அவளது பாதுகாப்பாளராக இருந்த செல்லக்குட்டி வீரச்சாவடைந்தது, அவளின் கோபத்தை மேலும் கிளறிவிட்டது. அவள் அவர்கள் அணியில் வயது குறைந்தவளாக இருந்ததுடன் எல்லோருக்கும் அவள் செல்லப் பெண்ணாகவேயிருந்தாள். அவள் கட்டளை பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தினாள்.

“வணக்கமண்ணை! 12 பெண் போராளியளும் 8 ஆண் போராளியளும் வீரச்சாவண்ணை”

“தெரியும்” “நாங்கள் எங்கடை நிலையளை விட்டு பின்வாங்கியிட்டம்” “தெரியும்” “அவன் பிடிச்ச இடத்தைப் பலப்படுத்தப் போறான்” “தெரியும்” “உடனடியாய் இறங்கி அடிக்கவேணும்” “தோற்கிறதுக்கும் போராளியளை பலி குடுக்கவும் ஒரு தாக்குதலை நடத்த ஏலாது”

“நாங்கள் இறங்கி அடிச்சு கலைப்பமண்ணை” “சண்டை நீங்கள் நிக்கிற இடத்தில மட்டுமில்லை. 30 கிலோமீற்றர் நீளத்துக்கு நடக்குது. நீங்கள் கட்டளையளை ஒழுங்கா நிறைவேற்றினால் போதும்” தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

தன் தோழிகளின் சாவுக்காக மட்டுமன்றி, சண்டையில் பின்வாங்கி விட்டமைக்காகவும் “ஓ”, என்று கதறி அழவேண்டும் போலிருந்தது. வெகு சிரமப்பட்டு அவள் அதை அடக்கிக் கொண்டாள். அவள் போய் போராளிகளின் வித்துடல்களைப் பார்வையிட்டு ஒவ்வொன்றாக வருடிவிட்டாள்.

மாலா கடந்த வாரம் தான் ஒரு போராளியைக் காதலிப்பதாக கீதாவுக்குத் தெரிவித்து அனுமதி பெற்றிருந்தாள். அவளும் கூட காதலை மறந்து கண்மூடி நீண்ட துயிலில் ஆழ்ந்துவிட்டாள். ஒரு பெரு மூச்சுடன் போய் செல்லக்குட்டியின் கன்னத்தை தடவினாள்.

அவளின் கண்கள் அவளையறியாமலேயே கலங்கின. மெல்ல குனிந்து செல்லக்குட்டியின் கன்னத்தில் முத்தமிட்டாள். வித்துடல்களைக் கொண்டு செல்ல அரசியல் துறையினர் வாகனம் வரவே, உடல்களை அவர்களிடம் ஒப்படைத்தாள்.

அன்று அதிகாலையிலேயே பள்ளமடுவில் கூடியிருந்தவர்கள் இலுப்பைக்கடவை நோக்கிப் புறப்படப்பட ஆரம்பித்தனர்.

ஐந்து மணிக்கே விடத்தல் தீவின் பங்குத் தந்தை எல்லோருக்கும் பாண் கொண்டுவந்து விநியோகம் செய்தார். அதையும் வாங்கிக் கொண்டு மக்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். பார்வதி சுந்தரத்திடம்,

“தம்பி, போய் எங்களுக்கும் பாணிலை ஒரு றாத்தல் வேண்டிவாவன், பழஞ்சோத்தோடை கலந்து சாப்பிடலாம்”, என்றாள். “அம்மா, ஒண்டும் கொண்டிராத சனம் வடிவாய் வாங்கிச் சாப்பிடட்டும்.நாங்கள் பழஞ்சோத்தக் கரைசு்சுக் குடிப்பம்” எனக்கூறி சுந்தரம் மறுத்துவிட்டான்.

பார்வதிக்கும் அவன் சொல்வது நியாயமாகவே பட்டது. அதற்கிடையில் முத்தம்மா போய் வரிசையில் நின்று ஒரு றாத்தல் பாண் வாங்கி வந்து பார்வதியிடம் கொடுத்தாள். அதை முருகேசருக்கும் பெருமாளுக்கும் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் பார்வதி அதை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டாள். அந்த வெட்ட வெளியில் காலைக்கடன் கழிப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை. மூன்று பெண்களும் சற்றுத் தொலைவில் உட்பக்கமாக போய் விஷயத்தை முடித்துவிட்டனர்.

ஆண்கள் பாடு விடிந்துவிட்டதால் திண்டாட்டமாகிவிட்டது. போகும் வழியில் எங்காவது இயற்கைத் தேவையை நிறைவு செய்யலாம் என எண்ணிக் கொண்டனர். பொருட்களையும், முருகேசர், பெருமாள் ஆகியோரையும் வண்டிலில் ஏற்றிவிட்டு மாடுகளைப் பூட்டினார் பரமசிவம். முத்தம்மா தமக்குரிய சமையல் பாத்திரங்களும் பருப்பு, சீனி, தேயிலை, அரிசி, கருவாடு போன்ற பொருட்களும் ஏற்றப்பட்டுவிட்டனவா எனச் சரி பார்த்துக் கொண்டாள்.

பரமசிவம் மாடுகளை நுகத்தில் பூட்டி பயணத்தை ஆரம்பித்தார். ஏனையவர்கள் பின்னால் நடக்கத் தொடங்கினர். அவர்கள் வந்து வீதிக்கு ஏறிய போது இரவு தன்னிடம் சோறு வாங்கிச் சாப்பிட்ட கிழவி அந்தப் புவரச மரத்தின் கீழ் படுத்திருப்பதைச் சுந்தரம் கண்டுவிட்டான். அவளருகில் பிய்ந்து கிடந்த சோற்றுப் பார்சலை நாய் ஒன்று தின்றுகொண்டிருந்தது. கிழவியையும் தங்கள் வண்டியில் ஏற்றிச் செல்லும் நோக்கத்துடன் அவளருகில் சென்று உடலைத் தொட்டு உலுப்பினான், உடல் சில்லிட்டுப் போயிருந்தது. அவன் மெல்ல,

“கிழவி செத்துப் போச்சுது!”, என்றான். “பாவம், இப்ப என்ன செய்யிறது?” என முத்தம்மா கேட்டாள். சுந்தரம் ஒரு பெருமூச்சுடன், “கிழவின்ரை சொந்தக்காறர் எப்பிடியும் தேடுவினை தானே, அப்பிடியில்லாட்டி பங்குத் தந்தை ஏதாவது ஏற்பாடு செய்வார்”, என்றான்.

முத்தம்மாவுக்கு கிழவியின் பிரேதத்தை அந்த நிலையில் விட்டுப்போக மனம் மறுத்தது. ஆனால் அவளுக்கு இறுதிக்கிரியை செய்வதோ, புதைப்பதோ தங்களால் இயலக்கூடிய காரியமல்ல என்பதை அவள் உணர்ந்தாள்.

“அப்ப.. போவம்”, என்றுவிட்டு அவளும் நடக்க ஆரம்பித்தாள். ஒரு மனித ஜீவனின் இறந்த உடலை அனாதரவாக விட்டுச் செல்வது ஏதோ பெரும் குற்றம் ஒன்றைச் செய்வது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி சுந்தரத்தின் மனதை அழுத்தியது.

அதே வேளையில் எதிர்காலம் இப்பிடித்தான் இருக்குமோ என்ற கேள்வியையும் அவனுள் எழுப்பத் தவறவில்லை அவனின் மனம். ஏதோ ஒரு விதமான தாங்க முடியாத சோகத்துடன் இருவரும் மற்றவர்கள் பின்னால் நடக்கத் தொடங்கினர். அதிகாலையிலேயே பிரதான வீதி மக்களாலும் வாகனங்களாலும் நிறைந்துவிட்டது. வண்டிலை மிகவும் மெதுவாகவே செலுத்தவேண்டியிருந்தது.

பின்னால் வரும் உழவுயந்திரங்களுக்கு வழி விட்டுக்கொடுப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. சில சமயங்களில் கிடங்கில் விழுந்து வண்டி புரண்டு விடும் போலவும் தோன்றியது. தேவையான நேரங்களில் முருகரப்புவும் முத்தையாவும் சுந்தரமும் வண்டிலின் பின்புறத்தில் பிடித்து தள்ளவும் உதவினர். இலுப்பைக் கடவைக்கு வந்து சேர நேரம் ஒன்பது மணியாகிவிட்டது.

ஒரு வயல் வெளியின் ஓரமாக நின்ற புவரச மர நிழலை நோக்கி வண்டிலையை செலுத்தினார் பரமசிவம். வண்டிலை நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்துவிட்டார். காலைக்கடன் கழிக்க ஆண்களனைவரும் சற்றுத் தூரம் உட்பக்கமாகப் போகவேண்டியிருந்தது. அதற்குள் பார்வதியும் வேலாயியும் பழம் சோற்றுப்பானையை இறக்கி காய்ந்து போன பிஞ்சு மிளகாயையும் வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு கஞ்சியாக்கினர்.

பாணை இரண்டாக வெட்டி முருகேசரிடமும், பெருமாளிடமும் கொடுத்தாள் பார்வதி. அவர்கள் தாங்களும் பழைய கஞ்சி அருந்துவதாகக் கூறி பாணை வாங்க மறுத்தனர். “சுகமில்லாதனீங்கள், உங்களுக்கு பழங்கஞ்சி வேண்டாம்” எனக் கூறி பாணை அவர்கள் கையில் திணித்தாள் பார்வதி.

அந்த ஊர் இளைஞர்கள் இரண்டு உழவுயந்திரப் பெட்டிகளில் நிறைய இளநீர் கொண்டுவந்து மக்களுக்கு வழங்கினார்கள். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒரு பகுதியினருக்குக் கூடப் போதவில்லை. அவர்கள் மீண்டும் கொண்டுவருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள். அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கோவில் முற்றத்தில் ஒரு பெரிய கிடாரத்தை வைத்துக் கஞ்சி காய்ச்சினர்.

அங்குமிங்குமாகச் சிதறியிருந்த மக்கள் அங்கேயே தங்கிவிடுவதாக முடிவெடுத்தனர். மடு, தட்சிணாமருதமடு போன்ற இடங்களிலிருந்து கூடாரச் சேலைகளைக் கொண்டு வந்திருந்த படியால் வசதியான இடங்கள் பார்த்து இருப்பிடங்களை அமைக்க ஆரம்பித்தனர். ஏனையோர் பாடு திண்டாட்டமாகிவிட்டது. மரநிழல்களே அவர்களின் குடியிருப்புக்களாகின. காலை உணவாகப் பழங்கஞ்சியை அருந்திவிட்டு பரமசிவம் குழுவினர் பாலியாற்றை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24