Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 05

சிவமும் கணேசும் நீண்டகாலமாகவே ஒரே அணியில் போராட்டங்களில் கலந்துகொண்டதாலோ என்னவோ இருவரும் மிகவும் நெருங்கிய
நண்பர்களாக விளங்கினர். இருவரும் ஒரே விதமான சிந்தனைப் போக்குக் கொண்டவர்களாகவும், ஒரே விதமான ரசனை உள்ளவர்களாகவுமிருந்தனர்.

குடாரப்பு மாபெரும் தரையிறக்கத்தின் போது இருவருமே ஒன்றாக களமிறங்கினர். வெற்றிலைக்கேணியிலிருந்து கொந்தளித்துக்கொண்டிருந்த கடலில் படகுமூலம் குடாரப்பு நோக்கிப் பயணித்தபோது கடல் பற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லாத சிவத்துக்கு கணேஸ்தான் தைரியமூட்டினான்.

ஒரு புறம் ஆனையிறவு இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி, மறுபுறம் முகமாலை இராணுவத்தின் நகர்வு நடவடிக்கைகள், எறிகணை வீச்சுக்கள், கிபிர் தாக்குதல்கள் எனப் பேராபத்துக்களின் மத்தியில் முப்பது நாட்கள் அவர்கள் ஈட்டிய சாதனைகள் ஏராளம். பக்கத்தில் நின்ற போராளி வீரச்சாவடைய அவனுக்காக அஞ்சலிக்கவே நேரமின்றி அடுத்த தரம் துப்பாக்கி தூக்கும் அவலத்தை அவர்கள் எத்தனையோ தரம் சந்தித்தனர். கைகலப்பாக நெருங்கிய சண்டைகள் இடம்பெறும் போது எத்தனையோ தரம் கணேசை சிவமும், சிவத்தை கணேசும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனையிறவு வெற்றிகொண்டு கொடியேற்றிய போது இருவருமே அருகருகே நின்று கொடிவணக்கம் செய்ததை இருவரும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி மகிழ்ச்சியடைவதுண்டு. இருவரும் ஒருவரிடம் ஒருவர் எதையும் மறைத்ததில்லை. கணேஸ் தன் காதலைப்பற்றி சிவத்திடம் தான் மனம் திறந்து கதைப்பதுண்டு.

முல்லைத்தீவு படைத்தளத் தாக்குதலின் போது தான் கணேஸ் ரூபாவை முதன் முதல் சந்தித்தான். அளம்பிலில் தரையிறங்கிய இராணுவத்தினர் மேல் நடத்தப்பட்ட தாக்குதலின் போது கடலில் ஏவப்பட்ட ஒரு எறிகணையால் ரூபா காயமடைந்துவிட்டாள். அதைக் கண்டுவிட்ட கணேஸ் அவளைத் தோளில் கொண்டுவந்து மெடிக்ஸ் போராளிகளிடம் ஒப்படைத்தான். அந்தச் சம்பவத்துடன் அவர்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு காதலாக மாறிவிட்டது. 

கணேஸ் – ரூபா எழுதிய கடிதங்களை சிவத்துக்கு வாசித்துக்காட்டுவான். தான் எழுதும் கடிதங்களையும் அவன் படிக்கக்கொடுத்ததுண்டு. சிவத்தால் மதிய உணவைக் கூடச் சரியாகச் சாப்பிட முடியவில்லை. பொறுப்பாளரிடம் அனுமதி பெற்றுவிட்டு பண்டிவிரிச்சானை நோக்கிப் புறப்பட்டான் சிவம்.

அவன் தட்சிணாமருதமடுவை வந்தடைந்தபோது பொதுநோக்கு மண்டபம் மஞ்சள், சிவப்பு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.முள்ளிக்குளம் சண்டையில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.அவர்களின் அஞ்சலி நிகழ்வுக்காக மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை சிவம் புரிந்துகொண்டான். 

அந்தச் சண்டையின் வெற்றி மூலம் தங்கள் பகுதிக்குள் இராணுவம் ஊடுருவுவது தவிர்க்கப்பட்டு விட்டதாகவே அம் மக்கள் மனமார நம்பினர். எனவே வீரச்சாவடைந்த போராளிகள் தங்களுக்காகவே உயிரைத் தியாகம் செய்தவர்கள் எனக் கருதிய காரணத்தால் எல்லையற்ற ஒரு வித மதிப்புடன் அவர்கள் அஞ்சலி செய்யக் காத்திருந்தனர்.

தற்சமயம் போராளிகளின் வித்துடல்கள் அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும், அஞ்சலிக்காக அங்கு நான்கு மணிக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு மாலையுடன் நின்றிருந்த முத்தம்மா அவனைக் கண்டதும் அவனை நோக்கி வந்தாள். சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு காலை நிலத்தில் ஊன்றியவாறு நின்ற சிவம் அவளைப் பார்த்து, “எங்கட வீட்டையிருந்து ஒருதரும் வரயில்லையே?” எனக் கேட்டான்.

“ஐயா, முதலே வந்திட்டார். அம்மா இனித்தான் வருவா” என்றாள் முத்தம்மா!

“நான் இஞ்சாலை பண்டிவிரிச்சானுக்குப் போறன், அம்மாட்டைச் சொல்லிவிடு”, என்றுவிட்டுச் சைக்கிளை மிதித்தான் சிவம்.

அவன் பண்டிவிரிச்சானில் உள்ள மருத்துவமுகாமில், மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று உள்ளே போன போது, கணேசுக்கு செயற்கைச் சுவாசம் ஏற்றப்பட்டிருந்தது. அரவம் கேட்டு மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தான் கணேஸ், சிவம் மெல்ல அவன் கைகளைப் பற்றிக்கொண்டான்.

கணேசின் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது. அவனின் வாய் மெல்ல அசைந்தது. குரல் வெளிவரவில்லை. அந்த அசைவைப் பொறுத்து அவன் “ரூபா” என்று அழைக்கிறான் என்பதை சிவம் புரிந்து கொண்டான். ரூபாவோ, மத்தியானம் அறிவிச்சனான். எப்பிடியும் வந்திடுவாள், என்றான் சிவம்.

ஒரு முறை கண்களை மூடிய அவன் சில விநாடிகளின் பின் அவற்றைத் திறந்திருந்தான். மீண்டும் அவன் ரூபா என்று சொல்வதைப் போல் வாயை அசைத்துவிட்டு, கையை மெல்ல உயர்த்தி சிவத்தை நோக்கி விரலை நீட்டினான். அவன் என்ன சொல்ல முனைகிறான் என்பதைச் சிவத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கணேசனின் கண்களிலிருந்து எதையாவது அறிந்துகொள்ள முடியுமா? என அவன் முயற்சித்த போதும் அதுவும் முடியவில்லை. சிவம் மெல்ல கணேசின் தலையை வருடிவிட்டான். ஏதோ ஒரு உத்வேகத்தில் திடீரென செயற்கைச் சுவாச மூடியை கையில் எடுத்த கணேஸ், “ரூபாவ நீ.. கை.. விட்டுடாத..’ என வெகு சிரமப்பட்டுச் சொல்லிவிட்டு மீண்டும் அதனை மூடிக்கொண்டான்.

அவனின் வயிறு அதிகமாக மேலெழும்பி இறங்க ஆரம்பித்தது. சிவம் பயந்துவிட்டான். அவன் ஓடிப்போய் மருத்துவப் போராளியைக் கூட்டி வந்தான்.

அவர், உடனடியாகவே நேரில் பார்த்தவரைப் போல்,

“செயற்கை சுவாசத்தை கழட்டினவரே?” எனக் கேட்டார்.

அவன், ஆமெனத் தலையசைத்தான். “நல்ல வேளை, இன்னும் இரண்டு நிமிஷம் அப்பிடியே கழட்டி விட்டிருந்தால் பெரிய ஆபத்திலை முடிஞ்சிருக்கும். நாங்கள் இதால தான் பாக்கிறதுக்கு ஆக்கள விடுறதில்லை” என்றார் மருத்துவர் சற்றுக் கடுமையாக.

“நான், அப்பிடிச் செய்வாரெண்டு எதிர்பார்க்கேல்ல”, என்றான் சிவம் ஒருவித குற்ற உணர்வுடன். மருத்துவர், “சரி, சரி.. இனி நீங்கள் போங்கோ.. அவர் அமைதியாக தூங்க வேணும்” என்றார். சிவம் குனிந்து தலையை ஆட்டி கணேசிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்தான்.

கூடவே வந்த மருத்துவரிடம் “என்ன மாதிரி டொக்டர் நிலைமை இருக்குது”, எனக் கேட்டான். மருத்துவர் சற்று நிதானித்துவிட்டு, “இப்ப ஒண்டும் சொல்ல முடியாது. இருதயம் வலு பலவீனமாகத் தான் வேலை செய்யுது. நாங்கள் எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறம்”, என்றார். “கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஏலாதே?”, “அங்க இருக்கிற எல்லா வசதியும் இங்கயும் இருக்குது. மற்றது இப்ப பயணம் செய்யிற நிலைமையில அவர் இல்லை” சிவம் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

கணேஸ், “ரூபாவைக் கைவிட்டுடாதை” என்று சொன்ன வார்த்தைகள் அவனைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன. ஒரு நாள் முகாமில் ஓய்வாயிருந்த போது இருவரும் பேசிக் கொண்டது சிவத்தின் நினைவுக்கு வந்தது,

கணேஸ் ரூபாவின் கடிதத்தை சிவத்துக்கு வாசித்துக் காட்டிவிட்டு, “சிவம்.. இப்படி என்னிலை உயிரையே வைச்சிருக்கிறாள். நான் வீரச்சாவடைஞ்சதால் என்ன செய்வாள்?” எனக் கேட்டான். சிவம் மெல்லச் சிரித்துக் கொண்டே, “மாவீரன்ரை மனைவி எண்ட பெருமையோட வாழ வேண்டியது தான்”, என்றான். திடீரென அவனின் முகம் இறுகியது.

“இல்லை.. அவளை இந்தச் சமூகம் விதவை எண்டு சொல்லக் கூடாது..’ “அப்பிடியெண்டால்…” “அவள் இன்னொருதனைக் கலியாணம் கட்ட வேணும். அது கட்டாயம் நீயாத் தான் இருக்க வேணும்” சிவம் அதிர்ந்தே போய்விட்டான்.

அவன் பின்பு சுதாகரித்துக் கொண்டு, “என்ன விசர்க்கதை கதைக்கிறாய்… அவள் உன்ரை காதலியல்லே”, என்றான். “அவன் அழுத்தமாகச் சொன்னான், “அதாலை தான் சொல்லுறன். என்னையும் அவளையும் நன்றாய்ப் புரிஞ்சு வைச்சிருக்கிற உன்னைவிட அவளுக்கு வேறை பொருத்தமானவன் இருக்க முடியாது”, சிவம் ஒரு முறை தடுமாறிப் போனான்.

நட்பைப் பொறுத்தவரையில் அவனும் கணேஸைப் போலவே கருதினான். ஆனால் ரூபா விஷயத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. “உன்ரை இப்பிடியான மடத்தனமான யோசினையை ரூபாவிட்ட சொன்னியெண்டால் உன்ரை காதலே வேண்டாமெண்டு கை கழுவி விட்டிடுவாள்” “சொன்னனான்,

அவள் உங்களுக்கு முதல் நான் வீரச்சாவடைஞ்சிடுவன் எண்டு ஒரே வசனத்தில கதையை முடிச்சுப்போட்டாள்”, என்றுவிட்டு புன்னகைத்தான் கணேஸ்.

“நானும் அப்பிடித்தான், உனக்கு முன்னால வீரச்சாவடைஞ்சிடுவன்”, என்றான் சிவம். அந்த நினைவுகளைத் தூக்கியெறிய முனைந்த போதும் ஏனோ முடியவில்லை. ஆனால் கணேசுக்கு எந்த ஆபத்தும் வராது எனத் திடமாக நம்பினான் அவன்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)