நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 42
சுந்தரம் மருத்துவமனைச் சந்தியில் வந்து ஏறியபோது அது ஓரளவு வெறிச்சோடிப் போய்விட்டது.
நோயாளர்களையோ, காயமடைந்தவர்களோ எவருமே அங்கு காணப்படவில்லை. மருத்துவமனைப் பணியாளர்களும் சில இளைஞர்களும் மருத்துவமனையின் தளபாடங்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவன் சைக்கிளை தான் ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு வீதியில் ஏறிய போது விடத்தல் தீவுப் பக்கமாக விமானங்கள் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன.
நோயாளர்களையோ, காயமடைந்தவர்களோ எவருமே அங்கு காணப்படவில்லை. மருத்துவமனைப் பணியாளர்களும் சில இளைஞர்களும் மருத்துவமனையின் தளபாடங்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவன் சைக்கிளை தான் ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு வீதியில் ஏறிய போது விடத்தல் தீவுப் பக்கமாக விமானங்கள் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன.
மக்கள் செறிவாக வாழும் விடத்தல் தீவின் மீதே இப்படிக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தும் விமானப் படையினர் இலுப்பைக்கடவை மருத்துவமனையையும் விட்டு வைக்கப்போவதில்லை என்பதாலேயே அது வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாக அவன் கருதினான்.
ஏற்கனவே இடம்பெயர்ந்து பாடசாலையிலும் கோவிலிலும் தங்கியிருந்த மக்களில் ஒருவர் கூடக் காணப்படவில்லை. எல்லோரும் முழங்காவில் பக்கமாகப் போய்விட்டனர். வீதியில் மட்டும் ஏராளமான விடத்தல் தீவு மக்கள் கால்நடையாகவும் சைக்கிள்களிலும் நகர்ந்துகொண்டிருந்தனர்.
எங்கோ போவது, என்ன செய்வது அடுத்த வேளை உணவுக்கு எனன் வழி என்பதைப் பற்றிய எந்தவித தெளிவுமில்லாமலே, அவர்கள் உயிரை மட்டும் காக்கும் ஒரே நோக்கத்துடன் போய்க்கொண்டிருந்தனர்.
மன்னார் வளைகுடா மீன்பிடி, பள்ளிமுனை அட்டை குளிப்பு என மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர்கள் விடத்தல்தீவு மக்கள்.
அவர்கள் பிரமாண்டமான தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் கட்டி தங்கள் மத நம்பிக்கைகளின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தவர்கள் அந்த இடம் மிகவும் நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்டிருந்த போதிலும் அவர்கள் தங்களுக்கென வசதியான வீடுகளைக் கட்டியிருந்தனர்.
போர் பள்ளிமுனையை நெருங்கிய போதும் அவர்கள் பிடிவாதமாக இடம்பெயர மறுத்துவிட்டனர். இப்போது கிபிர், மிக் விமானங்களுக்கு உயிர்களையும் பலி கொடுத்து உடைமைகளையும் கைவிட்டு வெறுங்கையுடன் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் ஊரிலிருந்து எழும் கரும் புகை மண்டலத்தை ஏக்கத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தவாறே நடந்தனர்.
குருதியைக் கொதிக்க வைத்த அந்த வெயிலை விட அவர்களின் பெருமூச்சு பலமடங்கு வெப்பமாயிருந்தது.
அவன், முழங்காவிலுக்கு வந்து சேர்ந்த போது பிள்ளையார் கோவில் முன்றல், பொதுநோக்கு மண்டபம், பாடசாலை எல்லாமே மக்களால் நிரம்பி வழிந்தன.
பாடசாலை அதிபர் பிள்ளைகளின் மதிய உணவுக்காக வழங்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் ஒரு பகுதியைக் கொடுத்திருந்தார். பெரியதொரு கிடாரத்தில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்த ஊர் மக்கள் கத்தரிக்காய், வாழைக்காய் என்பவற்றைக் கொண்டுவந்து சாம்பார் செய்வதற்காக வெட்டிக்கொண்டிருந்தனர்.
முத்தையா தன்னிடமிருந்த தேயிலை, சீனி என்பன முடியும்வரை வந்தவர்களுக்கு தேனீர் போட்டுக் கொடுத்தார். அந்தப் பெருந்தொகை மக்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே அவரால் திருப்திப்படுத்த முடிந்தது.
சுந்தரம் வேலுப்பிள்ளை வீட்டுக்கு வந்து கடப்புத் தடிகளை கழற்றிவிட்டு உள்ளே வந்த போது முருகேசரும் பெருமாளும் மாமரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
முருகேசர், “எங்கயடா தம்பி.. இவ்வளவு நேரமும் போனனீ?.. கொம்மா என்னவோ ஏதோவெண்டு தவிச்சுக்கொண்டு நிக்கிறா”, என்றார்.
சத்தம் கேட்டு கிணற்றடியில் நின்ற பார்வதி ஓடாத குறையாக அங்கு வந்து சேர்ந்தாள்.
“எங்கையப்பு போனனீ? சிவத்தைச் சண்டையிலை விட்டிட்டு என்ன நேரம் எது நடக்குமோ எண்டு கலங்கிக் கொண்டு நிக்கிறம். உன்னையும் காணேல்லயெண்டால் என்ன பாடுபடுவம் எண்டு உனக்கு விளங்காதே?”
இரு கன்னங்களையும் கைகளால் தடவியபடி கேட்ட பார்வதியின் குரல் தளதளத்தது.
தாயின் தவிப்பு அவன் மனதில் ஏற்படுத்தி வைத்த முடிவை ஒரு முறை உலுப்பத் தவறவில்லை.
“பின்னேரக் கையிலை கல்விளான் பக்கம் யானை நடமாட்டம் கூடவெண்டு செல்வராஜா மாமா தான் நிண்டு இண்டைக்குப் போகச்சொன்னவர்”, எனச் சொல்லிச் சமாளித்தான் சுந்தரம்.
“சரி.. சரி.. கையைக் காலைக் கழுவிப் போட்டு சாப்பிட வா”, என்றாள் அவள்.
“நான் இயக்கப் பொடியளோட சாப்பிட்டனணை.. முதல் களை தீரக் குளிச்சுப் போட்டு வாறன்”, என்றவாறே கிணற்றடியை நோக்கி நடந்தான்.
அவன் கிணற்றடிக்கு அவசரமாய்ப் போன காரணம் குளிப்பதைவிட அங்கு நின்று தன்னை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த முத்தம்மாவைச் சந்திக்க என்பதை பார்வதி உணரவில்லை.
முத்தம்மா ஒரு விதமான பொய்க் கோபத்துடன் கேட்டாள்,
“போனால் போன இடம். வந்தால் வந்த இடம். வீட்டிலை இருக்கிறவை என்ன பாடுபடுவினம் எண்ட எண்ணமே இல்லை”
“நீ.. நீங்கள் பாடுபடுறதைப் பற்றி மட்டும் யோசிக்கிறாய்.. றோட்டிலை போய் பார்.. சனம் என்ன பாடுபடுதெண்டு”, எனக் கேட்டான் சுந்தரம்.
“அந்தப் பாடு எங்களுக்கில்லையே.. நாங்களும் இடம்பெயர்ந்த ஆக்கள் தானே? நாங்கள் என்ன செய்ய ஏலும்?”
சில வினாடிகள் மௌனத்தின் பின் அவன், “ஒருதருமே இடம்பெயராத நிலை வரவேணும்”
“நீங்கள் என்ன சொல்லுறியள்?”, குழப்பத்துடன் கேட்டாள் முத்தம்மா.
“ஒண்டுமில்லை.. குளிக்கப் போறன், போய் துவாயை எடுத்துக் கொண்டு வா”, என்றான் அவன்.
அவள் ஒரு மெல்லிய புன்னகையுடன்.. “உதெல்லாம் செய்ய நான் என்ன உங்கடை பொண்டாட்டியோ?” எனக் கேட்டாள்.
“ம், பொண்டாட்டி தான்.. இப்ப இல்லை.. வலு கெதியிலை”, என்றான் அவன்.
முத்தம்மாவின் முகம் திடீரெனச் சிவந்து போக அவள் ஒரு இனம் புரியாத குதூகலத்துடன் துவாய் காயப்போடப்பட்டிருந்த கொடியை நோக்கி நடந்தாள்.
அவளை மனைவியாக்கியதும் அடுத்து அவன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் நடவடிக்கை பற்றி அவள் அறிந்திருந்தால் அவள் அப்படிச் சந்தோசப்பட்டிருக்க முடியாது.
குளித்துவிட்டு வந்ததும் சுந்தரத்துக்கு மீண்டும் பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது. அவன் தாயிடம் சோறு போடும்படி கேட்டான்.
பார்வதி ஒரு தட்டில் நெல்லுப் பச்சை அரிசிச் சோறும் போட்டு வெண்டிக்காய்க் குழம்பும் கத்திரிக்காய் பால்கறியும் விட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். ஒவ்வொரு பிடி சோறும் அவன் நாவுக்கு சுவையேறிய போது போராளிகளின் சாப்பாடு நினைவுக்கு வந்தது.
சுடச் சுடச் சோற்றையும், பெரு அவியலாய் காய்ச்சிய கறியையும் பொலித்தீன் பையில் போட்டுக் கட்டப்பட்டு அது பல மணி நேரத்தின் பின் அவர்கள் கைக்குக் கிடைக்கும். ஒரு பையில் இருவருக்கான சாப்பாடு இருக்கும். அதை அவிழ்க்கும் போது வெறும் கழியாகத் தான் வெந்து போய்க்காணப்படும்.
சில சமயங்களில் அது பழுதடைந்தும் போய்விடும். களமுனைப் போராளிகள் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. சாப்பாடு என்ன நிலையிலிருந்தாலும் அள்ளி வாயில் போட்டுவிட்டு எதிரியை முகம் கொள்வது பற்றியே அவர்களின் சிந்தனை மேலோங்கியிருக்கும்.
தனது அண்ணன் சிவமும் அப்படியான உணவுடன் தான் களமாடிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைத்த போது அவனால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை.
அவன் தட்டை தாயிடம் நீட்டியவாறு, “போதுமெணை”, எனச் சொன்னான்.
“ஒரு கொஞ்சம்.. கொஞ்சம் சாப்பிடு மோனை.. கன தூரம் சைக்கிள் ஓடினனீ”, எனக் கூறினாள் பார்வதி.
பல நாட்கள் தொடர்ந்து பசி தாகத்தைப் பொருட்படுத்தாது சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தன் தமையனுக்கும், “ஒரு கொஞ்சம் இன்னும் ஒரு கொஞ்சம்”, என உணவு கொடுப்பவர்கள் யார் என நினைத்த போது ஏக்கம் அவன் நெஞ்சை நிறைத்துக் கொண்டது.
“போதுமணை”, என்றவாறே தட்டைத் தாயிடம் கொடுத்துவிட்டு அவன் எழுந்து போய்க் கையைக் கழுவினான்.
தான் தன் தமையனை நினைத்துக் கொண்டதை தாயிடம் சொன்னால் அவளின் நிலைமை என்னவாகும் என்பதை அவன் நன்றாகவே தெரிந்திருந்தபடியால் மனதை அடக்கிக் கொண்டு அப்பால் போனான்.
சிறிது நேரத்தில் வெளியே போயிருந்த பரமசிவமும், முருகரப்புவும் அங்கு வந்து சேர்ந்தனர். சுந்தரம் சவாரி செல்வராஜாவின் நிலைமையை ஒன்றும்விடாமல் சொன்னான்.
பரமசிவம் ஒரு பெரு மூச்சுடன் சொன்னார்,
“பாவம்.. காசு தராட்டில் பரவாயில்லை.. ஆனால் இவ்வளவு கஷ்டத்தை ஒரேயடியாய் மனுஷன் என்னண்டு தாங்கிறான்”
“கஷ்டம் இப்பவெல்லாம் எங்களைக் கேட்டுக்கொண்டே வருகுது.. வந்தால் என்ன செய்யுறது.. தாங்கத் தானே வேணும்”, என்றார் முருகர்.
“முருகர் உனக்கு பெண்சாதி, பிள்ளை குட்டியின்ரை அருமை விளங்காது.. இரண்டு பிள்ளையள், மருமேன் எண்டு அடுத்தடுத்து யமனட்டை குடுக்கிறது தாங்கத் தக்க விஷயமே?” எனச் சற்றுக் கடுமையாகக் கேட்டார் பரமசிவம். அந்த வார்த்தைகள் முருகரைச் சற்று அதிர வைத்துவிட்டன. பரமசிவம் பிள்ளைகளில் எப்படியான பாசம் வைத்திருக்கிறார் என்பது முன்பே முருகருக்குத் தெரியும்.
ஆனால் துணிச்சலுடன் ஆபத்தான காரியங்களில் இறங்கும் சிவத்துக்கு ஏதாவது நடந்துவிட்டால் பரமசிவம் சற்றும்கூடத் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதை அவரின் கோபம் முருகருக்கு உணர்த்தியது.
எனினும் அவர் கதையைத் திசை திருப்பும் விதமாக, “எனக்கே பிள்ளையள் இல்லை.. இயக்கப் பெடியள் எல்லாம் என்ரை பிள்ளையள் தானே?” என்றார்.
அவர் அன்றுவரை தான் குஞ்சுக்குளம் காட்டுக்கு சிவத்தைக் கூட்டிச் சென்ற கதையைப் பரமசிவத்துக்கும் சொன்னதில்லை. இனியும் அதைச் சொல்லப்போவதுமில்லை.
அப்போது அங்கு வந்த வேலுப்பிள்ளை, “என்ன பொது நோக்கு மண்டபப் பக்கம் போகேல்லையே?”
“ஏன்.. என்ன பிரச்சினை?”, எனக் கேட்டார் முருகர்.
“அஞ்சலிக்கெண்டு பதினாறு பொம்பிளைப்பிள்ளையளின்ரையும் ஆறு பொடியங்களின்ரையும் வித்துடல் கொண்டுவந்திருக்கிறாங்களாம்.
“யார் பெத்த பிள்ளையளோ ?”, என்றுவிட்டு இருந்த இடத்தைவிட்டு எழுந்தார் பரமசிவம்.
“வா.. வா.. போயிட்டு வருவம்”, என்றுவிட்டு முன்னால் நடந்தார் முருகரப்பு. பதட்டத்துடன் அவரைத் தொடர்ந்தார் பரமசிவம்.
(தொடரும்)
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 43
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44
-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-
(தொடரும்)
முன்னைய தொடர்களை படிக்க
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44