Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 04

சங்கரசிவம் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோன்று முன்னரங்கத் தாக்குதல்கள் இலகுவாக இருக்கவில்லை.திடீரென
விளக்குகள் அணைந்ததாலும், அதேவேளையில் ரவைகள் அடர்த்தியாக வந்துகொண்டிருந்ததாலும் சில நிமிடங்கள் தடுமாறிப் போன படையினர் சில நிமிடங்களில் தம்மை சுதாகரித்துக்கொண்டு திரும்பித் தாக்க ஆரம்பித்தனர். அந்தச் சில நிமிடங்களில் காயப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் தூக்கிக் கொண்டு சிலர் ஓடுவது மங்கிய நிலவொளியில் அவனின் கண்களில் பட்டது.

கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு அவற்றினை செயலிழக்கச் செய்தவாறே துரிதமாக போராளிகள் முன்னேற ஆரம்பித்தனர். முன்னரங்கில் நின்ற படையினர் முழுமையாகவே பின் வாங்கிவிட்டனர். எனினும் அந்த வரிசையில் நின்றவர்கள் கடுமையாக எதிர்த்தாக்குதல் தொடுத்தனர்.

சண்டை சற்று உக்கிரமாகவே நடந்தது.

படையினருக்குப் பின்னால் ஒரு பற்றை அசைவது போல தோன்றவே அவர்களுக்கு ஆதரவாக டாங்கி வந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். உடனடியாக ஆர்.பி.ஜி. போராளிகளுக்குக் கட்டளை கொடுத்தான். ஆனால் டாங்கி ஆர்.பி.ஜியின் சூட்டெல்லைக்கு வெளியே தான் நின்றது. படையினருக்குப்பின்னால் வந்து கொண்டிருந்த ரவைகள் மத்தியில் ஆர்.பி.ஜியைக் கையாண்ட கமலுக்கு முன் செல்ல முடியவில்லை. ஆனால் டாங்கியைச் செயலிழக்கச் செய்யாவிடில் போராளிகளுக்கு அதிக இழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே கமல் ஊர்ந்தவாறே தனது நிலையை இன்னொரு திசைக்கு மாற்றிக்கொண்டான். அது கூட அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. எங்கிருந்தோ பாய்ந்து வந்த ரவையொன்று அவனின் காதருகால் அவனைக் கடந்து சென்றது. அவனுக்கு அதைப் பெரிதுபடுத்த நேரமிருக்கவில்லை. தன்னிலிருந்து சில அடிகள் தொலைவில் படுத்திருந்து ஒரு படையினன் சுடுவதையும், அருகில் பல சடலங்கள் சிதறிக்கிடப்பதையும் உருமறைப்பிலிருந்த பாலன் கண்டுகொண்டான்.மெல்லத் தனது டொங்கானை எடுத்து சுட்டுக்கொண்டிருந்த படையினனைக் குறிவைத்தான். அவன் அசைவு ஓய்ந்தது.

அந்த இடைவெளியை வேறு படையினர் நிரப்பு முன்பாக வேகமாக முன்னேறி டாங்கியின் சுடுகுழலை நோக்கி ஆர்.பி.ஜியை செலுத்தினான் கமல். குறிதவறாத அந்தத் தாக்குதலில் டாங்கி செயலிழந்தது. டாங்கி செயலிழந்த நிலையில் போராளிகள் வேகமாக முன்னேற ஆரம்பித்தனர்.

இரண்டாவது வரிசையும் ஈடாட்டம் காண ஆரம்பித்தது. பிரதான படைமுகாமிலிருந்து உதவிக்கு வரமுடியாமல் குட்டிசிறீ அணியினர் முகாம் வாசல், வேலிப்பகுதிகளை நோக்கி மோட்டார்களைப் போட்டுக் கொண்டிருந்தனர். மோட்டார் நிலைகளை நோக்கி எறிகணைகள் வந்து கொண்டிருந்ததால் ஓடி ஓடி மோட்டார் நிலைகளை மாற்றி மாற்றி அமைத்து தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர்.

மோட்டார் தாக்குதல் நிறுத்தப்படவே முகாமை அண்டிய பகுதிகளில் வலப்புறமாக ஒரு அணியும், இடப்புறமாக ஒரு அணியும் தாக்குதலை மேற்கொண்டவாறே உள்ளே இறங்கினர். தாங்கள் சுற்றிவளைக்கப்படப்போகும் அபாயத்தைப் புரிந்து கொண்ட படையினர், இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் தூக்கிக்கொண்டு பிரதான படைமுகாமை நோக்கி பின்வாங்க ஆரம்பித்தனர்.

சிவத்தின் அணியினர் தொடர்ந்தும் முன்னேறினர். ஏறக்குறைய இப்போ பிரதான முகாம் மூன்று பக்கங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டு விட்டது. போராளிகளின் எறிகணைகள் தொடர்ச்சியாக முகாமுக்குள் விழ ஆரம்பித்தன. போராளிகள் மீதான படையினரின் தாக்குதல்கள் பலவீனமடைந்ததிலிருந்தே சிவம் படையினர் குழப்பமடைய ஆரம்பித்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்டான்.

சக போராளிகளுக்கு மேலும் மேலும் கட்டளைகளை வழங்கி தாக்குதலை வேகப்படுத்தினான். போராளிகளின் எறிகணை வீச்சு மெல்ல மெல்ல முகாமின் பின்பக்கத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அதே நேரத்தில் கட்டளைத் தலைமையிடமிருந்து உடனடியாகவே முகாமுக்குள் இறங்கும்படி கட்டளை வந்தது.

ஏற்கனவே பல இடங்களில் வேவுப் போராளிகள் கம்பி வேலிகளை வெட்டி ஏற்படுத்தியிருந்த பாதைகளைத் திறந்துவிட போராளிகள் புற்றீசல் போல முகாமிற்குள் பாய்ந்தனர். சண்டை, கைகலப்பு எனச் சொல்லக்கூடிய வகையில் இரு பகுதியினருக்கும் இடையே நெருக்கமாக நடந்துகொண்டிருந்தது.

தாக்குதல்கள் மும்முரமாக இடம்பெற்ற அதேவேளையில் விநியோகப் போராளிகள் பாயும் ரவைகளுக்கு மத்தியிலும், வந்து விழும் குண்டுகளுக்கிடையேயும் சண்டையிடும் போராளிகளுக்கு ரவைகளையும் குண்டுகளையும் வழங்கிக்கொண்டிருந்தனர். அத்துடன் காயமடையும் போராளிகளையும் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் அவர்களே உடனுக்குடன் களத்தைவிட்டு வெளியெ கொண்டுவந்து சேர்த்தனர். சண்டையிடுவதை விட அதுவே பெரும் ஆபத்தான பணியாக இருந்த போதும் அவர்கள் சளைக்காமல் ஓடியோடி தங்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மருத்துவப் போராளிகள் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவியை மேற்கொண்டுவிட்டு, உதவிக்கு வந்த இளைஞர்கள் மூலம் பண்டிவிரிச்சான் மருத்துவ முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். சுந்தரத்துக்கு களமுனை நிலைமைகள் சற்று பயத்தை நெஞ்சில் இழையோட விட்ட போதிலும் அப்பணிகளைச் செய்வதில் ஒரு உற்சாகமும் நிறைவும் இருப்பதாகவே தோன்றியது.


செல்வமும் ஏனைய இளைஞர்களும் கூட ஆர்வத்துடனேயே பணியாற்றிக் கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணியளவில் இராணுவத்தினர் முற்றாகவே முகாமைவிட்டுப் பின்வாங்கி வெளியேறிவிடவே முகாம் முழுமையாக போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது.

இராணுவத்தினரால் கைவிடப்பட்ட துப்பாக்கிகள், ஐம்பது கலிபர்கள், பி.கே.எல்.எம்.ஜி.கள் என்பன சண்டையின் இறுதி நேரத்தின் போதே விநியோகப் போராளிகளால் களத்துக்கு வெளியே கொண்டுவரப்பட்டுவிட்டன.

இரு பீரங்கிகளையும் சற்றுச் சிரமப்பட்டே தளங்களிலிருந்து அகற்ற முடிந்தது. பொழுது விடிந்த போது சண்டை நடந்த பிரதேசத்தைவிட்டுப் போராளிகள் வெளியேறிவிட்டனர். வலையன்கட்டு முகாமிலிருந்து எறிகணைகள் வந்து அப்பகுதியெங்கும் வெடித்துக்கொண்டிருந்தன.

கிபிர்களும் இரு தடவைகள் வந்து குண்டுகளைப் பொழிந்துவிட்டுப் போய்விட்டன. போராளிகளின் ஒரு பகுதியினர் முகாமிலிருந்து மேலும் சிறிது தூரம் வலையன்கட்டுப் பகுதியை நோக்கி முன்னேறி காடுகளுக்குள் காவல் நிலைகளை அமைக்க ஆரம்பித்தனர். அள்ளப்பட்ட ஆயுதங்களைக் கீரிசுட்டானில் உள்ள போராளிகளின் முகாமுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் செல்வம், சுந்தரம் உட்பட்ட இளைஞர்கள் வெகு உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.

சுந்தரம் ஐம்பது கலிபரைத் தடவிப் பார்த்துவிட்டு, “மச்சான்.. இதால, எடுத்துச் சுட்டுப்பாக்க வேணும் போல கிடக்குது”, என்றான். செல்வம்

சிரித்துக்கொண்டே, “கொண்ணையைப் போல வெளிக்கிட்டால் நீயும் சுடலாம் தானே” என்றான் சுந்தரம்.

எதுவும் பேசவில்லை! ஆனால் மனதில் ஏதோ ஒரு வித சலனம் ஏற்படுவதை மட்டும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. சுந்தரசிவம் வீடு வந்து சேர மதியம் மூன்று மணியாகிவிட்டது. அன்று மதிய உணவு உண்ட பின்பே அவனுக்கு வீட்டுக்கு வரமுடிந்தது.

முள்ளிகுளத்தில் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த போது முருகர் வேட்டைக்காக கீரிசுட்டான் காட்டுக்குள் இறங்கிவிட்டார். அங்கு வெடிச்சத்தங்கள் கேட்க மிருகங்கள் கலைபட்டுக் கீரிசுட்டான் காட்டில் இறங்கும் என்பது அவரின் கணிப்பு. அவரின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. நல்ல தாட்டான் மரையொன்று அவரின் கண்ணில் பட்டுவிட்டது. ஒரே நெற்றி வெடியில் மரை தலையைக்குத்திக்கொண்டு அப்படியே விழுந்துவிட்டது.

முருகப்பரும் சுப்பையாவும் காவுதடியில் போட்டு மரையை வீதிக்குக் கொண்டுவந்தனர். அது அவ்வளவு இலகுவாக இல்லாத போதிலும் வேட்டை மிருகங்களைக் காவு தடியில் போட்டுக்கொண்டுவருவது அவர்களுக்குப் பழகிப்போன விஷயமாகிவிட்டது.

வீதிக்கு வந்ததும் முருகப்பர்,

ஒரு மரக்குத்தியில் இருந்து கொண்டு, “சுப்பையா.. பொடியளின்ர பேஸில போய் வாகனத்தைக் கொண்டு வந்து இதைக் கொண்டுபோகச் சொல்லு” என்றா். சுப்பையா… அவரின் முகத்தைப் பார்துவிட்டு,“அப்ப… எங்களுக்கு..?, என இழுத்தான்.

“டேய்… நாங்கள் நெடுகத்தானே தின்னிறம்.. பொடியள் இரவிரவாய் சண்டை பிடிக்கிறாங்கள்.. நாளைக்கு களை தீர வடிவாய்த்தின்னட்டன்” என்றார் அவர். சுப்பையாவும் எதுவும் பேசவில்லை. போராளிகளின் முகாமை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சுந்தரசிவமும் ஏனைய இளைஞர்களும் கூட அந்த மரை இறைச்சியுடனான சாப்பாட்டை முடித்துவிட்டே புறப்பட்டனர். அது ஒரு பெரும் வெற்றியெனவே எல்லோராலும் நம்பப்பட்டது. அப்படியே விட்டிருந்தால் அடுத்து கீரிசுட்டான் பின் பாலம்பிட்டி, தட்சிணாமருதமடு, மடு எனத் தொடர்ந்து இராணுவம் முன்னேற ஒரு வாய்ப்பான சூழல் ஏற்பட்டிருக்கும்.

இந்த முள்ளிக்குளம் முகாம் தகர்க்கப்பட்ட வெற்றிகரத் தாக்குதல் படையினரின் அந்த திட்டத்தையே தகர்த்துவிட்டது. சங்கரசிவத்தின் மனம் மட்டும், அந்தச் சந்தோஷத்தில் முழுமையாக இறங்க மறுத்தது. 

அவனின் நீண்டகால தோழனான கணேஸ் படுகாயமடைந்திருந்தான். அவனுக்கு எதுவும் நடந்துவிடுமோ என நினைத்த போது அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை.

ஆனால் அவன் மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவன் தப்பிவிடுவான் என சிவம் நம்பவில்லை.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(நாளை தொடரும்)