Breaking News

மாவையின் பேச்சுக்கு சிறிதரன் பதிலடி(காணொளி)

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது
என நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் தெரிவித்தார்.


அத்தோடு நின்றுவிடாமல் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் அது தொடர்பில் தாம் முதலமைச்சரை அணுகுவதற்கு (கையாள்வதற்கு) திட்டமிருப்பதாகவும் மிடுக்குடன் தெரிவித்திருந்தார்.  இந்த கையெழுத்து போராட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிறிதரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் கையொப்பமிட்டிருந்தமை சுமந்திரன் மாவை தரப்பினரை கடும் கோபம் கொள்ள வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் பல்கலை சமூகம் மற்றும் சிவில் அமைப்புகளால் நடாத்தப்பட்ட மாபெரும் பேரணியில் பேசிய மாவை சர்வதேச விசாரணையை தாம் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். (மேலுள்ள காணொளியில் மாவையின் இரு கட்ட பேச்சும் இணைக்கப்பட்டுள்ளது 1.46 ஆவது நிமிடத்தில்) இவ்வாறு சுமந்திரனைப்போல தேர்தலுக்கு முன்னர் வாக்கை பெறுவதற்காக சர்வதேச விசாரணை என வலுயுறுத்தி வாக்கை பெற்று வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் மாவை சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாகாணசபையில் 2ஆவது அதிகூடிய வாக்கினை பெற்ற(87,000) அனந்தி சசிதரன் அவர்களும் ஜெனீவா செல்லவுள்ளார்.



தொடர்புடைய முன்னைய செய்தி

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது சுமந்திரன் பாணியில் மாவை(காணொளி )

சர்வதேச விசாரணையே தேவை விக்கினேஸ்வரன் செவ்வி(காணொளி)