நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் -15
சுந்தரம் எதுவும் பேசாமல் போனமை அவளுள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லித் தன்னுடன் சண்டையிட்டிருப்பான்
என்றே எதிர்பார்த்தாள். அவனின் பின்னால் ஓடிச்சென்று அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் என ஒரு உணர்வு அவளை உந்தித் தள்ளிய போதும் தாய் வேலம்மா அருகில் நின்ற காரணத்தால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டாள்.
கடகத்தை நிரப்பும் முகமாக மிளகாய்களை வேகமாக ஆய ஆரம்பித்தாள். பத்து பதினைந்து நிமிடங்களில் அரைக்கடகம் நிறைந்துவிட்டது. கைகள் மிளகாய்களை ஆய்ந்த போதும் கண்கள் அடிக்கடி கொட்டில் வாசலை நோக்கிப் பாய்ந்தன. அவன் வெளியில் தென்படவேயில்லை.
“அம்மா.. நீங்க பிடுங்கினதையும் தாங்க”, என்று கூறிவிட்டு வேலம்மா ஆய்ந்த மிளகாய்களையும் தனது கடகத்தில் நிரப்பிக் கொண்டு முத்தம்மா கொட்டிலை நோக்கி நடந்தாள். அவள் கொட்டிலுக்குள் சென்ற போது சுந்தரம் பிஞ்சுமிளகாய் குவியலிலிருந்து செம்பழங்களை தெரிந்து வேறொரு கடகத்தில் நிரப்பிக்கொண்டிருந்தான்.
அவள் குவியலில் மிளகாயைக் கொட்டிய போதும் அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.
அவளால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அவள் மெல்லிய குரலில்,
“என்னிலை கோபமே?” எனக் கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை.
அவள் ஒரு சிணுங்கலுடன் மீண்டும் கேட்டாள்,
“சொல்லுங்கோவன், என்னிலை கோபமே?”
அவன் அவளை நிமிர்ந்துபார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன்,
“இல்லை.. எனக்கு என்னிலை தான் கோபம்”, என்றான்.
“நீங்கள்.. என்ன சொல்லுறியள்?”
“இல்லை. மாவீரருக்கு நீ அஞ்சலி செய்ததைப் பகிடி பண்ணுற அளவுக்கு நான் முட்டாளாய் போனன்”
அவள் சில விநாடிகள் எதுவும் பேசவில்லை. பின்பு,
“நான் அதை உங்களிட்டை இதமாய்ச் சொல்லியிருக்கலாம். கோவிச்சிருக்கக் கூடாது தானே?” என்றாள் அவள்.
சுந்தரத்தின் கோபம் கவலை எல்லாம் அவளின் வார்த்தைகளுடன் எங்கோ பறந்துவிட்டது.
எழுந்து அவளருகில் வந்து மதுரமாக அவன்,
“ஏன்.. என்னைக் கோவிக்க உனக்கு உரிமை இல்லையே?”
அவள் மெல்லிய ஒரு புன்னகையுடன், “இல்லை”, என்றாள் சுந்தரம் வியப்புடன்,
“ஏன் அப்பிடி?”
“அப்பிடி நீங்கள் எனக்கு உரிமையைத் தந்திட்டு எங்கட அப்பா இரவில குடிச்சிட்டு வந்து அம்மாவுக்கு அடிக்கிற மாதிரி எனக்கடிக்கிற உரிமையை நீங்கள் கேட்டால் என்ன செய்யிறது?”
“அப்ப, நாங்கள் அம்மா அப்பாவாகிறதெண்டு முடிவு எடுத்திட்டியே?” என ஒரு மெல்லிய நகைப்புடன் கேட்டான் சுந்தரம்.
அவள் முகம் திடீரெனச் சிவந்தது. பின்..“சீ.. ஆசைதான்!” எனச் சொல்லிவிட்டு வெளியே போனாள் முத்தம்மா.
மனம் மெல்ல இறகு விரித்துப் பறப்பது போன்று ஒரு சுகம் அவனில் பரவி ஒருவித மகிழ்ச்சியை உண்டுபண்ணியது.
சுந்தரம் தகப்பனிடம் மண்வெட்டியை வாங்கி தண்ணிமாற மிளகாய்ப் பாத்திகளை நோக்கிப் போனான்.
சின்னப்பர் அதிகாலையிலேயே எழுந்து சேனைக்குள் இறங்கிவிட்டார். மறிப்பை உயர்த்திவிட்டு பயிர்களுக்கு நீர் பாய்ச்ச ஆரம்பித்துவிட்டார்.
கத்தரிச் செடிகள் நன்றாக மதமதத்து வளர்ந்து காய்த்துத் தள்ளியிருந்தன. சில கத்திரிகள் குலை குலையாகக் காய்த்திருந்தன. சுண்டங்கத்தரியையும், நாட்டுக்கத்திரியையும் ஒட்டி உருவாக்கிய செடிதான் அது.
முருகரால் அதை நம்பவே முடியவில்லை. ஆனால் குலை குலையாகத் தொங்கிய கத்தரிக்காய்கள் அவரை நம்பவைத்தன.
“சின்னப்பர்.. நீங்கள் இறைச்சுப்போட்டு வாருங்கோ… நான் போய் றொட்டி தட்டுறன்”, என்றுவிட்டு முருகர் கொட்டிலை நோக்கிப் போனார்.
ஏற்கனவே தாங்கள் கொண்டுவந்த கோதுமை மாவை எடுத்து றொட்டி சுட ஆரம்பித்துவிட்டனர்.
முருகர் சற்றுத் தொலைவில் நின்ற வல்லாரையில் இலைகளைப் பிடுங்கி வந்து பிஞ்சு மிளகாயுடன் சேர்த்து அங்கு அம்மி போன்ற போன்ற வடிவத்தில் இருந்த கருங்கல்லில் வைத்து அரைத்து உருட்டி எடுத்துக் கொண்டார். பின்பு காட்டுக்குள் போய் சிறிது நேரத்தில் சில எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வந்து வெட்டிப் பிழிந்து அந்த அரையலுடன் நன்றாகப் பிசைந்தார்.
“டேய்.. தம்பியவை இந்தப் பச்சடியோட றொட்டியைத் திண்டுபாருங்கோ.. எப்பிடி நாதம் பேசுதெண்டு”, என்றார் முருகர்.
சின்னப்பரும் வேலைகளை முடித்துவிட்டு, அங்கு வரவே எல்லோரும் றொட்டிகளை உண்ண ஆரம்பித்தனர். மலையவனுக்கும் சிவத்துக்கும் உச்சிவரை உறைத்த பச்சடியின் காரம் சின்னப்பருக்குப் போதுமானதாக இருக்கவில்லை.
அவர் பிஞ்சு மிளகாய்களைக் கடித்தவாறே றொட்டிகளைச் சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடிந்ததும் முருகர்,
“அண்ணை காட்டுப்பக்கம் போய் அந்த சிகரட் பெட்டி சங்கதி என்னண்டு பாத்து வருவமே?” என சின்னப்பரிடம் கேட்டார்.
“ஓ..ஓ.. கட்டாயம் அறியத்தான் வேணும். உவங்கள் தம்பியவை நிக்கட்டன்.. நாங்கள் போவம்”, என்றார் சின்னப்பர்.
“அவங்கள் காடு பாக்கத்தானே வந்தவங்கள். இஞ்சை நிண்டு என்ன செய்யிறது? வரட்டன்”, என்றார் முருகர்.
“பயமில்லாமல் எங்களோடை வாறதெண்டால் வரட்டும்.. காடு பொல்லாத குழுவன் காடு”
“எல்லாம் பழகத்தானே வேணும்..”, என்றுவிட்டு, “எழும்புங்கோ போவம்”, என சிவத்தையும் மலையவனையும் அழைத்தார் முருகர்.
ஐவரும் கொட்டில் பின்புறமாகக் கழிவு வாய்க்காலில் இறங்கி அதைக் கடந்து வாய்க்கால் ஒரமாக நடக்கத் தொடங்கின. யாவரணையும், காயாவுமாக உயரமான மரங்களே காணப்பட்டன. காயா மரங்கள் நட்டு நீரூற்றி வளர்த்தது போன்று வரிசையாக நின்றிருந்தமை ஒரு தனி அழகைக் கொடுத்தது.
அவர்கள் வருவதைக் கண்ட மந்திகள் பாய்ந்து குதித்து அடுத்தடுத்த மரங்களில் போயிருந்து அவர்களையே பார்த்தன.
அவைகளின் பாய்ச்சலால் பட்சிகள் கலைந்து கீச்சிட்டவாறு பறக்கத் தொடங்கின.
சிறிது தூரம் சென்ற பின்பு சின்னப்பர் அங்கு காணப்பட்ட ஒரு மாட்டுப்பாதையால் காட்டுக்குள் இறங்கினார். ஒரு சில நிமிடங்களில் ஒரு வெட்டையான இடமும் ஒரு பள்ளமும் தென்பட்டன.
சின்னப்பர் சொன்னார்,
“அந்தப் பள்ளம் ஒரு மோட்டை. மாரியில தண்ணி நிக்கும். அங்காலை பார் அந்த மருத மரத்தடியிலை மணலாய் தெரியுது!, அது ஒரு அறுத்தோடி, அந்த அறுத்தோடி மணலிலை தான் அந்தப் பெட்டி கிடந்தது”,
“அதிலை ஒருக்கால் போய்ப் பாப்பமே?”, எனக் கேட்டான் சிவம்.
“அதுக்கை என்ன கிடக்கப்போகுது? ஆசைப்படுறாய்.. வா.. போய்ப்பாப்பம்..”, என்று விட்டு சின்னப்பர் முன்னால் நடந்தார்.
ஐவரும் மோட்டைக்குள் இறங்கிப் பின் அறுத்தோடிக்குள் ஏறினர். மோட்டைக்குள் எந்த அடையாளங்களையும் காண முடியவில்லை. அறுத்தோடியை மூடியிருந்த படியால் பல இடங்களில் குனிந்தே செல்ல வேண்டியிருந்தது.
குனிந்தும் நிமிர்ந்தும் நடந்துகொண்டிருந்த சிவம் திடீரென,
“அப்பு.. அந்தப் பத்தையுக்க ஏதோ மின்னுது”, என்றான்.
“எங்கை பாப்பம்”, என்றுவிட்டு முருகர் குனிந்து பார்த்த போது ஒளிப் புள்ளி நடுப் பற்றைக்குள் தெரிந்து.
சின்னப்பராலும் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. பற்றைக்குள் இறங்குவது சாத்தியமில்லை. முள்ளு நிறைந்த அடர்த்தியான சூரை புதராக இருந்தது அது.
சின்னப்பர் கொண்டு வந்த காட்டுக் கத்தியால் ஒரு பக்கம் ஒரு கவர் வரும் வகையில் ஒரு நீண்ட தடியை வெட்டினார். சிவம் கத்தியை வாங்கி பற்றைக்குள் அதை விட்டு துளாவினான்.
திடீரென அந்த ஒளிப்பொட்டு காணாமல் போய்விட்டது. சிவம் சளைத்துவிடவில்லை. தொடர்ந்து துளாவினான் அவன்.
ஏதோ தடியில் வித்தியாசமான பொருள் கத்தியில் தட்டுப்படுவது போல் படவே வெகு பக்குவமாக மெல்ல அதை இழுத்தான்.
கைகளில் முட்கள் கீறிய போதும் அவன் முயற்சியை விடவில்லை.
கத்தியின் முகப்புப் பகுதியில் கொழுவிக் கொண்டு மீன் ரின் போன்ற ஒரு தகரம் வெளியே வந்தது. மிகவும் அவதானமாக அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு,
“அப்பு.. இது சாப்பாட்டு ரின்.. இஞ்சை ஆமி தான் இது வைச்சிருக்கிறாங்கள்” என்றான் சிவம்.
“அப்ப ஆரோ ஆமிக்காரர் இதிலை வந்திருந்து சாப்பிட்டு சிகரட் பத்தி போயிருக்கிறாங்கள்”, என்றார் முருகர்.
“முருகர் இஞ்சாலை ஒரு கட்டையிலை காம்ப் இருக்குது.. அங்காலை ஒரு மூண்டு கட்டையிலை கிடக்குது.. வடக்கு போனாலும் மடு றோட் காம்ப்.. அப்பிடியிருக்க இந்தக் குழுவன் காட்டுக்கை சாப்பிட வந்தவங்களே?”, என்றார் சின்னப்பு.
“அப்ப.. ஆரப்பு வந்திருப்பங்கள்”, என்றார் சின்னப்பர்.
மீண்டும்.
சிவத்துக்கு சில விஷயங்கள் புரிவது போல் தோன்றியது. அவன் மெல்ல,
“அப்பு உந்த அறுத்தோடியோடை கொஞ்சம் மேலை போய்ப் பாப்பம். சில வேளை ஏதாவது விளங்கினாலும் விளங்கும்”, எனக் கேட்டான்.
“ஓ.. ஓ.. உது என்னண்டு அறியத்தான் வேணும். வாருங்கோ போவம்”, என்றுவிட்டு சின்னப்பர் முன்னால் நடந்தார்.
சிவமும் மலையவனும் அறுத்தோடியின் இரு பக்கங்களிலும் மிகவும் துல்லியமாக அவதானித்துக் கொண்டு நடந்த போதும் எந்தவித தடையங்களும் கண்ணில் படவில்லை.
ஆனால் அப் பகுதியில் ஏதாவது இருக்கக் கூடும் என அவர்கள் நம்பினர்.
ஒரு கூப்பிடு தூரம் வந்த பின்பு அந்த அறுத்தோடி ஒரு பெரிய அறுத்தோடியில் இணைந்து கொண்டது. அந்தச் சந்திப்பு கொஞ்சம் பெரிய வெட்டையாக இருந்தது.
சின்னப்பர் தென் மேற்குப் பக்கமாகக் கையைக் காட்டி,
“அங்கை காட்டுக்கு மேலாலை ஒரு உயர மரம் தெரியுது கண்டியளே?” எனக் கேட்டார்.
அவர்கள் நன்றாக உற்றுப் பார்த்த போது வெகு தொலைவில் மற்ற மரங்களுக்கு மேலால் ஒரு மரம் தெரிந்தது.
அவர் சொன்னார், “அது கஜூவத்தை ஆமிக் காம்பிலை நிக்கிற மரம். இப்ப சொல்லுங்கோ உதிலை இருக்கிற ஆமி சாப்பாடு கொண்டு வந்து காட்டுக்கை சாப்பிடுவனே?”
அவர் சொல்வதில் நியாயமிருப்பதாகவே பட்டது.
ஆனால் அந்த சாப்பாட்டு ரின்னும், சிகரட் பெட்டியும் அங்கு எப்பிடி வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் சிவம் உறுதியாக இருந்தான்.
-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-
-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-
(தொடரும்)