உண்மையான பயங்கரவாதி மகிந்தவா? பிரபாகரனா?
ஜனாதிபதித் தேர்தல் நடந்த 8ந் திகதி இரவு நாட் டில் இராணுவ சதிப்புரட்சி செய்வதற்கான முயற்சி யில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் அவரது சகோதரர்களும் ஈடுபட்டனர் என்ற செய்தி இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவது உறுதி என்ற தகவலை அடுத்து இராணுவச் சதித்திட்டத்திற்கு மகிந்த ராஜபக் தரப்பு தயாராகியது என்ற தகவலுக்குப் போதிய சான்றாதாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கள் உட்பட கொலை, போதைவஸ்து என்ற மிகப் பயங்கரமான குற்றச்சாட்டுக்கள் மகிந்தவின் ஆட்சியில் நடந்துள்ளதை தேர்தலுக்குப் பின்பு வெளி வரும் செய்திகள் உறுதி செய்கின்றன.
எனவே, மகிந்தவின் ஆட்சியில் நடந்த அட்டூழி யங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாட்டு மக்களின் விருப்பம்.இது ஒருபுறம் இருக்க, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இலங்கையில் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தமையால் அவரைப் பயங்கரவாதி என்று தென்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கூறி வந்தனர்.
2009ஆம் ஆண்டு வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது, பயங்கரவாதத்தை நானே ஒழித்தேன் என்று அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக் மார் தட்டினார்-வெற்றி விழாவும் எடுத்து இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவனாகத் தன் மைப் பிரகடனம் செய்தார்.
கடந்த ஜனவரி 8ந் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரவுப் பொழுதில் இந்த நாட்டில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்த மகிந்த ராஜபக் முயற்சி செய்தார் எனில் இந்த நாட்டின் உண்மையான பயங்கரவாதி யார்? என்ற கேள்வி எழும்.
விடுதலைப் புலிகளை ஒழித்து நாட்டில் ஜனநாகத்தைக் காப்பாற்றியது நானே! என்று மார் தட்டிய மகிந்த, ஜனநாயக நாட்டில்; ஜனநாயகமாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில்; மக்கள் அளித்த ஆணையை ஏற்க மறுத்தது ஏன்?
இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன் என்று பதவி ஏற்பில் சத்தியப்பிரமாணம் செய்த மகிந்த ராஜபக், அந்தச் சத்தியப் பிரமாணத்தை தானே உடைத்து நாட்டை இராணுவ ஆட்சிக்கு உட் படுத்த முயன்றார் எனில் மிகப் பெரிய பயங்கரவாதியாக யார் இருந்துள்ளார் என்ற உண்மையை உணர்வதில் கடினம் இருக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இந்த நாட்டின் சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர். பேரினவாத ஆட்சியாளர்களோடு தமிழர் வாழ முடியாது.
எனவே நாங்கள் தனித்துச் சென்று தனி அரசு அமைத்து எங்களை நாங்களே ஆளுவோம் என்ற அடிப்படையில், தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை பிரபாகரன் முன்னெடுத்தார். அந்தப் போராட்டம் சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைத்தனங்களால் எழுந்தது.
பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. எனவே பிரபாகரன் சிங்களத் தரப்புக்கு பயங்கரவாதியாக தோற்றம் அளித்திருந்தாலும் தமிழ் மக்கள் அவரை இனவிடு தலைக்காகப் போராடிய தலைவனாகவே பார்த்தனர். எனவே பிரபாகரன் ஒரு தரப்பிற்குப் பயங்கரவாதியாக இருந்தாலும் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்குத் தலைவனாக இருந்தார்.
ஆனால் நாட்டில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்த தயாரான மகிந்த ராஜபக்வின் முயற்சி யாருக்கானது? அதனை சிங்கள மக்கள் ஏற்பார்களா? ஆக, தனது குடும்ப ஆட்சியில் நடந்த மோசடிகளை; போதைவஸ்து கடத்தல்களை; இனந்தெரியாத படுகொலைகளை மறைப்பதற்காக இராணுவப் புரட்சிக்கு அவர் முற்பட்டார் என்பது உறுதியாகிறது.
மகிந்தவின் இந்த இராணுவச் சதித்திட்டம் அரங்கேறியிருந்தால் நாட்டில் எத்தனை அழிவுகள் நடந்திருக்கும்? எனவே இப்போது உண்மையான பயங்கரவாதி யார்? என்பது தெரிகிறதல்லவா?