நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 14
ஒரு பெரிய முதிரை மரத்திலிருந்து பாய்ந்து வந்த ஒளி சின்னப்பரின் ஐந்து பற்றி லைற்றிலிருந்துதான் வருகிறது என முருகர் ஊகித்துக் கொண்டார். மரத்திலிருந்து, “அடி.. அடி.. நில்லடி.. கறுப்பி!”, என்ற அதட்டல் வந்ததும் நாய்கள் இரண்டும் அப்படியே நின்றன.
“அது.. சின்னப்பண்ணை.. நானண்ணை”, என்றார் முருகர்.சின்னப்பர் மரத்திலிருந்து இறங்கிக் கீழே வந்தார்.
“இப்ப நாலைஞ்சு நாளாய் காடுவளிய சில வித்தியாசங்கள் கண்ணிலை படுது. ஆரோ புது ஆக்கள் நடமாடுற மாதிரிக் கிடக்குது. அதுதான் காடு சரசரத்ததோடை துவக்கோடை ஒளியில ஏறியிட்டன்”,
“இஞ்சை ஆர்.. என்னைப் போல வேட்டைக்காரர் வருவங்கள்.
இல்லாட்டில் ஆமிக்காரர் உங்கினை திரிவங்கள்”, என முருகர் அந்த விஷயத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தாதது போன்று அலட்சியமாகச் சொன்னார்.
“விசர்க் கதை பறையாதை… எனக்குத் தெரியாத வேட்டையோ…? வேட்டைக்காரர் வந்து போற அடையாளம் எப்பிடி இருக்குமெண்டு எனக்குத் தெரியாதே?”
“அப்ப.. ஆமியாக்கும்..?” என்றார் சோமண்ண.
“என்னைக் கடந்து தானே இஞ்சத்தை ஆமி காட்டுக்கை இறங்கவேணும்.. அவங்கள் இஞ்சாலில் காட்டிலை இறங்கிறேல்ல”
“அப்ப.. ஆராயிருக்கும்?” எனக் கேட்டார் முருகர்.
“அது தான் தெரியேல்லை.. வாருங்கோ.. வந்தனீங்கள் முதல் தண்ணி வென்னியைக் குடியுங்கோ”, என்றுவிட்டுக் கொட்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினார் சின்னப்பர்.
அனைவரும் கொட்டிலுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் அருகில் அமர்ந்து கொண்டனர்.
“கொஞ்சம் மா கிடக்குது… றொட்டி தட்டட்டே?” எனக் கேட்டார் சின்னப்பு.
“வேண்டாம்.. நாங்கள் றொட்டியும்.. நல்ல செத்தல் மிளகாய்ச் சம்பலும் கொண்டு வந்தனாங்கள்.. உனக்கும் சேத்துத்தான்”.. என்று தனது பன் பையிலிருந்த றொட்டிப் பார்சலை வெளியே எடுத்தார் முருகர்.
வழமையாகப் போராளிகள் காட்டு நடவடிக்கைகளுக்குப் போகும் போது பிஸ்கற் பெட்டிகள் போன்ற உலர் உணவுகளையே கொண்டு செல்வதுண்டு. ஆனால் முருகர் புறப்படும்போது பிஸ்கற் கொண்டு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு றொட்டி செய்யும்படி சொன்னமைக்கான காரணம் இப்போது தான் சிவத்துக்கு புரிந்தது.
சின்னப்பு, “பொறு வாறன்.. மரை வத்தல் கிடக்குது. சுட்டுப்போட்டு றொட்டியோடை தின்னுங்கோ என்றுவிட்டு எழுந்து உள்ளே போனார். முருகர் றொட்டிகளை எடுத்துச் சம்பல் வைத்து ஒவ்வொருவரிடமும் கைகளில் கொடுத்தார்.
சின்னப்பர் வத்தலை நெருப்பில் வாட்டி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துண்டுகளைக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டார். வயது முதிர்ந்துவிட்ட போதிலும் வெற்றிலைக் காவி படிந்த ஆனால் உறுதியான அவரின் பற்களைப் பார்க்கச் சிவத்துக்கு பொறாமையாயிருந்தது.
சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சின்னபர்,
“ஆர்.. ரண்டு விடலையளைக் கூட்டி வந்திருக்கிறாய்?” எனக் கேட்டார்.
முருகர் ஒரு முறை போராளிகள் இருவரையும் பார்த்துவிட்டு,
“ஒருதன் தங்கச்சியின்ரை பொடியன், மற்றவன் பெறாமேன், ரண்டு பேரும் வேட்டை பழக வேணுமெண்டு ஒரே கரைச்சல். வேட்டை பிறகு பழகலாம், முதல் என்னோடை வந்து காட்டைப் படியுங்கோ எண்டு கூட்டியந்தனான்”, என்றார்.
சின்னப்பர் இருவரின் முகத்தையும் நன்றாகப் பார்த்துவிட்டு, “எப்பிடியும் உன்ரை ரத்தம் தானே.. பழகியிடுவங்கள்”, என ஆரம்பித்த சின்னப்பர்,
“கண்ணும் காதும் மூக்கும் சரியாய் வேலை செய்தால் மிருகங்கள் எங்கட காலடியிலயடா தம்பியவை” எனச் சொல்லி முடித்தார்.
சாப்பிட்டு முடிந்த பின்னர் எழுந்து உள்ளே சென்ற சின்னப்பு ஒரு சிகரட் பெட்டியைக் கொண்டுவந்து காட்டி, “இது ஆத்தங்கரையிலை முதலை மோட்டையடியிலை கிடந்தது. எனக்கு என்னண்டு விளங்கேல்ல.. எடுத்துப் பாத்தன் சிகரட் மாதிரி ஒரு வாசம் வந்தது” என்றார்.
முருகர் அதைக் கையில் வாங்கி பார்த்துவிட்டு இது சீக்றற் பெட்டி போலை தான் கிடக்கு.. ஆனால் ஒரு நாளும் இப்பிடிக் காணேல்லை.. இதைப் பாரடா தம்பி”, எனச் சிவத்திடம் கொடுத்தார்.
அந்தப் பச்சைப் பெட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு”, இது ஸ்போட்ஸ்மன் எண்டொரு சிகரட்.. இஞ்ச இது ஒருதரும் பாவிக்கிறேல்லை. கொழும்புப் பக்கம் தான் இது பாவிக்கிறவங்கள் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்” என்றான் சிவம்.
மடு விழாக் காலங்களில் வரும் சிங்களவர்களில் சில நாகரிகமாக இருப்பவர்கள் இந்த சிகரட் பிடிப்பது அவனின் நினைவுக்கு வந்தது.
மலையவனும், “இஞ்சை பிறிஸ்டர் எண்ட சிகரட்டை விட வேறை இல்லை.. இது ஆரோ கொழும்புக்காரன் தான் பத்தியிருக்கவேணும்”, என்றான்.
“கொழும்புக்காறன், குழுவனும் கரடியும் சருகுப் புலியும் திரியிற இந்தக் காட்டிலை துணிஞ்சு வந்தவனே?, என்றார் சின்னப்பு.
“அது தானே.. உதிலை ஏதோ விஷயமிருக்குது.. நாங்களும் கண்ணை மூடிக்கொண்டு காடுவழிய திரியிறனாங்கள். உதை என்னண்டு அறியத்தான் வேணும்”, என்றார் முருகர் அழுத்தமாக. சின்னபருக்கும் முருகர் சொன்ன வார்த்தைகள் ஒரு எச்சரிக்கை உணர்வை ஊட்டிவிட்டது.
“ஓ.. ஓ நாளைக்கு ஒருக்கால் காடு தடவத்தான் வேணும். இப்ப படுப்பம்”, என்று விட்டு எழுந்தார் சின்னப்பர்.
சிவத்தைப் பொறுத்த வரையில் அந்த சிகரட் பெட்டி பல மர்மங்களை விளக்கும் என்ற நம்பிக்கையுடன் தூங்கிப் போனான்.
அன்று இறைப்பு முறையாதலால் சுந்தரம் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். அவன் முகம் கழுவிவிட்டு வரும்போது பரமசிவம் பால் கறந்து முடித்துவிட்டார்.
இருவரும் தேனீரைக் குடித்த பின்பு பரமசிவம்,
“தம்பி… நீ போய் மிஷினை ஸ்ராட் பண்ணி இறை… நான் கடைக்குப் போய் பாலைக் குடுத்திட்டு அப்படியே நேர வாறன்” என்று விட்டு பார்வதியிடம் பால் போத்தலைக் கையில் வாங்கினார்.
“ஓமய்யா.. மிளகாய் பிடுங்க வேறையும் ரண்டு பேரை வரச்சொல்லிவிடுங்கோ.. இப்ப பிடுங்கி முடிச்ச பக்கம் இண்டைக்கு இறைப்பு முடிஞ்சு போம்.. அதைப் பிடுங்கி முடிச்சால் தான் நாளைக்கு இறைக்கலாம்”, என்றான் சுந்தரம்.
தனது மகனின் பொறுப்புணர்வை நினைக்க அவருக்கே பெருமையாயிருந்தது.
“சரி பாப்பம்.. அப்பிடி ஆள் கிடையாட்டில் கொம்மாவும் வருவா தானே.. நானும் நிண்டு அவளளோடை சேர்ந்து முடிச்சிடலாம் என்றுவிட்டுப் புறப்பட்டார் அவர்.
“அவளள்”, என்பது வேலம்மாவையும் முத்தம்மாவையுமே குறிக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டதால் முத்தமா வருவாள் என்ற நம்பிக்கை அவன் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஊட்டியது.
முத்தம்மா வந்த போது சுந்தரம் ஏறக்குறைய கால்வாசி இறைப்பை முடித்திருந்தான். அவளும் வேலம்மாவும் கடகத்தை எடுத்துக்கொண்டு பிஞ்சு மிளகாய்களைப் பிடுங்கத் தொடங்கினர்.
உடைந்து கிடந்த சில பாத்திகளைச் சரி செய்துவிட்டு வந்த பரமசிவம்..“தம்பி.. நான் தண்ணி மாறுறன்.. நீ கொஞ்ச நேரம் ஆறு”, என்றுவிட்டு மண்வெட்டியை வாங்கினார்.
“இல்லை ஐயா.. நான் களைக்கேல்லை”, என்றான் சுந்தரம்.
“பறவாயில்லை.. நான் மாறுறன்”, என்றுவிட்டு வேலையைத் தொடங்கிவிட்டார்.
சுந்தரம் ஒரு கடகத்தை எடுத்துக் கொண்டு முத்தம்மா நிற்குமிடத்துக்கு வந்து மிளகாய் ஆய ஆரம்பித்தான். அவளிடம் ஏதாவது கதைக்க வேண்டுமென்ற தவிப்பு அவனுள் மேலோங்கிய போதும் உடனடியாகக் கதைக்க எதுவுமே வர மறுத்தது.
அவளும் எதுவும் பேசவில்லை. அவன் வந்ததையே பொருட்படுத்தாதது போல் மிளகாய்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.
“என்ன வேலம்மா.. அண்டைக்கு மாவீரர் அஞ்சலியிலை மேள் விம்மி விம்மி அழுதாள். சரியான கவலை போலை”, என ஒருவித கிண்டலுடன் கேட்டுவிட்டு சிரித்தான் சுந்தரம். அவனைத் திரும்பிப் பார்த்த முத்தம்மாவின் கண்களில் பொறி பறந்தது. அவள், வெடுக்கென,
“அந்தச் சாவின்ரை பெறுமதி உங்களை விட எங்களுக்குத்தான் தெரியும்” என்றாள்.
சுந்தரம் திகைத்துவிட்டான். பின் தயக்கத்துடன்,
“எல்லாருக்கும் கவலை தானே” என்றான்.
“தலைமுறை தலைமுறையாய் மலையகத்திலை இருந்த எங்களை 83 இனக்கலவரத்திலை கொண்டு தள்ளினாங்கள். உயிர் தப்பி ஓடி வந்து அம்மாவும், அப்பாவும் கைக்குழந்தையாய் இருந்த அண்ணாவும் மூண்டு முறிப்புக்கு வந்தினம். அங்கையும் விமான நிலையத்தின்ரை இடமெண்டு எங்களைக் கலைக்க பூவசரங்குளம் வந்தம். அங்கை ஆமி வர மடுவுக்கு வந்தம்.
நாங்கள் இடம் பெயர இடம் பெயர ஊருக்கொரு பிள்ளையாய் பிறந்து மலையகத்திலை பிறந்த அண்ணையை மடுவில பறிகுடுத்தம்..
அண்டைக்கு முள்ளிக்குளத்திலை வெளிக்கிட்ட ஆமி இஞ்சை வந்தால் நாங்கள் பிறகும் ஓடுறதே?”
மழை பெய்துவிட்டது போல பேசி முடித்தாள் முத்தம்மா.
அவள் அப்பிடிக் கதைப்பாள் என்று வேலம்மாவும் எதிர்பார்க்கவில்லை.
“சரி விடு.. அதெல்லாம் தம்பிக்கும் தெரியும் தானே?” என சமாளித்தாள் வேலம்மா.
“இல்லையம்மா.. அண்டைக்கு அந்த அண்ணையவை ஆமியை மறிச்சு திருப்பி அனுப்பினபடியால் தான் நாங்கள் இன்னொருக்கா இடம்பெயராமல் இஞ்சை இருக்கிறம், எங்களுக்காக உயிர் விட்டவைக்காக அழுதால் அது பிழையே?” முத்தம்மாவின் கண்களில் நீர் வடிந்தது.
அவளுடன் ஏதாவது கதைக்க வேண்டும் என்பதற்காக ஏதோ சொல்லப் போக இப்பிடி விபரீதமாக மாறிவிட்டதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எதுவும் பேசாமல் அவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். அவளுள் எழுவது கோபமா? ஆற்றாமையா? என்று அவனாலே புரிந்துகொள்ள முடியவில்லை.
(தொடரும்)