நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 07
வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவத்திடம் “என்னண்ணை.. தனிய இருந்து கடுமையாய் யோசிக்கிறியள்?” எனக் கேட்டான்.சிவம் அவனைப் பார்க்காமலே, “கணேசுக்கு பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடவாது”, என்றான்.
புனிதனுக்கு எதுவுமே புரியவில்லை, “என்னண்ணை சொல்லுறியள்”, எனத் தடுமாற்றத்துடன் கேட்டான்.
அப்போது தான் சிவம் தன்னையறியாமலே ஏதோ நினைவுகளில் உளறிவிட்டதை உணர்ந்தான். பின்பு சமாளித்தவாறே, “கணேசுக்கு கொஞ்சம் கடுமையான காயம்” அதுதான் யோசினையாக் கிடக்குது” என்றான்.
புனிதன் சற்று நேரம் யோசித்துவிட்டு, “ரூபாக்காவுக்கு தெரியுமே?” என ஒருவித தயக்கத்துடன் கேட்டான்.
“இல்லை தெரியாது… அவ இப்ப பூநகரியில நிக்கிறா” என்றான் சிவம்.
கணேசும் ரூபாவும் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர்கள் சந்திப்பதற்காக ஒருவரைத் தேடி மற்றவர் போவதுமில்லை. ஆனால் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் நிறையவே கதைப்பார்கள்.
எனினும் முகாமிலுள்ள அத்தனை போராளிகளுக்கும் அவர்களின் காதல் பற்றியும் கணேஸ் அவளில் வைத்துள்ள ஆழமான பாசம் பற்றியும் நன்கு தெரியும்.
எல்லோரையும் விட அவளின் காதலின் வலிமை பற்றி சிவம் நன்றாகவே புரிந்திருந்தான்.
கணேசின் தாயும் தகப்பனும் அவன் சிறுவனாக இருந்த போதே தென்னிலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது கொல்லப்பட்டுவிட்டனர். உறவினர் வீட்டில் வளர்ந்த அவன் பத்து வயதிலேயே தேனீர்க் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். பின் பல இடங்களிலும் மாறி மாறி வேலை செய்தான். பல வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்த போதுதான் போராட்டம் பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் படிய சில நாட்களில் அவன் போராளியாக இணைந்து கொண்டான். பாசமே என்னவென்று தெரியாமல் வளர்ந்த அவனுக்கு ரூபாவின் அன்பு கிட்டிய போது அந்த எண்ணங்கள் கூட எல்லையற்ற இன்பத்தைக் கொடுத்தன.
தங்கள் காதலை மற்றவர்களிடம் சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன் ரூபாவின் கெட்டித்தனங்கள் பற்றிப் பேசத் தொடங்கினால் வெகு சிரமப்பட்டே நிறுத்தவேண்டி வரும்.
ஒரு நாள் தானும் கணேசும் கதைத்தது சிவத்தின் ஞாபத்திற்கு வந்து உதைத்தது.
“நான் ரூபாவை எவ்வளவு நேசிக்கிறான் எண்டு தெரியுமே?”, சிவம் மெல்லிய சிரிப்புடன் கேட்டான்,
“அது நீ சொல்லியே தெரியவேணும்?”
“சிவம் எனக்கு அன்பு எண்டால் என்ன எண்டு உணர்த்தினவள் அவள் தான். அவள் எண்டைக்குமே கவலைப்படக் கூடாது”
“அப்பிடியெண்டால்..?”
கணேஸ் ஒரு சிறிய மௌன இடைவெளியின் பின்பு சொல்ல ஆரம்பித்தான்,
“நான் தற்செயலா வீரச்சாவடைஞ்சா நான் இல்லாத குறையை அவள் உணரக் கூடாது. என்ர இடத்த நீ தான் நிரப்ப வேணும்”
“சிவத்தின் குரலில் கோபம் ஏறியது” என்னடா மடைக் கதை கதைக்கிறாய்?.. காதல் என்னடா கால் செருப்பே அடிக்கடி மாத்த?”
“நான் அவளில வைச்சிருக்கிற அன்பையும் அவள் என்னில வைச்சிருக்கிற அன்பையும் நல்லாய் புரிஞ்சவன் நீ.. ஆனபடியால்..”
“உந்தக் கதையை நிப்பாட்டு பாப்பம்”
“கணேஸ் பரிதாபமாகக் கேட்டான்.. “அப்ப.. நீ வேற.. நான் வேற எண்டு நினைக்கிறியே?”
“இல்லை.. ஆனால் அது வேறை.. நீ கேக்கிறது வேறை”
சிவத்தின் குரலில் கடுமை ஏறியிருந்தது.
“அப்ப.. நான் வீரச்சாவடைந்தால்…” என்று ஏதோ சொல்ல முற்பட்ட கணேசை இடை மறித்த சிவம், “அதுக்கு முதல் நான் வீரச்சாவடைஞ்சிடுவன்… அதால அந்தப் பிரச்சினைக்கு இடமில்லை” என்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்தான் சிவம்.
“சிவம்.. நான் இனி அதைப் பற்றிக் கதைக்கமாட்டன். ஆனால் என்ர விருப்பத்தை நிராகரிக்க மாட்டாய் எண்டு நம்பிறன்”, என்றுவிட்டு அவனும் எழுந்தான்.
மீண்டும் சிவம் மௌனமாகி விட்ட நிலையில்,
“என்னண்ணை பிறகும் யோசிக்கிறியள், அவருக்கு ஒண்டும் நடக்காது.. போய்ப் படுங்கோ”, என்றான் புனிதன்.
“ம்.. பாப்பம்”, என்றுவிட்டு எழுந்தான் சிவம்.
அன்று பால் கொடுப்பதற்காகப் பரமசிவம் அண்ணாவியார் முத்தையா கடைக்குப் போன போது அந்த இடமே கலகலப்பாக காட்சியளித்தது. ஒவ்வொருவரும் தாங்களே போய் சண்டை பிடிச்சு, முள்ளிக்குளத்திலிருந்து இராணுவத்தை விரட்டி விட்டது போன்று பெருமையடித்துக் கொண்டிருந்தனர்.
பரமசிவம், “எல்லாரும் வெற்றியப் பற்றிக் கதைக்கிறியள்.. அந்த வீரச்சாவடைஞ்ச பொடியளப் பற்றி ஆரும் கவலைப்பட்டியளே? எனக் கேட்டார்.
முருகேசர் ஒரு மெல்லிய செருமலுடன்..“தியாகங்கள் இல்லாமல் வெற்றி வருமே?” என்று தத்துவம் பேசினார்.
“உன்ரை பொடியன் செத்திருந்தால் நீ உப்பிடிக் கதைப்பியே” எனக் கேட்டார் பரமசிவம்.
“அவர் இரண்டு பொடியளையும் சவுதிக்கும், கட்டாருக்கும் அனுப்பிப்போட்டார். அவர் கட்டாயம் தியாகம் பற்றிக் கதைப்பர் தானே? என நக்கலடித்தார் கதிரேசு.
“கதிரேசு. அப்பிடிக் கதையாத.. வெளிநாட்டில இருக்கிற எங்கட சனம் அனுப்பிற காசில எங்கட போராட்டத்துக்கு நிறைய பலன் கிடைக்குது தெரியுமே?” என்றார் பரமசிவம் சற்றுக் கண்டிப்புடன்.
“ஆமாங்க.. நாம எல்லாம் ஒவ்வொரு பக்கம் உதவி செஞ்சுறதால தானுங்களே,. நாம வெல்ல முடியுது என்றார் முத்தையா தேநீரை இழுத்து ஆற்றியவாறே”?
முள்ளிக்குளத்திற்கு இராணுவம் முன்னேறிய போது, எங்கே தாங்களும் இடம்பெயர வேண்டி வருமோ என அஞ்சிக் கொண்டிருந்த பாலம்பிட்டி மக்கள் அந்த வெற்றியைத் தமக்கு கிடைத்த பெரும் விமோசனமாகவே கருதினர். அந்த மகிழ்ச்சி ஒவ்வொருவர் முகங்களிலும் மின்னியது.
பரமசிவம் கேட்டார், “எங்களுக்காக பொடியள் இவ்வளவு கஷ்டப்பட்டு தியாகங்கள் செய்து ஆமியை கலைச்சிருக்கிறாங்கள். நாங்கள் ஏதாவது சந்தோஷமா செய்ய வேண்டாமே?”
“அது தானே முருகர் ஒரு பெரிய தாட்டான் மரையை வேட்டையாடிக் குடுத்திருக்கிறாரல்லே”, என்றார் கதிரேசு.
“அது முருகர் குடுத்தது. நாங்கள் என்ன செய்யப்போறம்?”
“பலகாரம் செஞ்சு அனுப்பிடலாமே?” என்றார் முத்தையா.
“அது நல்ல யோசினை தான். ஆனால் கடைசி மூண்டு கடகங்களிலையெண்டாலும் செய்தனுப்ப வேணும்”, என்றார் பரமசிவம்.
முருகேசர் திடீரெனக் குறுக்கிட்டார்,
“மூண்டென்ன, ஐஞ்சு கடகம் செய்வம்… அரைவாசிக் காசை நான் பொறுக்கிறன்.
கதிரேசர் உற்சாகத்துடன்..“மிச்சக் காசை நாங்கள் போடுவம்” என்றார்.
முத்தையாவும் தனது பங்குக்கு பலகாரம் செய்யும் வேலையை தானே முழுமையாகச் செய்வதாக ஏற்றுக்கொண்டார்.
பயித்தம்பணியாரமும் பனங்காய்க்காயும் பருத்தித்துறை வடையும் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
பரமசிவம் அளவற்ற மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தார். தேவையான பயறு முழுவதையும் தானே தருவதாக வாக்களித்திருந்தார். இதற்காகவே தனக்கு பயறு அமோக விளைச்சல் கொடுத்ததாக அவர் கருதினார்.
அவர் திரும்பி வரும் போது வழியில் வேலம்மாளைக் கண்டார். அவளும் முத்தம்மாவும் தோட்டத்திற்குப் போயிருப்பார்கள் என்றே அவர் நினைத்திருந்தார்.
“என்ன.. நீ மிளகாய் பிடுங்கப் போகேல்லயோ?.. எனக் கேட்டார் அவர்.
“இல்லையையா.. இவருக்கு கடுமையா இழுக்குது. ஆஸ்பத்திரிக்கு கூட்டுக் கொண்டு போகப்போறன்.
“என்னத்தில கூட்டிக்கொண்டு போகப் போறாய்?”
“நடந்து தான்”
“ஏலாத மனுஷன் நடக்குமே! நான் சைக்கிளை குடுத்து சுந்தரத்தை அனுப்பிறன். அவனோட அனுப்பிவிடு” என்றுவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமலே நடக்கத் தொடங்கினார் பரமசிவம்.
-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-
-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-
(தொடரும்)