Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 16

அந்த மரத்தை நோக்கிய போது அவர்கள் நிற்குமிடம் கஜுவத்தை இராணுவமுகாமிலிருந்து நான்கு அல்லது  ஐந்து
கிலோமீற்றருக்குள்ளேயே இருக்க வேண்டுமென சிவம் ஊகித்துக் கொண்டான்.சின்னப்பர் சொன்னார்,

“இப்பிடியே நேர கஜூவத்தையை நோக்கிப் போனமெண்டால் இடையில ஒரு பெரிய கஞ்சாத் தோட்டம் கிடக்குது. அது ஒரு சிங்களவன் நடத்துறான். நாலு பக்கமும் கடுமையான காவல். ஆர் அந்தப் பக்கம் போனாலும் வெடிதான்.. கதை பேச்சுக்கே இடமில்லை”.

முருகரும் அந்தக் கஞ்சாத் தோட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் இராணுவ முகாமுக்கு அண்மையில் கஞ்சாத் தோட்டம் இருப்பதைக் கேள்விப்பட்ட போது சிவத்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

“அப்பு.. அந்த அறுத்தோடி எங்கை போகுது?” எனக் கேட்டான் சிவம்.

“இது இந்த வெட்டையில இரண்டாய்ப் பிரிந்த நாங்கள் இப்ப வந்த அறுத்தோடியாலை போய் அந்த சின்ன மோட்டையிலை முடிஞ்சிடும். மழை நேரம் மோட்டை நிறைஞ்சு காட்டுக்கை தண்ணி பாய்ஞ்சு எங்கட கழிவாத்தில விழும். அது அப்பிடியே போய் முதலைக்குடாவுக்கு கீழை அருவியாத்திலை விழும்”, என்றார் சின்னப்பர்.

“அப்ப.. இந்தப் பெரிய அறுத்தோடி…?”

“இதிலை வாற தண்ணி நேர போய் குஞ்சுக் குளத்திலை விழும்” 

ஒரு கிளை குளத்தில் சேர்ந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சி பின் கழிவில் சேர மற்றக் கிளை குறுக்குப்பாதை பிடித்து அதே கழிவில் சேர்வதை நினைத்த போது சிவத்துக்கு வியப்பாக இருந்தது.

இப்படியான பாதைகளையே ஆழ ஊடுருவும் படையணியினர் பயன்படுத்தக் கூடும் என அவன் கருதினான்.

முருகரும் தாங்கள் வந்த நோக்கத்தை மறந்துவிடவில்லை.

“அண்ணை உப்பிடியே அறுத்தோடியோடை குளம் மட்டும் போய் பாத்திட்டு வருவமே?”, எனக் கேட்டார் அவர்.

“சரி.. போய் பாப்பம்”, என்றுவிட்டு சின்னப்பர் அறுத்தோடிக்குள் இறங்கி அடுத்த கரைக்கு ஏறி அதன் ஓரமாக நடக்கத் தொடங்கினார்.

சிவமும் மலையவனும் இரு பக்கங்களையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டே நடந்தனர். தொடர்ந்து நடந்தபோது காட்டுக்குள்ளிருந்து வந்து அந்தப் பெரிய அறுத்தோடியுடன் இணையும் சில குழிகளைக் கடக்கவேண்டியிருந்தது.

அப்படியான ஒன்றில் இறங்கி ஏறும் போது சிவம் திடீரென..

“அப்பு.. கொஞ்சம் நில்லுங்கோ…” என்றான்.

நின்று திரும்பிப் பார்த்த சின்னப்பரிடம்,

“அங்கை பாருங்கோ”, என்றுவிட்டு அவன் வாடிக்கிடந்த காட்டுக் கொடிகளைக் காட்டினான்.

“பொறு வாறன்”, என்றவிட்டு திரும்பி வந்து அந்தக் கொடித் துண்டுகளைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, “இது கால் சுத்திக் கொடி”, என்றார்.

முருகரும் வாங்கிப் பார்த்துவிட்டு சிவத்திடம், “இது சும்மா நிலத்திலை கிடக்கும். மிதிச்சமெண்டால் காலைச் சுத்திப் போடும். கழட்டிக் கொள்ள ஏலாது. ஒரு பக்கத்தால கழட்ட மற்றப் பக்கத்தால சுத்திப்போடும்”, என்றார்.

சின்னப்பரும், “எங்களைப் போலை அனுபவமுள்ளவைக்கு அதைக் கழட்டுறது எப்பிடி எண்டு தெரியும். புது ஆக்களெண்டால் அதுகளை அறுத்துத்தான் காலைக் கழட்ட வேணும் இல்லாட்டில் அதிலை கிடக்க வேண்டியது தான்”, என்றார்.

சிவம் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் அந்தக் கிளை அறுத்தோடியின் கரையில் அந்தக் கொடி படர்ந்து கிடந்தது.

“அப்பு.. அது தான் அந்தக் கொடியே?”

“ஓமோம்.. அதுதான் என்றுவிட்டு சின்னப்பர் அருகில் போனார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். அந்த வெட்டப்பட்ட கால் சுற்றிக் கொடியின் அருகில் வேட்டைச் சப்பாத்துக்களின் அடையாளங்கள் மண்ணில் அழியாமல் கிடந்தன.

முருகர் சொன்னார், “அப்பு.. அவங்கள் இதாலை தான் வந்திருக்கிறாங்கள்” சின்னப்பர் சற்று யோசித்தவாறு,

“வேட்டைச் சப்பாத்து எண்டால் ஆமி தான்.. ஆனால் அவங்கள் ஏன் இதுக்கை வரப்போறாங்கள்.. ஏன் இஞ்சை வைச்சு சாப்பிடுறாங்கள்.. ஒண்டுமே விளங்குதில்லை” எனக் குழம்பினார். 

ஆனால் சிவத்துக்கு எல்லாமே விளங்கியிருந்தாலும் அவன் எதுவுமே பேசவில்லை.

“வாருங்கோ.. இப்பிடி கொஞ்சத்தூரம் போய்ப் பாப்பம்”, என்றுவிட்டு சின்னப்பர் அந்தக் கிளை அறுத்தோடியினூடாக நடக்க ஆரம்பித்தார். அருகிலிருந்த பற்றைகள் இடைஞ்சல் செய்த போதிலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் நடந்துகொண்டிருந்தார். 

போகப் போக காடு பெரும் மரங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அறுத்தோடியின் மணற்பாங்கான இடங்களில் வேட்டைச் சப்பாத்தின் அடையாளங்கள் தென்பட்டன. சின்னப்பர் சிறிது தூரம் சென்ற பின்பு,

“முருகர்.. உப்பிடியே நேரை போனால் வில்பத்துக் காடு தான். அங்காலை நாங்கள் வேட்டைக்குப் போறேல்லை. உங்காலை காடு பார்த்து பொடியளுக்கு பிரியோசனமில்லை.

மற்றது ஆரோ வித்தியாசமான ஆக்கள் காட்டுக்கை இறங்கியிருக்கிறாங்கள். எண்டும் விளங்குது. ஆனால் இவங்கள் வில்பத்து பக்கத்தாலை தான் வந்திருக்கிறாங்கள் எண்டும் விளங்குது. இனித் திரும்புவம் எண்டு யோசிக்கிறன்” என்றார்.

முருகர் சிவத்தைப் பார்த்தார். அவனும், “ஓமப்பு திரும்புவம்”, என்றான். போன பாதையிலேயே திரும்பவும் கழிவாற்றங்கரைக்கு அவர்கள் வந்துசேர்ந்தனர். சிவம் கழிவாற்றைப் பார்த்தான்.

அது வளைந்து வளைந்து சென்று காட்டுக்குள் மறைந்தது. அவன் சின்னப்பரிடம், “இது எங்கையப்பு போகுது?” எனக் கேட்டான்.

“உது உப்பியே போய் முதலைப்பிட்டிக்கு கொஞ்ச தூரம் கீழை போய் விழும். பாக்கிறதெண்டால் வாருங்கோ போவம்; கன தூரம் இல்லை”, என்றுவிட்டு கழிவாற்றங்கரையால் நடக்கத் தொடங்கினார் சின்னப்பர்.

அவ்விடத்தில் காடு அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. இடையிடையே பெரும் மருதமரங்களைக் காணக்கூடியதாக இருந்தால் இவ்விடம் நல்ல நீரோட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டுமென சிவம் ஊகித்துக் கொண்டான். அருவியாற்றங்கரைக்கு வந்ததும் சின்னபர்,

“இதிலை ஆறு கொஞ்சம் ஒடுக்கமெண்டாலும் வேகமும் ஆழமும் கூட. ஆத்துக்கு அங்காலை போறதெண்டால் இதக் கடந்து முதலைப்பிட்டியிலை தான் இறங்கவேணும்” என்றார்.

“இதிலை வேறை இடத்திலை கடக்கேலாது”,

“கடக்கலாம். ஆனால் நேரை ஆத்துக்கு குறுக்க போனால் பள்ளங்களிலை விழுந்து தண்ணியோட போக வேண்டியது தான். தெரிஞ்சவங்கள் பள்ளங்களை விலத்தி ஏரி மாதிரிக் கிடக்கிற இடங்களிலை கடப்பார்கள். மாரியெண்டால் நினைச்சுப் பார்க்க ஏலாது”, என்றார் அவர்.

தன் கேள்விகளுக்கு அவர் தரும் ஒவ்வொரு பதில்களும் ஆழ ஊடுருவும் படையணியினரின் பாதையை அவனுக்கு வரைபடம் காட்டி விளங்கப்படுத்துவது போன்று சிவத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன.

அவன் சிறுத்தைப் படையணியில் இருந்த போது ஒரு முறை ஒரு தாக்குதலில் பங்கெடுத்துவிட்டுத் திரும்பும் போது காடு மாறி முள்ளக் காட்டுக்குள் அகப்பட்டுப் படாத பாடு பட்டதும், பின்பு கொக்குகள் பறந்த திசையை நோக்கி நடந்ததும், புவசரன் குளத்தில் ஒரு வயல் காவல் கொட்டிலில் போய் மிதந்ததும் நினைவுக்கு வந்தது.

பின்பு விவசாயின் உதவுடன் தம்பனையின் பின் பக்கத்தால் வந்து பண்டிவிரிச்சானை அடைந்தார்கள். ஆனால் சின்னப்பர், முருகப்பர் போன்ற வேட்டைக்காரர்கள் எவ்வளவு துல்லியமாக காடுகளையும், அங்குள்ள ஆறுகள், நீர் நிலைகள் என்பவற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்த போது அவர்கள் மீது ஒரு தனியான மதிப்பு உருவாகியது.

மதியம் கொட்டிலுக்கு திரும்பிய அவர்கள் சிவம் கொண்டு வந்த அரிசியில் சமைக்க ஆரம்பித்தனர். முருகர் பருப்பையும் கருவாட்டையும் போட்டு ஒரு கறி வைக்க, சின்னப்பர் உருக்கி ஒரு போத்தலில் விட்டு வைத்த பன்றி நெய்யில் மரை வத்தலைப் பொரித்து எடுத்தார்.

முருகர் தோட்டத்தின் ஒரு மூலையில் நின்று பிம்பிளி மரத்தின் காய்களைப் பிடுங்கி வந்து புளிக்குப் பதிலாக பருப்புக் கறியில் போட்டு அவிய விட்டார். சிவமோ மலையவனோ அப்பிடி ஒரு சுவையான உணவை முன் எப்பொழுதுமே சாப்பிடுவதில்லை.

தேங்காய், கடுகு, சீரகம் என எதுவுமே இல்லாமல் எப்பிடி இவளவு சுவையான உணவைச் சமைக்க முடியும் என அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சாப்பிட்டு முடித்த பின்பு சின்னப்பர்,

“இரவைக்கு நில்லுங்கோவன் ஒரு பண்டி வெடி வைச்சுக் கொண்டு போகலாம்” என்றார். “என்னண்டண்ணை இஞ்சையிருந்து காவிறது? பொழுது படத் தானே போறம்  மடுவுக்கை இறங்கினாப் போலை பாப்பம்”, என்றார் முருகர்.

சின்னப்பரும் அதை ஏற்றுக்கொண்டார். திரும்பி வரும் போது அருவியாற்றைக் கடந்து, வண்டில் பாதையால் வந்து ஒற்றையடிப் பாதையால் இறங்குமிடம் வந்த போது முருகர்,

“தம்பியவை நாங்கள் இனி வேற ஒரு பாதையால போவம். நேர போய் உங்கட இடத்திலை மிதக்கும்” என்றார். நால்வரும் வண்டில் பாதையால் நடந்து சிறிது தூரம் சென்ற பின்பு வலப்புறமாகத் தென்பட்ட ஒரு ஒற்றையடிப் பாதையில் இறங்கினர். ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்கள் நடந்த பின்பு ஒரு தார் வீதியைக் கடக்க வேண்டி வந்தது.

“தம்பி.. இது மதவாச்சி றோட்டு.. இதைக் கடந்து கொஞ்சத் தூரம் போக குருக்களுரின்ரை பின் பக்கம் வரும். அதால போய் வவுனியா றோட்டைக் கடந்து கொஞ்ச இடம் போக பண்டிவிரிச்சான் குளம் வரும். பிறகென்ன அப்பிடியே அலைகரையாலை போக கீரிசுட்டான் தானே?, நாங்கள் போன இடத்துக்கு இந்தப் பாதை வலு கிட்ட. ஆனால் வலு அவதானமாய் இருக்க வேணும்”, என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார் முருகர்.

அவர்கள் பின்புறமாகக் குருக்களுரைக் கடந்த போது கிராமம் இருளில் உறைந்து போய்க் கிடந்தது. ஏதோ ஒரு வித மயான அமைதி நிலவுவதாகவே சிவத்துக்கு தோன்றியது. அவர்கள் வவுனியா வீதியை அண்மித்த போது வீதியில் ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. நால்வரும் பின் வாங்கிப் பற்றைகளுக்குள் படுத்துக் கொண்டனர். வந்த வெளிச்சம் சற்றுத் தொலைவில் வந்ததும் அணைந்தது. நால்வரும் உடனடியாகவே தங்கள் துப்பாக்கிகளைத் தயார் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு தனித்தனி இடங்களில் போய்ப் படுத்துக் கொண்டனர்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)