நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 43
பரமசிவமும் முருகரும் பொதுநோக்கு மண்டபத்தை அடைந்த போது மக்கள் வித்துடல்களுக்கு மலர்
வணக்கம் செலுத்திக்கொண்டிருந்தனர். சுற்றி அமர்ந்திருந்த மக்களின் முகங்களில் எல்லையற்ற சோகம் படர்ந்திருந்த போதிலும் அங்கு ஒருவிதமான புதினம் கலந்த அமைதி நிலவியது. பரமசிவம் முருகரின் பின்னால் வரிசையில் நின்று மெல்ல, மெல்ல ஒவ்வொரு அடியாய் முன்னால் நகர்ந்தார். அவர் மனம் என்றுமில்லாதவாறு பதை பதைத்துக் கொண்டிருந்தது. சிவம் போராளியாகக் களமாடத் தொடங்கி பல வருடங்கள் கடந்துவிட்டன. அவர் எப்போதுமே அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதில்லை.
வணக்கம் செலுத்திக்கொண்டிருந்தனர். சுற்றி அமர்ந்திருந்த மக்களின் முகங்களில் எல்லையற்ற சோகம் படர்ந்திருந்த போதிலும் அங்கு ஒருவிதமான புதினம் கலந்த அமைதி நிலவியது. பரமசிவம் முருகரின் பின்னால் வரிசையில் நின்று மெல்ல, மெல்ல ஒவ்வொரு அடியாய் முன்னால் நகர்ந்தார். அவர் மனம் என்றுமில்லாதவாறு பதை பதைத்துக் கொண்டிருந்தது. சிவம் போராளியாகக் களமாடத் தொடங்கி பல வருடங்கள் கடந்துவிட்டன. அவர் எப்போதுமே அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதில்லை.
அது மட்டுமன்றி, “அவன் காத்தானுக்கல்லே நடிக்கிறவன். அவன் மாரியம்மன்ரை பிள்ளை.. அவனுக்கு முன்னாலை ஆரும் நிக்க ஏலுமே?” என அவர் பெருமையுடன் சொல்லிக்கொள்வதுண்டு.
அவர் பாலம்பிட்டியிலிருந்து வெளியேறிய பின்பு அவருக்கு இப்படியான மனக் குழப்பமும் பயமும் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்திருந்தன. அவர் தனது காணியின் பின்பகுதியில் வேப்பமரத்தின் கீழ் ஒரு கொட்டில் போட்டு சூலம் நட்டு முத்துமாரியை வழிபட்டு வந்தார்.
என்ன இடைஞ்சல் வந்தாலும் அவர் ஒவ்வொரு செவ்வாயும் விளக்கு வைத்து ‘மாரியம்மன் காப்பு’ பாடத் தவறுவதில்லை.
இப்படி இடப்பெயர்வு நீண்டு தொடரும் என அவர் எதிர்பார்த்திருந்தால் சூலத்தைக் கொண்டுவந்து ஏதோ ஒரு வேம்பின் கீழ் நட்டு வழிபட்டிருப்பார்.
ஒரு சில நாட்கள் பெரியமடுவில் தங்கிவிட்டு மீண்டும் பாலம்பிட்டிக்கு போய்விடலாம் என்ற அவரின் எதிர்பார்பு வீண் போய்விட்டது.
தான் அம்மனைக் கைவிட்டு வந்துவிட்டதால் அம்மனின் அருள் தன்னைவிட்டு விலகிவிட்டதாக எண்ணி மனதுக்குள் அவர் பயந்து கொண்டிருந்தார். அதன் காரணமாகவே இப்போதெல்லாம் சிவம் பற்றிய பயமும் அவருக்கு அடிக்கடி ஏற்பட ஆரம்பித்தது.
முருகர் மலர்களை கைகளில் எடுத்துக்கொண்டு முன் நகர பரமசிவமும் குனிந்து மலர்களை அள்ளிக்கொண்டார்.
பெண் பிள்ளைகளின் வித்துடல்களுக்கு மலர்களைத் தூவிய போதே அவரின் கண்கள் கலங்கிவிட்டன. ஆண் மாவீரர்களின் முகங்களைப் பார்த்த போது எல்லா முகங்களுமே சிவத்தின் முகம் போலவே தெரிந்தன.
அவர் திடீரென அதிர்ந்து போனாலும் ஒரு சில கணங்களிலேயே அது வெறும் பிரமை என்பதைப் புரிந்து கொண்டார். எனினும் கூட அவர்களும் தன்னைப் போல ஒரு தகப்பனின் பிள்ளைகள் என்ற நினைவு வந்து அவரின் மனதை வாட்டியது.
அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இருவரும் திரும்பும் போது பரமசிவம் முகருகரிடம், “நான் பெரிய பிழை விட்டிட்டன் முருகர்.. நான் வெளிக்கிடயுக்கை அதையும் கொண்டுவந்திருக்க வேணும்” என்றார்.
முருகர் கேலியாகச் சிரித்துவிட்டு, “பரமசிவம், நீ பிடிச்சு வைச்ச மண் பீடத்திலையும் கொல்லன் அடிச்சு வளைச்ச இரும்புக் கம்பியுக்கையும் அம்மனை அடக்கிவைக்க முடியுமே?” எனக் கேட்டார்.
“நீ என்ன சொல்லுறாய்.. முருகரப்பு?”
“தெய்வம் மண்ணிலையோ, இரும்பிலையோ, கல்லிலையோ இல்லை, மனதிலை தான் இருக்குது.. விளங்குதே?”
முருகர் சொல்வதிலும் சரி இருப்பது போலவே பரமசிவத்துக்கு தோன்றியது.
முருகர் தொடர்ந்தார், “நீ கிணத்தடியிலை போய் குளிச்சிட்டு, திருநூத்தை நெத்தியிலை பூசிக்கொண்டு கிழக்கை பாத்து அம்மனை நினைச்சுக் கும்பிடு. அவ முன்னாலை வந்து நிப்பா”, அவரின் வார்த்தைகள் அவருக்கு சற்று ஆறுதலைக் கொடுப்பது போல் தோன்றியது.
“சிவத்துக்கு ஆபத்து வர அம்மன் விடமாட்டா”, என மனதுக்குள் நினைத்தவராகச் சற்று நிம்மதியடைந்தார்.
சுந்தரம் தாயிடம் சவாரி செல்வராஜாவின் வீட்டு நிலைமைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் ஒன்றும் விடாமல் விளக்கிவிட்டு, “அம்மா முத்தம்மா நாத்து மேடைக்கு தண்ணி ஊத்தினவளே?”, எனக் கேட்டான்.
“நான் கவனிக்கேல்லை.. கேட்டுப்பார்…”, என்றான் பார்வதி.
கொட்டிலை விட்டு வெளியே வந்த சுந்தரம், “முத்தம்மா.. முத்தம்மா..” எனக் கூப்பிட்டான்.
அவள் தங்களின் கொட்டிலுக்குள் நின்றவாறே எட்டிப்பார்த்தாள்.
அவன் கிணற்றடியில் வைத்து, “வலு கெதியிலை நீ என்ரை பெண் சாதி”, என்று சொன்னதிலிருந்து அவள் தன்னுள் ஒரு வித வெட்கம் உருவாகியிருப்பை உணர்ந்திருந்தாள்.
அவள் மெல்ல வெளியே வந்து , “என்ன?”, எனக் கேட்டாள்.
“நாத்து மேடைக்கு தண்ணி தெளிச்சனியே?”
“காலமை தெளிச்சிட்டன்.. பின்னேரம் இனித்தான்..”, என்றாள் அவள் ஒருவித தயக்கத்துடன்.
“சரி சரி.. வாளியை எடுத்துக்கொண்டு வா”, என்றுவிட்டு முன்னால் நடந்தான் சுந்தரம்.
முத்தம்மா வாளியையும் தகரப்பட்டையையும் எடுத்து நீர் நிரப்பிக் கொண்டு நாற்று மேடை நோக்கி நடந்தாள்.
நாற்று மேடைக்கு அருகில் குந்திய சிவம், “நல்ல விதை.. எல்லாம் முளைச்சிட்டுது. கண்டுகளும் நல்ல மூச்சாய் வருகுது”, என்றான்.
முத்தம்மா, “ம்..”, என்றாள்.
சுந்தரம் நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, “என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்?”, எனக் கேட்டான்.
“ஒண்டுமில்லை…”, என்று அவனின் முகத்தைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையுடன் சொல்லிவிட்டு அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அவளின் கால் பெருவிரல் மண்ணைக் கிளறியது.
என்றுமில்லாதவாறு அவள் தன்னிடம் வெட்கப்படுவது சுந்தரத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“ஏய்.. என்ன… இண்டைக்குப் புதிசாய் வெட்கம்”, எனச் சுந்தரம் கேட்டுவிட்டு எட்டி அவளின் கையைப் பிடித்தான்.
“அங்காலை அம்மா நிக்கிறா”, எனக் கிசுகிசுக் குரலில் கடிந்துவிட்டு அவள் கையை இழுத்துக் கொண்டாள்.
“அப்ப.. அம்மா அங்காலை இல்லாட்டில் இரண்டு கையையும் பிடிக்க விடுவியே?”, என ஒரு கேலிச் சிரிப்புடன் கேட்டான் சுந்தரம்.
“இப்பிடியான கதை என்னோட கதையாதேங்கோ…”, எனச் செல்லமாகச் சிணுங்கினாள்.
“இப்பிடியான கதை கதைக்கத்தானே இஞ்சை உன்னைக் கூட்டி வந்தனான்”
“என்னது?”, என வியப்புனும் ஒரு வித பயத்துடனும் முத்தம்மா கேட்டுவிட்டுக் குழப்பத்துடன் அவனின் முகத்தைப் பார்த்தாள்.
“இதிலை இரு!”
முத்தம்மா குடிசைகளின் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அவனிடமிருந்து சற்றுத் தள்ளியே அமர்ந்தாள்.
“முத்தம்மா.. நான் உன்னைக் கலியாணம் செய்யப் போறன்.. வலு வலு கெதியிலை”, என்றான் சுந்தரம்.
“ஆம்பிளையள் இப்பிடித்தான் கால நேரம் பார்க்காமல் இப்பிடியான விஷயங்களிலை அவசரப்படுறது போலை… இருக்க இடமில்லாமல் அலையுறம்.. அதுக்க கலியாணத்துக்கு அவசரமே?”, முத்தம்மா மிக நிதானமாகவும், மிகுந்த பொறுப்புடனும் அவனிடம் கேட்டாள்.
“ஓம்.. அவசரம் தான்.. எனக்கில்லை.. உனக்கு”
“நீங்கள் என்ன நினைக்கிறியள்.. எனக்கு அப்பிடி ஒரு அவசரமுமில்லை”, என்றாள் முத்தம்மா அவசரமாக இடைமறித்து.
“முத்தம்மா.. இப்ப போராட்டத்துக்கு கட்டாயமாக ஒவ்வொருவரும் இணைய வேண்டிய தேவையிருக்கு.. நீ போராளி குடும்பமுமில்லை.. அப்ப நீ போகத்தான் வேணும்.”
“மண்ணை மீட்கிற தேவைக்கு போகத்தான் வேணுமெண்டால் போறது தானே”, என்றாள் அவள் நிதானமாக.
“போகத்தான் வேணும்.. போராளி குடும்பமெண்டாலும் கூட நானும் போகத்தான் வேணும்.. ஆனால் நீ போனால் உன்ரை வருத்தக்கார அப்பாவையும் அம்மாவையும், உன்ர தம்பியையும் ஆர் பாக்கிறது?”
முத்தம்மா எதுவுமே பேசவில்லை. ஒரு பெருமூச்சுடன் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவன் தொடர்ந்தான், “நான் உன்னைக் கலியாணம் கட்டினால் நீ ஒரு குடும்பம் பெண். பிறகு நீ எங்கடை வீட்டு மருமகள். நான் போராளியாப் போனா.. உன்ரை குடும்பத்தையும் எங்கடை ஐயா, அம்மாவையும் நீ பாப்பாய்”
“ஓ.. உதுக்கே எனக்கு கலியாண ஆசை காட்டினனீங்கள்?” அவளின் கண்கள் கலங்கின.
“நாடு இருக்கிற நிலைமையில என்னைப் போலை இளந்தாரியள் போராடாமல் இருக்கலாமே?” அது பெரிய துரோகமல்லே? அதுக்காக வயது போன தாய், தேப்பனைத் தெருவிலை விட்டிட்டு போக ஏலாது!, ஆனால் நீ மருமோளானால் உரிமையோடை அவையைப் பாப்பாய்.. இல்லையே?”
“என்னாலை முடியாது.. நான் போறன்.. நான் போறன்”, என்றுவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள் முத்தம்மா.
“ஏய்.. நீ போனால். பெருமாளைக் கவனிக்க என்னாலை முடியுமே?” அவசரப்படாமல் யோசிச்சு முடிவு செய்”
“முடியாது.. முடியாது..!”, என்றுவிட்டு வேகமாக கொட்டிலை நோக்கி நடந்தாள் முத்தம்மா.
“ஏய்.. முத்து.. நில்.. நில்”என சுந்தரம் கூப்பிட்டதை அவள் காதில் வாங்கவேயில்லை.
சுந்தரம் பலமாக அவளைக் கூப்பிட்ட சத்தம் கேட்டுக் குடிசைக்கு வெளியே வந்த பார்வதி முத்து அழுது கொண்டு தன் குடிசையை நோக்கி வேகமாகப் போவதைக் கண்டுவிட்டாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
பார்வதி போய் பெருமாளின் குடிசைக்குள் எட்டிப்பார்த்தாள்.
முத்தம்மா வெறும் நிலத்தில் குப்புறப்படுத்தவாறு விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள்.
பார்வதி இனம் புரியாத குழப்பத்துடன்.. “முத்து.. என்னடி.. என்னடி நடந்தது?” எனக் கேட்டவாறே அவளின் அருகில் அமர்ந்தாள்.
பார்வதியின் குரலும் மெல்ல அவள் முத்தம்மாவின் முதுகில் வருடியதும் முத்தம்மாவைத் திடுக்கிட்டு எழ வைத்தன. அவள் தடுமாற்றத்துடன், “ஒண்டும்.. ஒண்டுமில்லை..!”, என்றாள் தன் கண்களைத் துடைத்தவாறே.
“ஒண்டுமில்லாமலே இப்பிடி குப்புறப் படுத்து விம்மி விம்மி அழுகிறாய்”, என்ன நடந்தது சொல்லு!”
முத்தம்மா எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.
பார்வதி மீண்டும் கேட்டாள், “என்ன பேசினவனே.. இல்லாட்டி அடிச்சவனே.. அவனுக்கு பயிரைச் சரியாய் பாக்காட்டில் கெட்ட கோபம் வரும்”
முத்தம்மா அவசரமவசரமாக மறுத்தாள், “இல்லை.. இல்லை.. அவர் அப்பிடி ஒண்டும் செய்யேல்லை”
பார்வதி சில வினாடிகள் யோசித்துவிட்டு, “அப்பிடியெண்டால் ஏதாவது கெட்ட விதமாய் நடக்க பாத்தவனே?” என சந்கேத்துடன் கேட்டாள்.
உடனடியாவே, “ஐயயோ.. அவர் அப்பிடியான ஆளில்லை”, என முத்தம்மா இடைமறித்தாள்.
“அப்ப.. என்ன நடந்தது?”
முத்தம்மா தலையைக் குனிந்தவாறு மீண்டும் மௌனமாகவே பார்வதி, “நீ சொல்லாட்டில் விடு.. நான் அவனையே கேக்கிறன்”, என்றுவிட்டு எழுந்தாள்.
“ஐயயோ.. வேண்டாம்.. வேண்டாம்.. அவரைக் கேட்டுப் போடாதேங்கோ.. நான் சொல்லுறன்”, என முத்தம்மா அவளைத் தடுத்தாள்.
அந்த நேரம் பெருமாள் அங்கு வரவே முத்தம்மா தாழ்ந்த குரலில்
“நான் அங்க வந்து சொல்லுறன்”, என்றாள்.
(தொடரும்)
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 43
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44
-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-
(தொடரும்)
முன்னைய தொடர்களை படிக்க
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44