ஊடகவியலாளர் வித்தியாதரன் மகிந்தவுக்கு ஆதரவு?
மூத்த ஊடகவியலாளரும் மலரும்இணையத்தள இயக்குனருமான என்.வித்தியாதரன் மகிந்தவுக்கு மறைமுக ஆதரவளிப்பதற்கு சம்மதித்திருப்பதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ப் பத்திரிகை உலகில் இதுவரை காலமும் தமிழ்த்தேசியம் தொடர்பில் தனது எழுத்து மூலம் தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருந்த மூத்த ஊடகவியலாளரான என்.வித்தியாதரன் விடுதலைப்புலிகளின் காலத்திலும் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் இனவிடுதலை தொடர்பிலும் காத்திரமான பங்களிப்பை ஆற்றியிருந்தார்.
போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் வடமாகாணத்துக்காக முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும் அதற்கான தகுதி தனக்கு இருப்பதாக தெரிவித்து சில நேர்காணல்களையும் அவர் வழங்கியிருந்தார். இருந்தும் தமிழரசு கட்சி மேலிடத்தில் அவருக்குரிய சாதகமான பதில் கிடைக்காத நிலையில் தொடர்ந்து பத்திரிகைத் துறையிலேயே பணியாற்றி வந்தார்.
சமாதான காலத்தில் மகிந்த சில தகவல்களை இந்த வித்தியாதரன் ஊடாகவே வன்னிக்கு அனுப்பி வந்ததாகவும் சில செய்திகள் முன்னர் வெளியாகியிருந்தது.
தற்போது மகிந்தவை விட்டு ஒவ்வொருத்தராக வெளியேறிவரும் நிலையில் தமிழர் தரப்பின் ஒருவரையாவது தனது பக்கம் அழைக்கும் மகிந்தவின் திட்டத்திற்கு வித்தியாதரன் நேரடியாக நாடியதாகவும் அதற்கு வித்தியாதரன் ஆதரவளிக்க முடியாது என்றும் தன்னாலான மறைமுக ஆதரவை வழங்குவதற்கு இணங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதுவரைகாலமும் தனது எழுத்து மூலம் தமிழ்த்தேசியத்தை பரப்பி வந்த வித்தியாதரன் தற்போது அரசியல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலோ அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு தொடர்பிலோ எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடுவதை தவிர்த்து வருகின்றார். அவரது இணையத்தளத்திலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த கருத்தையோ கட்டுரையினையோ அவர் இதுவரை வெளியிடவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
அத்தோடு தனது இணையத்தளம் மூலமாக மகிந்தவின் தேர்தல்கால வாசகமான ‘‘வெற்றியின் சின்னமே வெற்றிலைச் சின்னம்‘‘ என்ன வாசகத்துடனான விளம்பரத்தினையும் தனது இணையத்தில் தொடர்ந்தும் பரப்பி வருகின்றார். காசுக்கான விளம்பரமாக வித்தியாதரனால் காரணம் கற்பிக்கப்படலாம் இருந்தும் இதுவரைகாலமும் வித்தியாதரனுடன் நன்கு பழகிய காரணத்தை காட்டும் அவரது உறவு நண்பர் காசுக்காக தேசியத்தை விலைபேசும் வேலைகளுக்கு அவர் அடிமையானதில்லை என்றும் எதற்காக இந்த வித்தியாதரன் இவ்வாறான வேலைக்கு இணங்கினார் என்றும் கேள்வி எழுப்புகின்றார்.
அண்மையில் இவரால் வெளியிடப்பட்ட ஓர் நூலான ‘எழுத்தாயுதம்‘‘ என்ற நூல் வெளியீட்டிலும் த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை அழைத்திருந்தபோதும் ஈ.பி.டி.பி உறுப்பினரான தவராசாவினையே வாழ்த்துரைக்காக முதலாவதாக அழைத்திருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
கடந்த காலங்களில் உதயன் சுடரொளி பத்திரிகை மீதான பல தாக்குதல் சூத்திரதாரிகளாக அப்போதைய காலங்களில் வித்தியாதரனாலும் சரவணபவனாலும் சுட்டிக்காட்டப்பட்ட அதே ஈ.பி.டி.பி உறுப்பினரையே வாழ்துவதற்கு அழைத்திருக்கிறார் வித்தியாதரன் என்பதோடு மகிந்தவின் கட்டளைக்கிணங்க தேசியம் தொடர்பிலோ தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பிலோ அடக்கி வாசிப்பதையும் காணலாம்.